நதி தீரும் சிறுகதை

"கண்டிப்பா வந்தர்ரனும் தெய்வா, நான் எதிர்பார்த்துட்டு இருப்பேன்" என்றாள்
மல்லிகா....

இதழ் விரிந்திட்ட தெய்வா, "நான் வரணும்னா, நான் கேட்டத நீ பண்ணினாதான் " என்றான், கையில் இருந்த திருமண அழைப்பிதழை அப்படியும் இப்படியும் ஆட்டியபடியே...
அவனையே குறுகுறுவென பார்த்தவள், மெல்ல சிரித்தாள் ....

'சரிடா ... ஓகே' என்றபடியே கடந்து சென்றாள்....

'ஏய் ... என்னடி அவன் கேட்டான்?" என்றாள் ராதா

ராதா மல்லிகாவின் தோழி.....

'எங்க, அக்கா கல்யணத்துக்கு வந்தா, என் கூட தான் தூங்குவானாம்... அதுக்கு சம்மதம்னா வர்றேன்கறான்' என்றாள் மல்லிகா, சிரித்துக் கொண்டே....

'"ஏய் , என்ன சிரிப்பு, அவன் இவ்ளோ அசிங்கமா கேக்கறான், நீயும் பல்ல காட்ற , என்னடி லவ்வா?"

இதோ இன்னும் கொஞ்சம் அழுத்தினால், எகிறி குதித்து விடும் முட்டைக்கண்கள், ராதாவுக்கு.......

அவளே தொடர்ந்தாள்......

"இந்த காலத்து பசங்க லவ் பண்றதே அதுக்குத்தான் , ஜாக்கிரத ...ஏமாந்து நிக்காத" என்றாள்.

"ச்சே.... யாரு லவ் பண்றா.. லவ்வெல்லாம் இல்ல...."

"ஓ .... ஸ்ட்ரைட்டா ..... மேட்டர் .... ம்.. இது சூப்பர்"-அவளின் காது சிவந்தது.....

"ச்சி .. அதெல்லாம் இல்லடி... அவன் என் நண்பன் ... நல்லவன்...... என்கிட்டே சும்மா விளையாடுவான்...... ஏன், உங்க அக்கா கல்யாணத்துக்கு வந்தப்ப கூட வர்ற வழியெல்லாம்
ஒண்ணா தூங்கலாம்னு சொன்னவன், அப்படி தூங்க சான்ஸ் கிடைச்சப்ப கூட அவன் என் கிட்டயே வரல........ அவன போய் ....." என்றவள்,

தன் அக்கா கல்யாண பத்திரிகையை அடுத்த தோழிக்கு, தோழர்களுக்கு கொடுப்பதில் ஆர்வமானாள் .......

யார் நல்லவர், யார் கெட்டவர் யார் அறிவார் .... சந்தர்ப்பம் அமைவதில் காலத்தின் கணிப்பு என்னவாய் இருக்கும்......?

தெய்வா.... நல்லவனா கெட்டவனா....?

மல்லிகாவுக்கு காட்டும் முகத்தை எதையாவது கொண்டு மூடிவிடுவானா ....? அல்லது மூடியிருக்கும் எதையாவதை கிழித்து விடுவானா....? அதோ தெரியும் அந்த மலையை அவர்கள் தொடும் நாளின் இரவில் தெரிந்து விடப் போகிறது......!

சில்லென்ற காற்றும், ஜிவ்வென்ற பனியும், அடர்ந்து கிடந்த காடும், ஆழ்ந்த தியானத்தை சிதறியிருந்தது... பத்து பேர் கொண்ட குழு அது...

நான்கு பெண்கள் ஆறு ஆண்கள்...... அனைவருமே மல்லிகாவின் நெருங்கிய தோழி தோழர்கள்..... அவர்களுக்கு மட்டுமே அழைப்பு.....

மல்லிகா, "இங்க கொஞ்சம் கவனமா வாங்க, யானை நடமாடுகிற பகுதி" என்றபடி வழி காட்டிக் கொண்டு சென்றாள் ......

