கரிசல் மண்ணில் ஒரு காவியம் 22
கரிசல் மண்ணில் ஒரு காவியம்.22
அத்தியாயம்.22
கமலா பள்ளி முடிந்து வந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.வீட்டு வாசலில் இதுவரை வீட்டுப்பக்கம் வந்து போகாத அன்னியச்செருப்புகள் அணிவகுதுக்கிடக்கின்றன.காலணிகள் கம்பீரமாகக் காட்சியளிப்பதைப் பார்த்தால் பட்டணத்தில் இருந்து வந்ததுபோல் நவநாகரிகமாகத் தோன்றின.வசதி படைத்தவர்கள்தான் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் பாதுகைகள் காட்டிய முகவரிகளில் அவள் புரிந்துகொண்டு மெதுவாக வியப்போடு தயங்கித் தயங்கி வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறாள் கமலா.
வீட்டுக்குள் கூடம்(வரவேற்பறை) கலகலப்பாக இருக்கின்றது.ஆச்சியின் பேச்சு அத்தனை பேச்சுக்களையும் மீறி அமர்க்களமாய் ஒலிக்கிறது.அனைவரின் கேள்விகளுக்கும் ஆச்சிதான் பதில் அளித்துக்கொண்டு இருக்கிறாள்.அப்போது கமலாவின் வருகை அத்தனை பேர்களின் பார்வைகளையும் அவள்பக்கமாக ஈர்க்கிறது.”வந்துவிட்டாள் வந்துவிட்டாள்” என்று அவளையே எதிர்பார்த்துக் காத்திருந்த அனைவரின் கண்களும் அவள் மேல் படுகின்றன.கடலலை ஓய்ந்த நிசப்தம் நிலவுகிறது.
வீட்டின் உள்ளறைக்குள் நுழைகிறாள் கமலா.கமலாவின் தாயார் வேகமாக எழுந்து கமலாவிடம் வருகிறாள்.”இவங்கெல்லாம் யாரும்மா?”எனக் கேட்கிறாள் கமலா.
“நீ முதல்ல ஒரு நல்ல சேலை எடுத்துக் கட்டு.அவங்க உன்னையத்தான் பாக்க வந்திருக்காங்க”
“என்னையவா?......எதுக்கு?
“அடியே அவங்க உன்னையப் பொண்ணு பாக்க வந்திருக்காங்க.வா வா சீக்கிரமா ஒரு நல்ல சேலையக் கட்டிக்கிட்டு தலவாரிப் பூ வச்சுக்கிட்டு வா”என அவசரப் படுத்துகிறாள் தாய்.
என்னம்மா இதெல்லாம்.?யார்ட்டக் கேட்டு இதெல்லாம் பண்றீங்க.?நான்தான் படிக்கணும்ன்னு சொல்ரேன்ல்ல.அப்புறம் ஏங் இப்படியெல்லாம் பண்றீங்க?எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு நாங் உங்ககிட்ட கேட்டேனா?எனக்கு இப்போக் கல்யாணமெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.முதல்ல அவங்கள மரியாதையாப் போகச்சொல்லு.”எனத் தாயிடம் வாக்கு வாதம் செய்து கொண்டிருக்கிறாள்.அப்போது கமலாவின் அப்பாவும் அங்கு வருகிறார்.
“என்னம்மா இங்க பேச்சு.சீக்கிரம் ரெடியாயிட்டு வாம்மா.அவங்க உனக்காகத்தான இவ்வளவு நேரமாக் காத்துக்கிட்டு இருக்காங்க.மணி ஆகுது.அஞ்சர மணிப்பஸ்ஸுக்கு அவங்க போகனும்ல்ல.அந்த வண்டியவிட்டா அப்புறம் அவங்க எப்படிப் போவாங்க.அதுதான நம்ம ஊர்ல கடைசி பஸ்ஸு”என அவசரப்படுகிறார் அவளுடைய அப்பா.
“அப்பா.ஆச்சிக்கும் அம்மாவுக்குந்தான் அறிவு இல்லையின்னா.நீக்களுமாப்பா?நான் படிக்கிறேன்னுதான் உங்களுக்குத் தெரியும்மில்ல.அது ஏம்ப்பா உங்களுக்கும் புரியல.”
