நல்ல செய்தி
"நல்ல செய்தி"
டிறிங்.... டிறிங்.... சதாசிவத்தின் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ" என்ற சதாசிவத்தின் குரலுக்கு பதில் குரல் 'ஹலோ..மிஸ்டர் சதாசிவம்!". 'ஓம்..ஓம்... நான்தான் கதைக்குறன். நீங்க யாரு கதைக்குறீங்க?" 'நான் எயர்போட்டிலிலுந்து கன்ரோலர் கதைக்குறேன். மிஸ்டர் ராஜேஸ், மிஸிஸ் ரூபினி இவங்க உங்க ரிலே~னா?" தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு சதாசிவம் 'ஆமா, ரூபனி என் மகள்தான். ராஜேஸ் அவட கஸ்பண்ட். ரெண்டுபேரும் இன்னைக்குத்தான் கனடா போறாங்க. நான்தான் அவங்கள எயர்போட்டுல விட்டுட்டு வாந்தேன். இன்நேரம் அவங்க பிளையிட்டுல போயிருப்பாங்களே.! ஏன்? என்ன? ஏதாவது பிரச்சினையா?" என்று ஒருவித தயக்கத்துடன் பதிலளித்தார். அதற்கு அங்கிருந்து 'சாரி சார், உங்க ரிலே~ன் போன பிளையிட் திடீரென காணாம போயிட்டு. அந்த பிளைட்டோட கனெக்~ன் ரீச் ஆகல. நாங்க பிளைட்ட தேடிக்கொண்டுதான் இருக்குறோம். நீங்க உடனே எயர்போர்ட்டுக்கு வாங்க. நீங்க அவங்கட போட்டாவ பார்த்து கன்போம் பண்ணணும்." என பதிலளித்து தொலைப்பேசியை துண்டித்தார். இதைக்கேட்டதும் சதாசிவம் 'ஐயோ... கமலா...! நம்ம மக போன பிளேன காணோமாம்.... எங்கள உடன வரட்டாம்... வா..வா... உடன போவம்..." என்று அலரியபடி மனைவி கலாவுடன் விமான நிலையத்திற்கு செல்ல தயாரானார். 'என்ன சொல்றீங்க...! என்ன நடந்தது?" என நிலைதடுமாறியபடி கமலா கேட்கிறாள். 'ஒன்றும் புரியல. அங்கபோய் பார்ப்பம்." என்று கூறியபடி காரில் ஏறுகிறார். 'டிரைவர், எயர்போர்ட்டுக்கு போப்பா." என தனது வாகன சாரதியிடம் கூறுகிறார். 'ஐயோ என் மகளுக்கு என்னாச்சோ தெரியலியே...!" என்று புலம்பியபடி கமலா வருகிறாள். கார் மின்னலாய் பறக்கிறது. சதாசிவத்தின் நினைவுகளும் பின்னோக்கி செல்கிறது. தனது இரண்டு கண்களையும் மூடிக்கொள்கிறார்.
சதாசிவத்திற்கு திருமணமாகி 6 வருடங்களாகியும் குழந்தை இல்லை. சொத்து, வீடு, வாசல் என்று அனைத்து செல்வங்கள் இருந்தும் குழந்தை செல்வம் இல்லையே என்ற ஏக்கம் சதாசிவத்திற்கும் கமலாவிற்கும் அதிகமாகவே இருந்தது. இதற்காக போகாத கோவில்களும் இல்லை. பிடிக்காத விரதங்களும் இல்லை. இறுதியில் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவெடுத்தனர். இதில் சதாசிவத்தின் அண்ணணுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இருப்பினும் சதாசிவமும் கமலாவும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். காரணம் சதாசிவத்தின் அண்ணணுக்கும் பெண் குழந்தை என்பதால்.
சதாசிவத்தின் மகள் ரூபினி. சதாசிவனின் அண்ணணின் மகள் லோச்சனா. இரு பெண்பிள்ளைகளும் ஒரே பாடசாலையில்தான் கல்வி கற்று வந்தார்கள். லோச்சனாவைவிட ரூபினி கெட்டிக்காரி. கல்வியில் மட்டுமின்றி அனைத்திலும் லோச்சனாவைவிட திறமைசாலியாகவே ரூபினி இருந்தாள். இதனால் அவர்களுக்குள் எந்தவித பாகுபாடும் இல்லை. ஆனால் சதாசிவத்தின் அண்ணணுக்கோ ரூபினியை கண்டாலே பிடிக்காது. எந்நேரமும் அவளிடம் வேலை சொல்வது. அவள்மேல் எறிந்துவிழுவதுமாகவே இருந்தார்.
