திருடன் - ஒரு பக்க கதை
"இந்தாங்க.. நாம ஊர்ல இல்லாத இந்த பத்து
நாளும், நமக்கு வந்த பேப்பர்ஸ்.
எதிர் வீட்டு திருமால் சார் கொடுத்தார்...!'
-
"என்ன வைதேகி! ரொம்பப் பாதுகாப்பான
அப்பார்ட்மென்ட்டுன்னு புதுசா இங்க குடிவந்த! பாரு...
பத்து நாளும் நம்ம வீட்டுக்கு திருடன் வந்திருக்கான்!'
-
"என்னங்க சொல்றீங்க...?'
-
"அடுத்தவங்க பேப்பரை அனுமதியில்லாம படிக்கறதும்
திருட்டுதானே...!'
என்றபடி வாக்கிங் கிளம்பிச் சென்றார் கண்ணன்.
-
எதிரே தென்பட்டார் அந்த திருடன் - இல்லை திருமால்.
-
"மிஸ்டர் கண்ணன்! ஒரு நிமிடம்...! இனிமேல் வெளியூர்
போகும்போது, பேப்பர் போட வேண்டாம்னு சொல்லிடுங்க.
ஏன்னா.. நீங்க எத்தனை நாளா ஊர்ல இல்லைங்கிறதை,
வாசல்ல விழற பேப்பரே விளம்பரம் பண்ணிடும்.
யார் யாரோ வந்து போற அப்பார்ட்மென்ட்! நோட்டமிட்டு,
வீட்டுக்கதவை உடைச்சாலும் உடைச்சிடுவானுங்க!
அதான்... இந்த பத்து நாளும் உங்கள் பேப்பரை நான்
எடுத்து வச்சிட்டேன்...!' என்ற திருமாலை நன்றியோடு
ஏறிட்ட கண்ணன். "ச்சே... நம்ம வீட்டைப் பாதுகாத்த
இவரைப் போயி திருடனா நினைச்சிட்டேனே...!' என
வருத்தப்பட்டார்.
-
--------------------------------
- கோவை நா.கி. பிரசாத்
நன்றி: குமுதம்