பயம்
கல்லூரி முடிந்து நகரப் பேருந்து நிலையத்தை அடைய அன்று தாமதமாகி விட்டது இருள் கவியத் தொடங்கியிருந்தது .ஊருக்கு செல்லும் 6.30 மணி பஸ் சென்று விட்டிருந்தது .என்ன தைரியத்திலோ வேறு பஸ் ஏறி ஊர் விலக்கில் இரங்கி ஆயிற்று .இனி ஒரு மைல் நடக்க வேண்டும். விலக்கில் தெரு விளக்கின் மங்கிய ஒளி. இனி ஒரு மைல் தூரத்திலும் விளக்குகள் இல்லை .பயம் தொற்றிக் கொண்டது .விலக்கில் தனியாக நிற்கவும் முடியாது.மனது வேகமாக துடித்தது .இனி தனியே நடக்கத் தான் வேண்டும் .வேறு வழியில்லை.என்ற எண்ணம் வந்ததும் உடல் விறைப்பாக முகம் உணர்ச்சியற்று கால்களில் வேகம் ஏறி நடக்கத் தொடங்கினாள் சுமதி .
குண்டும் குழியுமான தார் சாலையின் வலது புறம் பத்து அடி தாழ்வில் அமைதியாக பழையாறு ஓட இடப்புறம் வயல்களும் தென்னந்தோப்புகளும் இருளை வாரி அப்பியிருந்தது . ஆற்றிலிருந்து வயலுக்கு நீர் செல்லும் மடையில் தண்ணீர் ஒழுகும் சப்தமும் பூச்சிகளின் ரீங்காரமும் காற்றில் தென்னை ஓலைகளின் சலசலப்பும் மனதில் திகில் நிறைத்தது. தொட்டு விடுவதைப் போல் இருளில் தலை சாய்த்து ஆடும் தென்னை மரங்கள் கால்களில் வேகம் கூட்டியது .ஓட்டம் போன்ற நடையினூடே சுமதியின் மனதில் வேறு ஒரு பயமும் வந்து தொற்றிக் கொண்டது.
பாதி தூரத்தில் சாலையின் இடது புறம் வயல்களின் காவலுக்காய் ஒன்றரை ஆள் உயரத்தில் முகமெங்கும் சிவப்பு நிற மஞ்சனை சார்த்தி வெள்ளை நிற வேட்டி கட்டி மாட விளக்கின் வெளிச்சத்தில் மிரட்டிக் கொண்டு நிற்பார் சுடலை மாட சாமி . இரவிலே தான் உலா வருவார் .வெற்றிலையும் பாக்கும் மட்டுமே அவருக்கு படைப்பதால் அவ்வழி வருபவரை நிறுத்தி சுண்ணாம்பு கேட்பார் .இல்லை என்று சொன்னால் என்ன செய்வார் ?தெரியவில்லை இது வரை சுமதி இது பற்றி கேட்டதுமில்லை .சாலை சிறிதாய் வளையும் இடத்தில் தான் சுடலை மாடன் நிற்கிறார் .அந்த இடத்தை நெருங்கும் முன்பே அவர் உருவம் தெரிய கால்கள் தானே வேகம் குறைந்து துவள ஆரம்பித்தது .இதயம் வாய் வழி வெளியேற முயற்சிக்க கைப்பையை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்து ஒடலானாள் சுமதி .அவர் பக்கமே திரும்பாமல் அவரைக் கடந்தும் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது சாலையில் எங்காவது தெரு நாய்கள் கிடந்தால் அவை துரத்தலாம் என்று .ஓட்டம் நிறுத்தி வேக வேகமாய் நடந்தாள் .பின்னாலே சுடலை மாடன் வருகிறாரா என்று பார்க்கும் துணிவில்லை .
ஐயோ அது என்ன !யாரோ ஊரில் இறந்து விட்டார்கள் போல .ஆற்றின் அக்கரையில் சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருக்கிறது .யாரோ தெரியவில்லை .ஆனால் பேயாய் உலா வரலாம் .காக்க காக்க கனக வேல் காக்க வாய் சப்தமாய் பாட ஆரம்பித்தது உதறலுடன் . இதயம் என்னை விட்டு விடு என்று கெஞ்ச ஆரம்பித்தது. தலை சுற்றுவது போல் தோன்ற தான் ஊர் எல்லை வந்து விட்டோம் என்றாலும் எல்லை தெய்வம் மேலான்கோடு நீலியை தாண்டிச் செல்லும் துணிச்சல் கால்களுக்கு இல்லை என்று மனசு சொல்லிற்று .நீண்டு சிவந்த நாக்குடன் கையில் ஒரு குழந்தை கால்களின் அடியில் ஒரு குழந்தை என அளியிட்ட கதவுகளின் உள்ளே ஊசலாடும் தூக்கு விளக்கு வெளிச்சத்தில் அந்த உக்ர ரூபத்தை தனியாப் பார்க்க முடியாது .நீலியை கும்பிடாது கடப்பவரை அது ஆற்றில் தள்ளி விட்டு விடும். கடந்து விட்டால் ஐந்து நிமிட நடையில் ஊர் எல்லை வந்து விடும் .ஆனால் முடியாது .சாலையின் நடுவிலேயே நின்று விட்டாள் சுமதி . உடல் வேர்வையில் குளித்திருநதது.
