ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் -5 எழுத்துப் பொருத்தம்

”எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்” என நாம் படித்து இருக்கிறோம். ”எண் எழுத்து இகழேல்” என ஆத்திச் சூடியிலும், ”எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என கொன்றை வேந்தனிலும் எழுத்தின் முக்கியத்துவத்தை பக்குவமாய் கூறுகிறார் ஒளவையார். எழுத்து அறிவித்தவன் இறைவன் என கூறுவதை எப்படி நாம் நம்ப முடியும். எழுத்துக்கள் இறைவனால் படைக்கப்பட்டனவா என ஆய்வு செய்யும்போது,

பன்னீ ருயிரும் முன்அயன் படைத்தனன்
மன்னிய அரன்அரி மயிலோன் புனிதன்
ஞாயிறு திங்கள் நடுவண் வருணன்
ஏயும் நிதிக்கோன் இரண்டு இரண்டு ஆகப்
படைத்தனர் ஈரொன் பானொற் றையுமே

என இலக்கண விளக்கம் சான்று கூறுகிறது. இதனை நம்புவது நம்பாததும் அவரவர் விருப்பமே. ஆயினும் இவ்வாறு படைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலிதான் என ஆறுமுக நாவலரின் இலகணச் சுருக்கம் கூறுவதுடன், அவை உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும், உயிர்மெய் இருனூற்றுப் பதினாறும் ஆய்தம் ஒன்றும் ஆக இருனூற்று நாற்பத்தேழு எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் வருதல் கண்டு கொள்க என்றும் பிட்டு வைக்கிறது.

பவணந்தி அடிகளின் நன்னூலில் எழுத்தியலில்

பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ 56
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம் புணர்பு என பன்னிரு பாற்று அது ஏ
என்று எழுத்து வகைகட்கு விளக்கம் அளிக்கப் பட்டு இருப்பதைக் காணலாம்.

நேமினாதமோ இதனையே,
.
ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை
மெவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு. 1
ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
ஏன்றமெய்ம் மூவாறும் எண்ணுங்கால் - ஊன்றிய
வன்மையே மென்மை யிடைமையாம் வாட்கண்ணாய்
தொன்மை முயற்சியால் தொக்கு. 2
ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய்
ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய
வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் அளபெடைகள்
சொல்லொற்றி நீட்டத் தொகும்.

என்று எழுத்தின் அத்தனை குணங்களையும் விரித்துரைக்கின்றது.


இதனையே அமிர்தசாகரர் செய்த யாப்பருங்கலக் காரிகையோவெனில்,

குறில் நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்த மெய்யே
மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்
சிறு நுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே.

என விளக்குகிறது.

கவிதை யாப்பவர், மங்கலப் பொருத்தம் சொல் பொருத்தம் ஆகியவற்றோடு எழுத்துப் பொருத்தமும் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதால், செய்யுளில் எழுத்துப் பொருத்தம் எவ்வாறு வரும் எனும் கேள்விக்கு விடையாக

முதற்சீராக ஒற்றும் உயிரும் உயிர்மெய்யும் ஒற்றைப்பட மூன்றும் ஐந்தும், ஏழும், ஒன்பதும் ஆக வரின் அது வியனிலையாகி நல்லதென்ப. இரண்டும் நான்கும் ஆறும் எட்டுமாக வரின் அது சம நிலையாகி வழுவாம் என்ப.

ஆயினும் சிந்தாமணியில் மூவா என்று இரண்டெழுத்து வந்தவாறு காண்க என
சிதம்பரப் பாட்டியல் விளக்கம் அளிக்கிறது.

எனவே எழுத்துக்களில் கசதநபமவ அ இ உ எ இவை அமுதஎழுத்து என்பதால் முதற்சீர்க்குப் பொருந்தும், தசாங்கத்து அயற்கும் வைக்கபெறும். ஆனால், அமுது எழுத்துஅல்லாத எழுத்தும் மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் உயிரளபெடையும் ஒற்றளபெடையும் ஆய்தமும் நஞ்செழுத்தாம். இவை முதன்மொழிக்கண் வைத்தல் தீது எனக் கற்றறிந்தோர் சொல்வர்.


சிதம்பரப் பாட்டியல் கூறியதை வழிமொழியும் வகையில்,

தப்பாத மூன்றைந்தேழ் ஒன்பான் தவறில வென்(று)
ஒப்பாத முதற்சீர்க் குரைசெய்வர்—செப்புங்கால்
தண்டாத நான் காறெட் டாகா தவிர்கென்று
கொண்டார் எழுத்தின் குறி.