இவ்வாறே நாட்களும் ஓடின. இருவரும் கல்வியை முடித்துவிட்டார்கள். லோச்சனா மூத்தவள் என்பதால் அவளுக்கு திருமணம் செய்ய முடிவானது. லோச்சனா அழகானவள், அமைதியானவள், பண்பானவள். அவளுக்கேற்ற நல்ல மாப்பிள்ளை கிடைந்தான். திருமணமும் நல்லவிதமாக முடிந்தது. லோச்சனாவிற்கு வீட்டை சீதனமாக கொடுக்க வேண்டும் என்று கூறி சதாசிவத்தை வேறு வீடு வாங்கி போகச் சொன்னார் சதாசிவத்தின் அண்ணன். சதாசிவமும் எந்தவித தயக்கமும் இல்லாமல் வேறு வீட்டை வாங்கி அங்கு குடிபுகுந்தார். ஆனால் சதாசிவத்தின் அண்ணன் மட்டும் லோச்சனாவுடனேயே இருந்துகொண்டார்.
ஒருவருட முடிவில் ரூபினுக்கும் நல்ல வரண் வந்தது. மாப்பிள்ளை இன்ஞினியர். கைநிறைய சம்பளம். நல்ல பையன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால் வழமைபோல சதாசிவனின் அண்ணணுக்கு மட்டும் பிடிக்கவில்லை. காரணம் தன் மாப்பிள்ளையைவிட இந்த மாப்பிள்ளை வீட்டார் வசதி கூடியவர்கள் என்பதால். ஆனால் அவர் அதை வெளிக்காட்டவில்லை. திருமணம் நடைபெற்று சில மாதங்களின் பின் ரூபினியின் கணவன் ராஜேஸிற்கு வெளிநாட்டு கன்ரெக்ட் ஒன்று கிடைத்தது. ஆகவே ராஜேஸ{ம் ரூபினியும் வெளிநாடு சென்றனர். இவர்கள் சென்று சில மாதங்களின் பின் லோச்சனாவிற்கு உடல்நிலை மோசமானது. பல பரிசோதனைகளின் பின் அவளுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தார்கள். இத்தகவலை கேள்விப்பட்ட ரூபினியும் அவரது கணவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தனர்.
'லோச்சனாவிற்கு இரண்டு கிட்னியும் பெயிலாயிடிச்சாம். உனனே ஆபரே~ன் பண்ணணுமாம். எனக்கு என்ன செய்றதுனே தெரியல" என்று சதாசிவத்தின் அண்ணன் ராஜேஸிடம் புலம்பிக்கொண்டிருந்தார். உடனே ரூபினி 'பெரியப்பா நான் என்ட கிட்னிய தாறன். அதுக்கு என்ன செய்யனுமோ அத செய்க. ஒன்னும் யோசிக்காதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்." என்று கூறினாள். இதைக்கேட்டதும் சதாசிவத்தின் அண்ணன் சந்தோ~ப்படுவதா இல்லை இதுவரை ரூபினியிடம் தான் நடந்கொண்ட விதத்தை நினைத்து வெட்கப்படுவதா என்று தெரியாமல் கண்கலங்கி நின்றார். உடனே ராஜேஸ் 'என்ன மாமா யோசிக்குறீங்க...! வாங்க நாம போய் டொக்கடர பார்ப்பம்." என்று அவரை அழைத்துச் சென்றான். சிகிச்சையும் நல்லபடியாக நடைபெற்றது. இரண்டு மாதங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் வெளிநாடு செல்ல ஆயத்தமானர்கள் ராஜேஸ{ம், ரூபினியும். இப்போது அவர்கள் பயணித்த விமானம்தான் காணாமல் போயிருக்கிறது.
மின்னல் வேகத்தில் பறந்த வந்த வாகனம் தன் பயணத்தை நிறுத்தியது. தனது நினைவுகளிலிருந்து மீண்டு வந்தார் சதாசிவம். தனது கண்களை திறந்து பார்த்தார். எயர்போர்ட் வாசலில் மக்கள் கூட்டமாக திறன்டிருந்தனர். அனைவரும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள். தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்ததோ..! ஏது நடந்ததோ...! என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தனர்.
காரை விட்டு இறங்கினார் சதாசிவம். அங்கு தனக்கு முன்பே தன் அண்ணன் அங்கு வந்திருப்பதை கண்டார். 'சதாசிவம் ஒண்ணும் கவலப்படாத. என் மகளுக்கு எதுவும் ஆகாது. அவள் நல்ல மனசுக்கு அவளுக்கு ஒண்ணுமே ஆகாது." என்று சதாசிவத்தின் அண்ணன் கூறினார். அண்ணன் ரூபினியை தன் மகள் எனக் கூறியதைக் கேட்டதும் சதாசிவத்திற்கு கொஞ்சம் ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அந்நேரம் லோச்சனாவும் அவளுடைய கணவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
உள்ளே பொலிஸாரும், விமான அதிகாரிகளும் தேடல் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே உறவுகள் காத்திருக்கின்றன.