அப்போது பின்னாலிருந்து மெல்லிய வெளிச்சம் தெரிய சட்டென்று திரும்பிய சுமதிக்கு உயிர் வந்தது போல் இருந்தது. ஒரு சைக்கிள் வெளிச்சம் . சைக்கிள் சுமதியைக் கடந்த போது சுமதிக்கு தெரிந்தது அது அவளுடன் படிக்கும் பாபு என்று .முழு தைரியமும் வந்தது அவளுக்கு. பாபு தைரியமானவன் .சாமி பூதம் எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று வாதிடுபவன் .இதனாலேயே கல்லூரியின் ஹீரோவாய் வலம் வருபவன் .சைக்கிள் அவளை கடந்து விட்டதால் சப்தமாய் “பாபு நில் நானும் வருகிறேன் .பாபு பாபு “என்று அழைத்து கொண்டே ஓடத் தொடங்கினாள். ஆனால் சைக்கிள் நிற்காது இன்னும் வேகம் எடுத்தது .நிமிடங்களில் ஆற்றில் ஏதோ வீழும் சப்தமும் கேட்டது .இப்போது சுமதிக்கு பயம் போயே போயிருந்தது .அவள் நீலியை கடந்திருந்தாள் .
சப்தம் கேட்ட இடம் வந்ததும் சாலையில் நின்றவாரே யாராவது ஆற்றில் விழுந்து விட்டீர்களா .நான் சுமதி என்று குரல் கொடுக்க பாபு தண்ணீர் சொட்ட சொட்ட சைக்கிளை இறுகப் பிடித்தவாறு மேலே ஏறி வந்தான் .என்ன ஆயிற்று சப்பாத்தில் சைக்கிள் இரங்கி விட்டதா ?என்று கேட்டதும் நடுங்கிய குரலில் “இல்லை இல்லை நீலியை கடக்கும் போது நீலி நானும் வருகிறேன் என்று என் பின்னாலேயே துரத்தி கொண்டு வந்தது . நான் நிற்காமல் வேகமாக வந்ததால் என்னை சப்பாத்தில் தள்ளி விட்டு விட்டது . இரும்பை கண்டா நீலி பக்கத்தில் வராது .அது சைக்கிளை தள்ளி விடப் பார்த்தது .அது தான் நான் இறுக்கமா சைக்கிளை பிடிச்சிருக்கேன் .நீ தனியாகவா வருகிறாய் ?இரும்பு சாவி ஏதாவது கையில் வச்சுக்கோ .இப்படி பயம் இல்லாம வராதே .நீலி பொல்லாதவ” என்றவாறு நடந்த அவனிடம் விடை பெற்று வீடு நோக்கி நடந்தாள் சுமதி .அவளுக்கு புரிந்தது .தான் சாலையின் நடுவில் நின்று கைப்பையை மார்போடு அணைத்தவாறு அவனை அழைத்ததை குழைந்தையோடு நிற்கும் நீலியாய் அவன் மனம் எண்ணியிருக்கிறது என்று. வாசலிலேயே காத்திருந்த பாட்டி “கன்னிப் பொண்ணு தனியா இப்படி இருட்டில நடந்து வாரியே காத்து கருப்பு அடிச்சா என்ன ஆகும் .போய் குளிச்சு திருநீர் பூசிக்கோ.கொஞ்சமும் மனசில் பயமே இல்லே!” என்று கடிந்து காலையில் சூடிச் சென்ற மல்லிகைப் பூவை தலையில் இருந்து எடுத்து தூர எறிந்தாள் . அம்மாவோ காத்து கருப்பு இல்லேன்னாலும் கள்ளப் பயல்களுக்கு பயப்படணும் என்று கடுத்த குரலில் ஆணையிட்டாள்.
மறுநாள் காலையில் ஊரெல்லாம் பேச்சாகியிருந்தது.பாபுவை நீலி அடித்து விட்டது .ரொம்ப நாளைக்கப்புறம் ஊரில் நீலி தன கை வரிசையைக் காட்டியிருந்தது.சுமதி ஓடிச் சென்று பாபு வீட்டில் பார்க்க பாபு நெற்றியில் ஈரத் துணியுடன் கண்களை மூடி ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான் .அவன் அம்மா தான் சொன்னாள் .இரவெல்லாம் ஒரே பிதற்றல் .பயங்கர காய்ச்சல் .நீலி அடித்திருக்கிறது .கொண்டு போய் மந்திரித்து விட்டு வர வேண்டும் என்று .ஒன்றும் பேசாமல் மௌனமாய் சுமதி வெளியே வர ஊரில் நீலி பயம் அழுத்தமாய் வலம் வந்தது . நீலியைப் பற்றிய கதைகள் ஏராளம் உலா வந்தன .நீலியை குளிர்விக்க கொடை விழா நடந்தது . அருள் வந்து ஆடிய சாமியாடி நீலி பயங்கர கோபத்தில் இருப்பதாகச சொன்னார் . மேலாங்கோட்டு நீலி மீண்டும் எல்லோர் மனதிலும் பயமாய் உறைந்தாள் .ஆனால் சுமதியோ அதன் பின் தனியே அவ்வழி நடந்த போதெல்லாம் நின்று நிதானமாய் நீலியைப் பார்க்கிறாள் .தன்னைத் தானே பார்ப்பதைப் போல் .நீலியின் மேல் ஒரு ப்ரியம் வர ஆரம்பித்தது சுமதிக்கு ........... ....... . .....