யானைகள் காட்டின் பலம்......

காணும் இடமெல்லாம் பசுமை கை தட்டி அழைத்தது...கண் கொட்டி சிரித்தது.....கட்டி பிடித்து தழுவியது.....விரிந்து போகும் விழிகளில், வெள்ளுடை போர்த்திய மலைகள்...

காடும் காடும் சார்ந்த வாழ்கையில் ஒரு பட்டாம்பூச்சி வாழ்கிறது ஒரு பெரும் வாழ்வை.....

வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்குகளில் வாழ்த்து கிடக்கிறது அமைதி.....இரைச்சலற்ற வானத்தில் இன்னிசையாய் சிறகடிக்கிறது பறவைகள்....

"இன்னும் எவ்ளோ தூரம்ப்பா ... "என்றான், கால் முட்டியை பிடித்து கொண்ட ஒரு நண்பன் ...
.
"ஒரு நாளைக்கே முட்டிய பிடிக்கறியே..... நாங்க ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நடக்கணும்.." என்றாள், இன்னும் கொஞ்சம் சிரித்த மல்லிகா.....

"அதான், நீ ஹாஸ்டல் வந்துட்டீல்ல" என்றான் இன்னொருவன்....

"நான் ஒருத்தி தான் வந்துருக்கேன், இன்னும் ஒரு ஊரே இருக்கு " என்றாள் அழுத்தமாக ....
"படிக்க" -என்றாள் அமைதியாக....

நண்பர்கள், இரு வேறு அறைகளில் பால் விகிதம் பிரிக்கப்பட்டிருந்தார்கள் எப்போதும்
போல ...

இல்லாது போலத்தான் இருந்தது ... ஆனால் குளிரூட்டிக்கொண்டெ இருந்தது காற்று....

விடிந்தால் கல்யாணம்.

கல்யாண வேலைகள் அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, நெருப்பு மூட்டி, ஆட்டம் பாட்டம் என இளசுகளின் கும்மாளம் கலை கட்டியது...

நண்பர்கள் எல்லாரும், மாப்பிள்ளையிடம் அறிமுகம் ஆனார்கள் .. காட்டிலா அதிகாரி, முறைமாமன் வேறு.....

பெண் அடக்கமாய் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

"ஏங்க, தாமரை, மல்லிகாவ விட நீங்க தாங்க அழகு.. ம்ம்ம்...... மிஸ் ஆகிட்டீங்க" என்ற தெய்வாவை, விழிகளை மட்டும் தூக்கி, பார்த்தாள்.

அதில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது.....
பெரிய புன்னகை.....

நேரம் ஓடிக் கொண்டிருந்தது ..

யார் நல்லவர், யார் கேட்டவர் தெரிவதற்கு நேரம் நெருங்கி கொண்டிருந்தது.....ஆங்காங்கே அவரவர் அவரவர் அறையில் முடங்கி விட.....இவன் கண்ணாலேயே ஜாடை செய்தான்....

மல்லிகா சிரித்தாள்....

"கொன்றுவேன்.... போய் படுடா .." என்றாள் கிசு கிசுத்த குரலில்.....

தலைக்கடியில் தூங்கி கொண்டிருந்த செல் போன், கிர் ரென ஒரு சத்தம் எழுப்பி அணைந்தது.....

மெசேஜ் .....

க்ளிக்கினான்.....

மல்லிகா அனுப்பியிருந்தாள் ....

வெளியே வந்து, இடது புறம் செல்லும் ஒத்தையடி பாதையில் வந்து கொண்டேயிரு......

நான் காத்துக் கொண்டிருப்பேன்....

சட்டென அணைத்தான். முகம் விரித்தான்....

மெல்ல எழுந்து வெளியே வந்தவன், வெளியே யாருமில்லாததை கண்டு கொஞ்சம் பயந்தான்...

குளிருக்கு அனைவருமே வீடுகளுக்குள் முடங்கியிருந்தார்கள்...