என வெண்பாப் பாட்டியலும் வெளிச்சம் கூட்டுகிறது.

எழுத்தின் பொருத்தமே எழுவாய்ச் சீர்க்கண் மூன்று
ஐந்து ஏழு ஒன்பது வியனிலை நன்றுஆம்
இரண்டு நான்கு ஆறு எட்டுச் சமனிலை வழுவாம்

என தொன்னூல் விளக்கமும் விளக்குகிறது..


இவ்வாறு மங்கலப் பொருத்தம், சொல் பொருத்தம், எழுத்துப் பொருத்தம் பார்த்தே, பாடு பொருளும், பாட்டுடைத் தலைவனும் போற்றப் பெற்றனர். எழுத்தும் சொல்லும் கற்றறிந்தார் பூண்ட கடனாக எங்கு எப்படி எழுதப் பட வேண்டுமோ அங்கு அப்படி எழுதப்பட்டுள்ளதை தமிழ் இலக்கிய வரலாறு நமக்கு தெள்ளெனக் காட்டுகிறது.. இது குறித்து திரு. கி. வா. ஜகன்னாதன் அவர்களின் கன்னித் தமிழ் எனும் கட்டுரையில் கண்ட ஒரு நிகழ்வை இங்கு அப்படியே எடுத்துக் கூற விழைகிறேன்.

.
சிவஞானமுனிவர் சிவஞான போதத்துக்குப் பேருரை எழுதி மாபாடிய கர்த்தர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். நன்னூலுக்குப் புத்தம் புத்துரை வகுத்தவர். சில கண்டன நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் படித்தவர்களுக்குச் சிவஞான முனிவரின் அறிவும் மிடுக்கு நடையும் புலப்படும். ஆனால் அவர் கவியுள்ளமும் படைத்தவர். இலக்கியப் படைப்புக்கு ஏற்ற உணர்ச்சிச் செல்வம் அவரிடத்தில் நிறைந்திருந்தது. காஞ்சிப் புராணத்தைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.
சிவஞான முனிவர் புதிய தம்பிரான் வரிசையில் இருந்தார். தமிழ் அறிந்த உள்ளம் ஆதலின் வீண் பொழுது போக்காமல் தம்மோடு பழகும் வேறு சில குட்டித் தம்பிரான்களுக்குத் தமிழ் நூல்களைக் கற்பித்தார். யாப்பிலக்கணங்கூட அவர்களுக்குச் சொல்லித் தந்தார்.

ஒரு நாள் பந்தி நடந்து கொண்டிருந்தது .பந்தியின் கடைசியில் சிவஞானமுனிவரும் அவருடைய நண்பர்களாகிய தம்பிரான்களும் அமர்ந்திருந்தனர். இலை போட்டு உணவு படைத்தார்கள். சோற்றில் கல்லும் மண்ணும் இருந்தன. குழிபோட்ட சம்பா நெல்லாக இருந்தாலும் நன்றாக வடிக்காமையால் சோறு பதம் கெட்டிருந்தது. அதைப் பார்த்தாலே அருவருப்பாக இருந்தது. பந்தியில் யாவரும் உண்ணத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் குட்டித் தம்பிரான்களோ சோற்றைக் கையில் எடுக்க மனம் வராமல் இருந்தனர்.

அப்போது அவர்களில் ஒரு தம்பிரான் என்னவோ சொல்லத் தொடங்கினார். தங்களுக்குள்ளே பேசுபவரைப் போலவே மெல்லச் சொன்னார். அவர் பேசவில்லை; அந்த நிலையைப் பற்றிச் செய்யுள் ஒன்றை யோசித்துச் சொல்ல ஆரம்பித்தார். முழுச் செய்யுள்கூட அன்று; ஒரு செய்யுளின் முதலடியை மாத்திரம் சொன்னார்.' 'அட, அரிசி எவ்வளவு நல்ல அரிசி! குழி போட்ட சம்பா அரிசி! இதைச் சமைக்கத் தெரியாமல் எவனோ ஒருவன் குட்டிச் சுவராக்கி விட்டானே! இதச் சாப்பிடும் தலை விதி நமக்கு வந்திருக்கிறதே!' என்று சிந்தித்த அவர்,அதன் விளைவாக அந்தச் செய்யுள் அடியைச் சொன்னார்.

