முதல் நண்பன்
நம் ஒன்றாம் வகுப்பில்,
உன் ஒற்றை பென்சிலை
இரண்டாக உடைத்து
ஒரு பாதியை
எனக்கு தந்தபோதுதான்
நாம் முதன் முதலில்
நட்பை பரிமாறினோம்…!
என் ஆறு வயதில்
என் வாழ்க்கையில் வந்த
முதல் நண்பன் நீயானாய்…!
நாம் இருவரும்
நண்பர்களானதாலென்னவோ,
நாம் எப்பொழுதும் கடைசிதான்…!
வகுப்பு பெஞ்சிலும்…
படிப்பிலும்…
பள்ளிக்கூட மதியவேளைகளில்
நட்போடு நாம் பகிர்ந்துகொண்ட
உணவின் ருசியை
எந்த உணவும் அதன்பிறகு
எனக்கு தந்ததில்லை…!
ஐந்தாவது வகுப்பில்,
இரண்டாவது பெஞ்சில் அமரும்
இனியாவை – நாம்
இருவரும் சேர்ந்து சைட் அடித்தது
இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு…!
ஒருவேளை நாம்
பிஞ்சிலே பழுத்திருக்கலாம்…!!
கவலைகளே இல்லாமல்
சந்தோசங்களை சுமந்த நமக்கு,
புத்தகபைகள் கூட
சுமைகளாக தெரியவில்லை…!
பள்ளிக்கூடம்…!
விடுமுறை நாட்கள்…!
விளையாட்டு மைதானம்…!!
கோயில் திருவிழா…!
கோடை விடுமுறை…!!
இப்படி எல்லாவற்றையும் – நாம்
ஒன்றாகவே கழித்திருக்கிறோம்…!
ஆறாவது வகுப்பு பாதியில்,
உன் அப்பாவுக்கு
அலுவலக இடமாறுதல் என சொல்லி
வெளியூருக்கு புறப்பட்டாய் நீ…!
உன் பெற்றோருடன்…
நீ சென்ற பேருந்து
கடைசியில் ஒரு
புள்ளியாய் மறையும் வரை,
கண்கள் முழுக்க கண்ணீர்துளிகளுடன்
கைகாட்டி மறைந்த
உன் முகம் – இப்பொழுதும்
ஞாபகம் இருக்கிறது எனக்கு…!
ஆண்டுகள் பலவாகிவிட்டன…!
ஆனாலும் இப்பொழுது நீ
எங்கிருக்கிறாய் என
எனக்கு தெரியவில்லை…!!
எப்பொழுதாவது – உன்
முகத்தோற்றம் கொண்ட மனிதர்கள்,
என் எதிரில் வந்தால் – அவர்கள்
என்னைத்தாண்டி சென்றபின்பும்
ஒருமுறை திரும்பிபார்க்கிறேன் நான்…!
என்றாவது ஒருநாள்
என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன்
நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம்
என்ற நம்பிக்கையோடு…