"ஆசை பயம் அறியாது" ---- அவன் நடக்க ஆரம்பித்தான்...

யாராது விளையாடுகிறார்களா..? யோசிப்பதற்குள் இருட்டுக்குள் வந்துவிட்டிருந்தான்........

திக் ......................திக்........................, திக்,......................

இது தேவையா? யானை, புலி, ஏதாது வந்தா .....? ஆனாலும் மல்லிகா வரச் சொல்லிருக்கா!!!!!!!!

ஒரே குழப்பம்..............................

"ஒரு வேளை பேய் ஏதாது இப்படி பண்ணுதா ......? மனம் பாடாய் பட்டது.... பேசாம திரும்பி போய்டலாமா! " என யோசிக்கையில் முன்னால் மல்லிகா சென்று கொண்டிருந்தாள் .....

முகம் தெரியாத இருட்டு..... உருவம் தெரிந்து கொள்ளுமளவு பழக்கப்பட்டு விட்டது...

ஒத்தையடி பாதை தாண்டியவள், அந்த பரந்த புல்வெளியில் நின்றாள் ......வானம், எங்கும் வானம்... வானமெங்கும் நீலம்..... நீளத்தில் வெள்ளி வெள்ளி நட்சத்திரங்கள்..... குளிர்ந்த காற்று..... இருட்டில் ஒரு வித வெதுவெதுப்பை சுமந்து கொண்டிருந்தது........புல்வெளியில் கால் உயரம் வளர்ந்திருந்த புற்கள் தலையாட்டி தாளம் போட்டன.....மல்லிகாவின் கூந்தல் விரிந்து கிடந்தது... அவள் ஒரு மாய பேயின் மறு உருவமாய் அவனை நோக்கி வந்தாள்....அவள் கண்கள் மட்டும் தீயாய் எரிந்து கொண்டிருந்தது...

பெரும் சுழல் காற்றாய் வந்தவள், அவனை அணைத்தபடி அணைந்தாள் .... குளிரில் கொதித்திருந்தாள் ..

தெய்வா, என்ன செய்வதென அறியாமல், தழுவ ஆரம்பித்தான்....

வானம் கண் கூச, மேகம் மூடி மறைத்தது..... தேகம் வாய் பேச, பேச்சுக்கள் ஓடி விறைத்தது.......அவள் அவனை தேடினாள் .... அவன் அவளால் தொலைந்தான்..

காற்றும் குளிரும், கன்னத்தில் கை வைத்திருந்தது மாறி மாறி.....

அவர்கள் இரவை தொலைத்திருந்தார்கள்... இரவாகவே தொலைந்திருந்தர்கள்... அங்கே எல்லாம் நின்றிருந்தது..... காலம் உட்பட...



திருமணம் முடிந்திருந்தது......

எதுவுமே நடக்காதது போல வழி அனுப்பி வைத்தாள் மல்லிகா.....

மனம் அவனிடத்தில் இல்லை.....
"ஏதோ விளையாட்டுக்கு கேட்டதுக்கு, மல்லிகா இவ்ளோ சீரியஸ்சா......! ?????"

"ஒரு வேளை லவ் பண்ணுவளோ .... சரி, நீ தான் வேண்டானு உதறியிருக்கலாம்ல..."

" மனசாட்சி அங்கே ஓடிய ஓடையின் சத்தத்தில் சில்லிட்டது....."

இப்போது தெரிகிறதா... நல்லவர், கேட்டவர்.... கோட்பாட்டின் குழப்பம்......ம்ஹும் ...... இன்னும் குழப்பம் தீரவில்லை......அவன் போய்க் கொண்டே இருக்கிறான்...... அங்கே ஓடையில் ஓடிக் கொண்டிருந்தது, நேற்றிரவின் உண்மையும்--- ஒரு தீரா நதியும்......

அது....