‘அதெல்லாம் சரிதாம்மா.ஏதோ அவங்க வந்துட்டாங்க.வந்ததுக்கு மரியாதை கொடுக்கணும்ல்ல.மத்தத எல்லாம் நாம அப்பறமாப் பேசிக்கலாம்.இப்ப ஒரு மரியாதைக்காக சும்மாதான்.கல்யாணம் பேசி முடிச்சிறப் போறமா என்ன?அதெல்லாம் உன்னோட சம்மதம் இல்லாம அப்பா எதுவுமே பண்ணமாட்டேன்.சொன்னாப் புரிஞ்சுக்கோம்மா!”எனத் தந்தை சமாதானம் செய்தார்.
“எல்லாரும் அங்க என்ன பண்ணுறீங்க.நேரமாவுதுல்ல.சீக்கிரம் அவள வரச்சொல்லுங்க.”என ஆச்சி அவசர மணி அடித்தாள்.
“எல்லாம் இந்தக் கெழவி செய்யுற வேல அவங்கெல்லாம் போகட்டும் அவள என்ன பண்ணுறேன்னு பாரு”என ஆச்சியைத் திட்டிக்கொண்டே ஏதோ ஒரு சேலைய எடுத்து சுற்றிக்கொண்டாள் கமலா.பூச்சரத்தை எடுத்து கமலாவுக்குச்சூட்டினாள் கமாலாவின் தாயார்.
“சரி வா”என கமலாவை அழைத்துக்கொண்டு வந்தாள் தாயார்.கமலா வந்து அமர்ந்தாள்.வந்தவர்களின் பார்வை முழுவதும் கமலாவின் மீது படர்ந்தது.வந்தவர்களில் ஒருவர் “இதோ பாரம்மா இவர்தான் மாப்பிள்ளை.இவர் பி.ஏ.படிச்சுட்டு தாலுகா ஆபிசுல குமாஸ்தா வேல பாக்குறாரு.கூடிய சீக்கிரம் தாசில்தார் ஆயிருவாரு”என மாப்பிள்ளையை அறிமுகம் செய்து வைத்தார்.
கமலாவும் பார்பதுபோல் பார்த்து.தலையைக்குனிந்து கொண்டாள்.கமலாவின் சங்கடத்தைப் புரிந்துகொண்ட கமலாவின் தந்தை.”சரிம்மா கமலா நீ உள்ளே போ”என கமலாவிற்கு விடையளித்தார்.
“நல்லதாப்போச்சுடா சாமிகளா”என எழுந்து உள்ளே போய் தன் பொய்யான பொண்ணு வேடத்தைக் களைந்து எறிந்தாள் கமலா.
“சரிங்க நாங்கள் வருகிறோம்.மத்தத அப்புறமா பேசிக்கலாம்.உங்க ஊர்ல இந்த வண்டிய விட்டா வேற வண்டி கிடையாது.நாங்க புறப்படுறோம்.”என வணக்கம் செய்து மாப்பிள்ளைவீட்டார் புறப்பட்டுப் போகிறார்கள்.அப்புறம்தான் ஆரம்பம் ஆகிறது.ஆச்சிக்கும் கமலாவுக்கும் மகாபாரத யுத்தம்.
“ஏய் கெழவி இதெல்லாம் உன்னோட வேலதானா.ஒனக்கு வேற வேலையே இல்லையா?பொழுது போகலின்னா காட்டுப்பக்கம் போயி களை எடுக்குறவங்கள மேய்க்க வேண்டியதுதான.ஏங் என் உசுர எடுக்குற?இன்னுமே இந்த மாதிரி ஏதாவது அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுனயின்னு வச்சுக்கோ அப்புறம் நாங் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”எனத் தன் அஸ்திரங்கள் ஒவ்வொன்றாக ஆச்சியின் மீது ஏவுகிறாள் கமலா. .
“என்னடி பண்ணுவ?நாங் உறங்கும்போது கத்திய எடுத்து எங்கழுத்த கரகரன்னு அறுத்துக் கொன்னுருவியா?”என சரிமல்லுக்கு சவால் விடுகிறாள் ஆச்சி
”அப்படிச்செஞ்சா அது கொலைக்கேஸ் ஆயிருமே......ஒரே அடியா மூச்சப்புடிச்சு அமுக்கிக் காலி பண்ணிடுவேன்.... அப்புறம் வாயுக்குத்துல வாயப்பொளந்திட்டான்னு ஊரக்கூட்டி ஒப்பாரிவச்சு சுவர்ல சாதிவச்சுப் பொணம் ஆக்கிருவேங்.”என தன் உள்ளக்குமறலைக் கொட்டினாள் கமலா.