கொங்கன் வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால்

என்று பாடினார். மற்றத் தம்பிரான்களும் அவரைப் போலவே சோற்றைக் கண்டு வயிறு எரிய உட்கார்ந்தவர்கள். ஆகவே அவர்களுக்கும் தங்கள் வெறுப்பைப் பாட்டாக்கிச் சொல்ல வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. இரண்டாவது தம்பிரான் மேலே சொன்ன பாட்டின் இரண்டாவது அடியைச் சொன்னார்.

சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினார்

என்று அவர் பாடினார்.' இதையும் தலையெழுத்தே என்று இங்குள்ள தம்பிரான்கள் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் நாம் சும்மா உட்கார்ந்து என்ன பயன்?' என்று நினைத்து அவர் அப்படிப் பாடினார். பாட்டு இப்போது இரண்டடி நிரம்பி பாதிப் பாட்டாக நின்றது.

கொங்கன்வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால்
சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினார்.

மூன்றாவது தம்பிரான் பார்த்தார். பாட்டின் இரண்டடிகளையும் கேட்டார். ' நாம் எப்படியும் இதைச் சாப்பிட்டுத்தான் தீரவேண்டும். எல்லோரும் சாப்பிடும் போது நாம் நம் கண்ணை அங்கும் இங்கும் ஓட்டிக் கொண்டிருந்தால் ஒரு லாபமும் இல்லை. அமுதிலே கண் வைக்க வேண்டும்' என்ற கருத்து அவருக்கு எழுந்தது. மூன்றாவது அடியை பாடினார்:

அங்கும் இங்கும் பார்க்கிறீர் அமுதினிற் கண் இல்லையே!

என்று அவர் அந்த அடியைச் சொன்னார். பாட்டை முடிப்பதற்காக மூன்று பேரும் முயன்றுகொண்டிருந்தார்கள். அடுத்த அடி எளிதில் வரவில்லை. எதுகையைப் பார்த்தார்கள்; மோனையைப் பார்த்தார்கள்; சொல்லைத் தேடினார்கள்; வரவில்லை. நல்ல சோறாகக் கிடைக்கவில்லையே என்ற தவிப்பைக் காட்டிலும் பாட்டை நிரப்ப நான்காவது அடி கிடைக்கவில்லையே என்ற தவிப்பு அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அவர்களுடன் உட்கார்ந்திருந்த சிவஞான முனிவர் அவர்கள் சங்கடத்தைப் போகினார்.

எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள்பாவம் ஈசனே!

என்று கூறிப் பாட்டை நிறைவேற்றினார். இப்பொழுது பாட்டு நாலடிகளையும் உடைய முழுப் பாட்டாகி விட்டது.

கொங்கன்வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால்;
சங்கமங்கள் கூடியே சாப்பிடத்தொடங்கினார்;
அங்கும் இங்கும் பார்க்கிறீர் அமுதினிற் கண் இல்லையே;
எங்கள் பாவம் எங்கள்பாவம் எங்கள்பாவம் ஈசனே!

இந்தப் பாட்டின் நான்கு அடிகளும் ஒரே மாதிரி இருக்கவில்லை. நாலாவது அடியைக் கேட்கும்போது அது மற்ற மூன்று அடிகளைவிட மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது அதில் ஏதோ ஒரு தனிச் சிறப்பு இருப்பதாகத் தெரிகிறது. முதல் மூன்று அடிகளையும் கேட்கும்போது அந்தப் பாட்டு எழுந்த நிலைக்களம் நன்றாகத் தெரிகிறது. அவற்றை நினைக்க அவை உதவுகின்றன. நான்காவது அடியைக்கேட்கும்போது'ஹா!' என்று நம்மை அறியாமலே நாம் சொல்கிறோம்.அந்த அடியில் ஏதோ ஒன்று நம் உள்ளத்தைத் தொடுகிறது.அது மற்ற மூன்று அடிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. அது என்ன?

