அப்புவிற்கு தாத்தா சொன்ன கதை

"தாத்தா .. தாத்தா" என்று குரல் கொடுத்தவாறு கதவைத் தட்டினான் அப்பு. எழுந்து சென்று கதவைத் திறந்ததும், ஓடிச் சென்று வழக்கம் போல் தாத்தாவின் கட்டில் மீதேறி உட்கார்ந்து கொண்டதும்,

"ஏன் தாத்தா கதவை சாத்தி வெச்சிருந்தீங்க ..நான் வருவேன்னு தெரியாதா உங்களுக்கு" என்று கேட்கவும்,

"கதவு திறந்து தாண்டா இருந்திச்சு. ஃபேன் காத்தடிச்சபோது "டமார்" ன்னு சாத்திக்கிடுச்சு. அவ்வளவு தான்"

"இன்னிக்கு உங்ககிட்ட படுத்துண்டு தூங்கப்போறேன். சரியா"

"சரிடா என் செல்லம் .. படுத்துக்கோ" என்று சொல்லி அவனைப் பக்கத்தில் படுக்க வைத்தேன்.

"எப்பவும் ஏன் தாத்தா நீங்க டீ.வீ. ல நியூஸ் பாத்துக்கிட்டு இருக்கீங்க .. மூடிவையுங்க. என்கிட்டே பேசுங்க".

"அது தான் பேசிக்கிட்டு இருக்கேனே"

"என்னப் பாத்துகிட்டே பேசுங்க" அப்பத்தான் தூங்குவேன்".

"சரி” என்று சொல்லி டீவீயை நிறுத்தி வைத்தேன்.

"தாத்தா .. ஒரு கதை சொல்லுங்க".

"ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்திச்சாம்...".

"அந்தக் கதை வேண்டாம் ..ஒரே கதையை எத்தனை தடவ சொல்லுவீங்க, தாத்தா .. வேற கதை சொல்லுங்க".

"அப்பு .. என் செல்லம், நீ ராத்திரி தூங்கும் போது உனக்கு உங்க அம்மா கதை சொல்லுவாங்களா"

"இல்லை .. அம்மாட்ட கதை சொல்லுன்னா அப்பாகிட்ட போயி கேளு ன்னு சொல்லுவாங்க".

"அப்பா கதை சொல்லுவாரா"

"எப்பவாது கோபம் இல்லாம இருந்தா சொல்லுவாரு. இல்லைன்னா "பட்"டுன்னு அடிச்சுப்புடுவாரு. நான் கொஞ்ச நேரம் அழுதுகிட்டே தூங்கிடுவேன்".

"ஓஹோ .. அதுவா சமாசாரம் .. அது தான் தினமும் ராத்திரி உன் அழுகை சத்தம் கேக்குதோ"

"ஆமாம் .. நீங்க மட்டும் தான் தாத்தா .. கதை சொல்லுன்னதும் கதை சொல்றீங்க. அடிக்கறதில்ல. திட்டறதில்ல. அதனால எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்" என்று சொல்லி ஒரு முத்தம் கொடுத்தான்.

"சரி .. கதையை கேளு" என்று சொல்லி, "ஒரு ஊர்ல ஒரு சுண்டெலி இருந்தது" என்று சொன்னதும்

"ஏன் தாத்தா சுண்டெலியும் சிங்கமுமா .. அதையும் நீங்க சொல்லியாச்சு" என்றான்.

"இது வேற கதை .. சுண்டெலியும் யானையும்"

"அப்படியா .. அப்ப சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு, கால்களைத் தூக்கி தாத்தாவின் வயிற்றின் மீது போட்டுக்கொண்டான்.

"அந்த சுண்டெலிக்கு ஒரு யானை நண்பனா இருந்தான்".

தாத்தா அன்னிக்கி சிங்கம் ஃபிரண்டுன்னு சொன்னீங்களே. "அந்த எலியும் இந்த எலியும் ஒன்னா"

"ஒன்னு தாண்டா .. ஒருத்தருக்கு பலபேரு ஃபிரண்ட்ஸா இருக்கலாம். இந்த எலிக்கு சிங்கமும் ஃபிரண்டு, யானையும் ஃபிரண்டு"

"சரி சொல்லுங்க".

