அம்மாகுட்டி கவிதை - 2

அம்மாகுட்டி
பால்பற்கள் தெரிய
சிரித்துக்கொண்டிருந்தாள்

மேல் வரிசையில் நான்கும்
கீழ் வரிசையில் இரண்டும்
முளைத்திருந்த பால்பற்கள்
சிறு உதடுவிரித்து
சிரிக்கையில் சட்டென வசீகரித்தன

சிரிக்கும்போது நெஞ்சுப்பகுதி
ஏறி இறங்கியவண்ணமிருந்தது

இடைவிடாது சிரித்தால்
வயிறு வலிக்குமென
விளையாட்டை நிறுத்திவிட்டு
வெறுமென பார்த்துக்கொண்டிருந்த
அம்மாவைக் கண்டு
மீண்டும் மீண்டும் சிரித்தது குழந்தை

சிரிப்பை நிறுத்த
காம்பு திணித்தாள்
ஒரு சப்புதலும் ஒரு சிரிப்புமாய்
சிறிது நேரத்தில் உறங்கியது குழந்தை

காம்பிலிருந்து வாயெடுத்து
படுக்கவைத்தாள்
குழந்தை வாயெடுத்த பின்னும்
வடிந்துகொண்டிருந்தது பால்
காம்பிலிருந்து

எழுதியவர் : இவள் பாரதி (17-Apr-14, 4:28 pm)
பார்வை : 189

மேலே