எல்லா மனப்பெண்களுக்கும் உரித்தான அதே ஆர்வம், ஆசை, நாணம், வெட்கத்துடன்....மாப்பிளை அறையை ஏதேச்சையாக எட்டிப் பார்த்தாள் தாமரை...
உள்ளே ... குடித்தபடி, நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தான்..... மாப்பிள்ளை. இவளால், வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

"மாபிள்ள, நாளைக்கின்னாரம் படு பிசியா இருப்பான்ல....." என்றான் ஒருவன்....

இன்னொருவன் சிரித்தான்.....

மாப்பிளை கூலாக, கீழே இருந்த டம்ளரை எடுத்து ஒரு மிடறு குடித்தான் .....

"என்ன, புதுசா.. நாளைக்கு நடக்க போகுது......பிசியா இருக்க.."என்று நிறுத்தியவன்.....
"எல்லாம் நிறைய பார்த்தாச்சுடா.. பொம்பளைங்க எல்லாம் அடிமை மாதிரி..... வேணும்னா வெச்சுக்கணும் ... வேண்டாட்டி விரட்டிடனும்.....
................................
நிறைய வைச்சும் பார்த்தாச்சு..... விரட்டியும் பார்த்தாச்சு......." என்றான் மீசையை முறுக்கிய படி......

அறையெங்கும் நிறைந்திருந்தது...... திமிர்.
கூட அவனெங்கும்.....

பின் அவனே தொடர்ந்தான்....
"இது சொந்தம் விட்ர கூடாதுன்னு....." என்று சிரித்தவன், அதுமில்லாம, சின்ன வயசுல இருந்தே...... "தாமர மேல கண்ணு..." என்று கண்ணடித்து சிரித்தான்......

அந்த சிரிப்பு அத்தனை அசிங்கமாக இருந்தது.... அவளின் ஆசை, கனவு, வெட்கம் எல்லாம் எரிமலைக்குள் தவழ்ந்தது.....காலங்காலமாக இருக்கும் அதே பெண்ணடிமை.....

ஆணுக்காகவே படைக்கப்பட்டவளா பெண் ...?

ஒரு வகையான கோபம் பரவியது அவள் எங்கும்.....
ஒரு ஆணின் மனத்தில் பெண் என்பவள் எவ்வளவு கீழ்த்தரமாக பதியப் பட்டிருக்கிறாள்....

யோசிக்க யோசிக்க, இன்னும் அதிகமானது கோபம் அது தீரா கோபம்.. தீர வேண்டாத கோபம்.... அடிமை, அடிமை, அடிமை,.... ஆண்டைக்கும் அடிமை.... அடிமைக்கும் அடிமை.....

அட கொடுமையே....

உறவு விடக் கூடாது என்பதற்காவாக திருமணம்.....?

"இவனை என்ன செய்யலாம்..... கொலை செய்யலாமா... அல்லது கல்யாணத்தை நிறுத்தி விடலாமா.....? எதற்கு? எதுவும் தெரியாத மானம் பற்றி பேசும் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளவா ?"

வேண்டாம்...... அவன் திமிருக்கு நிகரான ஒரு திமிர்..... ஒரு ஆணவம், அவனின் அடங்கா தனத்துக்கும் ஆணவத்துக்கும் எதிராக, ஒரே அடி.... காலம் முழுக்க அவன் தோற்றுக் கொண்டேயிருக்க வேண்டும்..... ஒவ்வொரு நாளும் தன் மனம் சிரிக்கட்டும்.. அவனின் அசிங்கமான சிரிப்பை அடக்கட்டும்......

யோசித்தாள் .... யோசித்தாள் .......
பேய் பிடித்தது மனதுக்கும் மௌனத்துக்கும்......

பெண்ணின் கோபம்,கோபமாகவே...வெளிப்படட்டும்......

கோபத்துடனே தன் அறை நோக்கி நடந்தவளுக்கு அங்கே தூங்கி கொண்டிருந்த மல்லிக்காவின் செல் போன் கண்ணில் பட்டது....

எழுதியவர் : கவிஜி (17-Apr-14, 2:07 pm)
பார்வை : 324

மேலே