பாட்டில் உள்ள சொல்லும் சொற்களால் குறிக்கப்பெறும் பொருளும் எப்படி அமைந்திருக்கின்றன? முதல் மூன்று அடிகளிலும் அதிகச் செய்திகள் இருக்கின்றன. கொங்கன் சோற்றைப் பொங்கியதையும், சங்கமங்கள் கூடிச் சாப்பிடுவதையும், பாட்டுப் பாடிய தம்பிரான்கள் அங்கும் இங்கும் பார்த்து விழிப்பதையும் அந்த அடிகள் சொல்கின்றன. நான்காவது அடியில் அந்த விவரம் ஒன்றும் இல்லை. எங்கள் பாவம் என்ர தொடரே மூன்று முறை வருகிறது. ரசம் தெரியாதவர்கள், " மூன்று முறை திருப்பித் திருப்பித் சொன்னதில் என்ன சுவை இருகிரது? கூறியது கூறல் என்ற குற்றந்தான் இருக்கிறது" என்று கூடச் சொல்லக் கூடும். " 'குற்றம? அந்த அடியில் குற்றம் இருக்கிறது என்பவன் சுவையறியாதவனாக இருக்க வேண்டும்' என்று நாம் சொல்லுவோம். அந்த மனிதனுக்கு என்ன பட்டம் சூட்டலாம் என்று எண்ணி முட்டாள் , மடையன் என்பன போன்ற வார்த்தைகளைத்தேடத் தொடங்கி விடுவோம். அது கிடக்கட்டும். நான்காவது அடியில்தான் ஏதோ ஜீவன் இருக்கிறது போலப் படுகிறதே, அதைச் சற்று விண்டு பார்க்கலாம்.

பாட்டு வந்ததற்குக் காரணம் தம்பிரான்கள் அந்தச் சோற்றைக் கண்டு பட்ட வேதனைதான். அந்த வேதனையை, வயிற்றெரிச்சலை, வசனமாகச் சொல்லாமல் பாட்டாகச் சொல்லவேண்டும் என்று ஆரம்பித்தார்கள். மூன்றுபேரும் பாடிய அடிகளில் வயிற்றெரிச்சலுக்குக் காரணமான பொருள்கள் வந்தன. ஆனால் வயிற்றெரிச்சலாகிய உணர்ச்சி வெளிவரவில்லை. எதுகை மோனை, சொற்கள் எல்லாம் இருந்தன. ஆனால் இவ்வளவையும் கொண்டு எதைச் சொல்ல வந்தார்களோ அந்த உணர்ச்சியை நான்காவது அடிதான் சொல்கிறது. "அட தலைவிதியே!" என்று தலையில் அடித்துக் கொள்வதுபோல அந்த அடி நிற்கிறது. ' எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள் பாவம் ஈசனே!" என்று மூன்று முறை சொல்லிவிட்டு ஈசனைக் கூப்பிட்டதில் உணர்ச்சி விஞ்சி நிற்கிறது. முதல் மூன்று அடிகளீல் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குரிய பொருள் உண்டு. அத்தனையும் செய்திகள். நான்காவது அடியில் உள்ள சொற்களுக்கு பொருள் உண்டு; ஆனால் அந்தப் பொருளோடே நிற்கவில்லை; அதற்கு மேல் உணர்ச்சியை எட்டி நிற்கிறது அடி. அப்போது சொற்களின் பொருளைகூட நாம் இழந்துவிடுகிறோம். மணியை அடிக்கிறபோது மணியும் அடிக்கும் நாக்கும் வேலை செய்வதை ஒழிந்து நின்றுவிட்டாலும்,அவற்றைக் கடந்து மணியின் ஒலி நீண்டு நிற்பதுபோல, சொல் பொருளைக் காட்ட, பொருள் பாவத்தைக் காட்ட, நாம் சொல்லையும் அதற்கு உள்ள நேரான பொருளையும் மறந்து உணர்ச்சியிலே ஒன்றுபடுகிறோம். என்ன பாவம்' என்ற தொடர் , ' நாம் இந்தத் துன்பத்தை அடைய என்ன பாவம் செய்தோம்?' என்ற பொருளைக் குறிக்கிறது. ' முன்பு என்ன பாவம் செய்து இந்தத் துன்ப விளைவு உண்டாயிற்று?' என்ற ஆராய்ச்சியிலே இறங்கினாரா, சிவஞானமுனிவர்? இல்லை, இல்லை. அப்படி இருந்தால் அந்தத் தொடரை அவ்வளவு வேகமாக மூன்று முறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ' எங்கள் பாவம்' என்ற தொடர் உணர்ச்சியை வெளியிடும் வாய்பாடாக நிற்கிறது; அவ்வளவுதான்.