ஒருநாளைக்கு யானை வழியில் போய்க் கொண்டிருக்கும் பொழுது சுண்டெலியை சந்தித்தது. யானை சுண்டெலியைப் பார்த்து , "என்ன ப்ரதர் சௌக்கியமா" ன்னு கேட்டுச்சு".

"உடனே சுண்டலி நீ சௌக்கியமா ன்னு கேட்டுச்சா .. தாத்தா"

"ஆமாம் கேட்டுச்சு. அது மட்டுமில்ல .. நீ ஏன் மெலிஞ்சு போயிட்டேன்னு வேற கேட்டுச்சு.

"அதுக்கு யானை என்ன சொல்லிச்சு"

"வேனல் காலத்துல தண்ணி இல்லாமல் ஏரி, குளம் எல்லாம் வத்திப்போச்சு. அதனால நிறைய மரம், செடி, கொடி எல்லாம் கருகிப் போச்சு. சரியா சாப்பாடு கிடைக்கல்ல" ன்னு தன் கவலையை எலிகிட்ட சொல்லிச்சு.

“வேனல் ன்னா என்ன தாத்தா” ?”

வெயில் கொளுத்துற காலம் வேனல் காலம் ன்னு சொல்லுவாங்க”.

”ஓ .. சம்மரா” ..

“ஆமாண்டா அப்பனே .. சம்மர் தான்".

"அப்பறம் என்ன ஆச்சு தாத்தா” ?

”அப்போ ஒனக்கு சாப்பாடு, தண்ணி ஒன்னும் கிடைக்கல்லையா” ன்னு சுண்டெலி கேட்டுச்சு.

“உனக்கு ரொம்ப பசி இருக்குமே. இந்தா இந்த லட்டு நீ சாப்பிட்டுக்கோ” ன்னு சொல்லி கையில் இருந்த லட்டை யானைக்கு கொடுத்துச்சு. யானை அதை வாங்க மறுத்து,

”உனக்குப் பசிக்குமே .. நீ என்ன பண்ணுவே” ன்னு கேட்டுச்சு.

“நான் சின்னவன் தானே. நீ பெரிசா இருக்கே. நீயும் நானும் ஃ பிரண்ட்ஸ் .. நீ சாப்ட்டா எனக்கு சந்தோசம் தான்" ன்னு எலி சொல்லிச்சு.

அதுக்கு யானை, "பரவாயில்லை .. நான் இப்போ சந்தைப் பக்கம் தான் போறேன். அங்க கடையில் இருந்து பழம் வாங்கி சாப்பிட்டுக்கறேன்" ன்னு சொல்லிச்சு.

அந்த நேரம் பாத்து, திடீர்ன்னு இடி இடிச்சி மழை பெய்ய ஆரம்பிச்சிச்சு. இடி சத்தம் கேட்டு சுண்டெலி நடுங்கிப் போச்சு.

“என்ன பயந்துட்டயா" ன்னு யானை கேட்டுச்சு.

“ஆமாம் .. மழையில நனைஞ்சா ஜலதோஷம் வரும்ன்னு எங்க ஆத்தா சொல்லியிருக்கு. இப்போ நான் என்ன பண்ணறதுன்னு தெரியல்லையே” ன்னு சொன்னதும்,

யானை சொல்லிச்சு, "நீ என் தும்பிக்கைக்குள்ள வந்து உக்காந்துக்கோ .. நான் போறவழில உன்னை உன் வீட்டுல இறக்கி விட்டுடறேன்னு”.

சுண்டெலி யானையோட தும்பிக்கையில் ஏறி ஒளிஞ்சுக்கிட்டுது. கதை முடிஞ்சிது” .. ன்னு சொல்லி திரும்பிப் பார்க்கவும்,

“நாம சாப்படறத மத்தவங்களுக்கு கொடுத்தா நமக்கு மத்தவங்க உதவி செய்வாங்க இல்லையா தாத்தா ?

"ஆமாண்டா என் செல்லம். பகிர்ந்து உண்டால் பசி அகலும், பாசம் பெருகும். புரிஞ்சுதா” ..

“புரிஞ்சுது தாத்தா .. இப்போ நான் தூங்கப்போறேன். தூங்கி எந்திரிச்சதும் தாத்தாம்மா கிட்ட சொல்லி எனக்கு ஜூசு கொடுக்கச்சொல்லுங்க”. என்று சொல்லி உறங்கிவிட்டான் அப்பு..

எழுதியவர் : (17-Apr-14, 1:54 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 179

மேலே