“அடி கொலகாரச்சிரிக்கி நீ செஞ்சாலும் செய்வேடி.ஏண்டா அய்யாசாமி பாத்தியா ஓம் மகா எப்படியெல்லாம் பேசுறான்னு”எனத் தன் ஆதரவாக மகனை இழுக்கிறாள் ஆச்சி.
“ஏம்மா அவதான் சின்னப்பொண்ணு.நீ பெரிய மனுசிதான,....அவகூடப்போயி இப்படி சரிமல்லு கட்டுறயே......பேசாம இரும்மா...எது எது எப்போ எப்போ நடக்கணுமோ அது அது அப்ப அப்ப நடக்கும்.”என ஆச்சியை சமாதானம் செய்கிறார் மகன்.
“ஓகோ....உங்களுக்கு எல்லாம் நாங் பேசுரதுதாங் தப்பாத் தெரியுதோ?இப்பச்சொல்ரேங் எல்லாரும் கேட்டுக்கோங்க வருற ஆவணிக்குள்ள இந்தச்சிரிக்கியை எவங் கையலயாவது புடிச்சுக்கொடுத்து இந்த வீட்டவிட்டு விரட்டல நான் இந்த ஊருக் கிராம முன்சு சுந்தரம்பிள்ளை பொண்டாட்டி இல்ல....அடியே பாக்கலாண்டி ...நீயா ..நானான்னு ..ஒரு கை பாக்குரேண்டி”எனச்ச்பதம் செய்கிறாள் ஆச்சி.
“ஐயோ! ஏன்தான் இப்படி என்னக்கொல்றீங்க.நாங் படிக்கணும்.நாங் படிக்கணும்.என்னயப்படிக்க விடுங்க .....என்னயப்படிக்கவிடுங்க.....எனக்குக் கல்யாணம் வேண்டாம்....எனக்குக் கல்யாணம் வேண்டாம்.....எனக்கும் கனவுகள் இருக்கு.எனக்கும் கடமைகள் இருக்கு.எனக்கும் உரிமைகள் இருக்கு....எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு....எனக்கும் வாழ்வுன்னு ஒண்ணு இருக்கு.....எனக்கும் உணர்வுகள் இருக்கு......எனக்கும் லட்சியங்கள் இருக்கு.....எனக்குக் கல்யாணம் வேண்டாம்......எனக்குக் கல்யாணம் வேண்டாம்.....”என ஓலமிட்டு அலறித்துடித்து படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்து ஓவெனக் கதறி அழுதாள் கமலா.
அலறல் சத்தம் கேட்டுப் பதறித் துடித்து ஓடி வந்து கமலாவிடம்.அவளுடைய தாயும் தந்தையும் அவளை வாரி அனைத்துக் கொண்டு கவலையோடும் வியப்போடும் விசாரிக்கிறார்கள்.
“என்னம்மா கமலா ...என்னாச்சு.....ஏதாவது கனவு கண்டியா?சொல்லும்மா சொல்லு.”என அப்பாவும் அம்மாவும் பதட்டத்துடன் பரிவோடு கேட்கிறார்கள்.அப்போதுதான் கமலாவுக்குப்புரிகிறது.அவள் கண்டது கனவு என்று.கனவு நிசமாகிவிடுமோ எனும் அச்சத்தில் அவள் தன் தாயின் மடியில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.அவளின் பயத்தைப் புரிந்துகொண்ட தந்தை “இந்தா பாருமா கமலா நீ எங்களுக்கு ஒரே பொண்ணு.எங்களோட கனவே நீதாம்மா.நீ எம்புட்டுப் படிக்கணுமோ நீ அம்புட்டுப் படிம்மா.இனிமே இந்த வீட்ல நீ என்ன நெனக்கிறியோ அதுதாங் நடக்கும்.உன்ன மீறி எதுவும் நடக்காதும்மா.இனிமே நீ இப்படிக் கண்டத நெனச்சு மனசுல கவலப்படக்கூடாது தெரிஞ்சதா?பயிதியக்காரப் பொண்ணே ஏண்டா இந்த வீணான பயம்.நீ தாண்டா இந்த வீட்டு எசமானி.”என கமலாவிற்கு உறுதியான சொற்களால் அவளை மீண்டும் பழைய நினைவிற்கு மீட்டெடுத்து தன் மார்பில் அணைத்து அவளுடைய வழியும் விழிகளைத் துடைத்துத் தன் விழிகளையும் துடைத்துக்கொண்டார் உலகின் உணர்வுகளைப்பற்றிப் படித்தறிந்த அந்த அன்புத் தந்தை.
(தொடரும்.)
கொ.பெ.பி.அய்யா.`