"பாவம்! அந்தக் குழந்தையைக் கவனிப்பாரே இல்லை" என்று நாம் சொல்லுகிறோம். திக்கற்ற குழந்தையைக் கண்டபோது நம் உள்ளத்தே சுரக்கும் இரக்கத்துகு அடையாளமாக அந்தப் 'பாவம்' என்ற சொல் வருகிறது. அதற்குரிய பொருளை அது சுட்டுவதாக இருந்தால், பாவம் செய்தவர் யார்?' என்ற விசாரணை எழும். ' குழந்தை போன ஜன்மத்தில் பாவம் செய்தது; அதனால் இந்த ஜன்மத்தில் திண்டாடுகிறது' என்று பொருள் விரிப்பதாக இருந்தால், அங்கே இரக்கம் தோன்ற இடமே இல்லை.இரக்கப்படக் கூடாது என்பதற்குரிய காரணமாக, இழிப்புக்குரிய காரணமாக, அல்லவா அது ஆகிவிடும்? ஆகவே ,அங்குள்ள பாவம் என்ற சொல் தனக்குரிய பொருளைக் குறித்து நிற்காமல், அதையும் கடந்து இரக்க உணர்ச்சியைக் குறிப்பிடும் அடையாளமாக நிற்கிறது. 'அந்தக் குழந்தையைக் கவனிப்பாரே இல்லை' என்றால் ஒரு செய்தியை வெளியிடும் வாக்கியம் என்ற அளவில் நிற்கிறது. " பாவம்! அந்தக் குழந்தையைக் கவனிப்பாரே இல்லை" என்றால்தான் இதைச் சொல்பவன் செய்தியைச் சொல்லும் அளவோடு நிற்பவன் அல்ல, உள்ளம் இரங்குபவன் என்று தெரியவருகிறது. அவன் உள்ளம் இரங்குவதை, நாம் உணரும்படி செய்வது 'பாவம்' என்ற ஒரு சொல்!

எத்தனை சமயங்களில் நாம் நினைந்தபடி ஒன்று நடக்காவிட்டாலும் நம் மனத்துக்குப் பொருந்தாத ஒன்றைக் கண்டாலும், ஏமாற்றம் உண்டானாலும் 'அட கடவுளே!' என்று சொல்லுகிறோம்! அப்படிச் சொல்வதும் மனத்தில் உள்ள உணர்ச்சியைக் காட்ட எழுவதே. சிவஞான முனிவர் இந்த இரண்டு உணர்ச்சி அடையாளங்களையும் சேர்த்துப் பாட்டோடு இணைத்து விட்டார். உணர்ச்சியின் வேகத்தைக் காட்ட மூன்று முறை 'எங்கள் பாவம்' என்பதைச் சொல்லிக் கடைசியில் முத்தாய்ப்பு வைப்பது போல ஈசனே!' என்று முடித்தார்.

இந்தப் பாட்டைப் பாடுவதற்குக் காரணம், அவர்களுக்குக் கிடைத்த உணவின்மேல் உண்டான அருவருப்பு உணர்ச்சி. அந்த உணர்ச்சி நான்கு தம்பிரான்களுக்கும் இருந்தன. ஆனால் அதை வெளியிட மூன்று பேரால் முடியவில்லை. எதற்காகப் பாட்டைப் பாட வந்தார்களோ அது நிறைவேறவில்லை. சிவஞானமுனிவர், அவர்களால் முடியாத அதைச் செய்துவிட்டார். அவருக்குக் கிடைத்தது ஒரே அடிதான். ஆனால் அந்த அடியில் உணர்ச்சி பொங்கி வழியப் பாடிவிட்டார்.

முன்னைய மூன்றும் சொல்லையும் பொருளையும் தெரிவிக்க நாலாவது அடி உணர்ச்சியை நாமும் உணரும்படி செய்கிறது. அந்த உணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த பொருள்கள் இல்லாத இடத்திலும், நமக்கு அதன் விளைவாகிய உணர்ச்சி புலனாகிறது. அதனால் நாமும் அவர் பெற்ற உணர்ச்சியை உணர்கிறோம். அதனால்தான் அந்த அடி அதிசயமாகச் சுவை தருகிறது. உண்மையில் அந்த அடிதான் கவியாக நிற்கிறது.

கொங்கன்வந்து பொங்கினான் குழியரிசிச் சோற்றினால்
சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினார்
அங்கும் இங்கும் பார்க்கிறீர் அமுதினிற் கண் இல்லையே
எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள்பாவம் ஈசனே!

என்ற முழுப்பட்டையும் சொல்லும்போது மணியடித்த பிறகு அதன் ஒலி நெடுநேரம் நம் காதில் ஒலிப்பது போலப் பாட்டின் ஜீவனாகிய உணர்ச்சி பாட்டைச் சொல்லி முடித்த பிறகும் உள்ளத்திலே நிற்கிறது

(வளரும்)..
-------------

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (17-Apr-14, 3:09 pm)
பார்வை : 250

மேலே