சிறப்புக் கட்டுரை கதை 1 பிரேம பிரபா -நூறு ரூபாய்
வீட்டை விட்டு வெளியேறும் போதே மனதிற்குள் மூன்று முறை தீர்மானித்துக்கொண்டேன். முதலில் லஷ்மி நகரில் இருக்கும் தோப்பில் இரண்டு படி மாவடு வாங்க வேண்டும். பிறகு போரூர் சிக்னலில் இருக்கும் பதிவான கடையில் பத்திரிக்கைகள் வாங்கவேண்டும். கடைசியாக மின்சார கட்டணத்தைக் கட்டிவிட்டு வீட்டிற்கு வெயில் ஏறுவதற்குள் திரும்பிவிடவேண்டும். எல்லாம் ஒழுங்காகத்தான் நடந்து கொண்டிருந்தது. கடைசியாக மின்சார கட்டணத்தை கட்ட பேண்ட் பாக்கெட்டை துணி கிழியும் வரை துளாவும் போதுதான் தெரிந்து கொண்டேன் நான் முழுதாக எங்கோ ஒரு நூறு ரூபாயை தவற விட்டதை. ஒன்றிற்கு பல முறை பரிசோதித்து சரியாகத்தானே பணத்தை எண்ணி எடுத்து வைத்தேன். பிறகெப்படி பணம் குறையும்? எங்கே நான் தொலைத்திருப்பேன்? முதலில் இருந்து நடந்த நிகழ்வுகள் நிழற்படமாக மனத்திரையில் ஓடியது. முதலில் மாவடு வாங்கும் இடத்தில் நாற்பது ரூபாயிற்கு சில்லரை இல்லை என்று மண்டையை சொரிந்த அந்தச் சிறுவனிடம், நூறு ரூபாய் கொடுக்க, அவன் சில்லரை மாற்றித் தருவதாகச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அவன் கிளம்பி சிறிது தூரம் போவதற்குள் வேறோரு வாடிக்கையாளர் ஐநூறு ரூபாயிற்கு சில்லரை கொடுத்ததால், கடைக்காரப் பையனை கூவி அழைத்ததும் ஞாபகத்திற்கு வந்தது. அவன் என்னிடம் வாங்கிய ரூபாயை திரும்ப என்னிடம் கொடுத்தானா என்று மண்டையை கசக்க, கடைக்கார முதலாளி அந்தப் பையனிடம் ரூபாயை திரும்பிக் கொடுக்க ஞாபகப்படுத்தியதும் மங்கலாக நினைவிற்கு வந்தது. அவன் அப்படி என் ஞாபக மறதியை காசாக்கி இருந்தால் அவனுடைய முதலாளி விட்டிருக்க மாட்டார். எனினும் துளியும் என்னை பேரம் செய்ய அனுமதிக்காக முதலாளியையும் சந்தேகப்படுவது நியாயமாகப்பட்டது எனக்கு. ஆக அங்கு பணத்தைத் தொலைக்க நானே ஒரு சந்தர்பத்தை தட்டில் ஏந்தி காலையிலேயே கொடுத்திருக்கிறேன். பத்திரிக்கை வாங்கும் அவசரத்தில் பேண்டிலிருந்து ரூபாய் எடுக்கும் போது தவறி விழுந்து விட்டதா? அப்போதுதான் பத்திரிக்கை கடையில் ஒருவர் என்னைப்பார்த்து மெலிதாக சிரித்த்து ஞாபகம் வந்த்து. அவர் ஒரு வேளை எடுத்து என் ஏமாளித்தனத்தை நினைத்து சிரித்திருப்பாரோ என்று கூட தோன்றியது. நிச்சயம் இருக்காது. கடையை விட்டு நான் கிளம்பும்போது என் கையிலிருந்து நழுவிய ஒரு பத்திரிக்கையை குனிந்து எடுத்து கொடுத்தார். என் பணத்தை எடுத்தவராயிருந்தால் அந்த இடத்தை விட்டு எப்போதோ காலி செய்திருப்பாரே. வழி நெடுக யோசித்துகொண்டே வந்தேன். என்றாலும் அவரின் மர்மமான சிரிப்பு அவரையும் கொஞ்சம் சந்தேகப்பட வைத்தது. இது கலி காலம். யாரையும் அவ்வளவு சுலபமாக நம்பிவிடக் கூடாது. எதுவும் அவ்வளவு சுலபத்தில் எனக்குப் பிடிபடவே இல்லை. தொலைத்த நூறு ரூபாவிற்கு என்னென்ன வாங்கி இருக்கலாம் என்று மனம் வேகமாக கணக்கு போட்டது. என் பேரனுக்கு பள்ளிக்குச் செல்ல ஒரு பை வாங்கிக் கொடுத்திருக்கலாம். என் மனைவி நீண்ட நாட்களாக என்னிடம் கேட்ட அந்த சரஸ்வதி மாமியின் சமையல் புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் நண்பர்களுடன் சென்று பக்கத்து ஹோட்டலில் சாம்பர் இட்டிலியாவது சாப்பிட்டிருக்கலாம். எந்தப் பொருளும் அதன் முக்கியத்துவத்தை அதன் இழப்பில்தான் தெரிந்து கொள்ளலாம் என்று இருபது வருடங்களுக்கு முன் இறந்து போன என் தந்தை கூறிய அருள் வாக்கு தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியும் அவசர வரிச் செய்தி போல மண்டைக்குள் ஸ்க்ரோல் ஆகியது. பத்து வருடங்களுக்கு முன்பு நானும் என் அலுவலகத் தோழியும் ஆட்டோவில் செல்லும் போது நாங்கள் கண்டெடுத்த ஐநூறு ரூபாயும், அதில் ராஜ்பவன் ஹோட்டலிற்குச் சென்று தொண்டைக் குழி வழியும் அளவிற்கு சாப்பிட்டு விட்டு, மீதிக் காசை நாங்கள் இருவரும் சரி பாதியாய் பகிர்ந்து கொண்டது கருப்பு அரக்கனைப் போல முன் நின்று பயம் காட்டியது. அப்படியென்றால் கடவுள் என்னை தண்டித்து விட்டாரா? கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்த அசகாய சூரர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு என் பல வருடக் கோப்பை ஏன் அவசர அவசரமாக தேடி தூசி தட்டி எடுத்து என்னை தண்டித்தார் என்று குழம்பிப் போனேன். பத்து வருடங்களுக்கு முன் ஐநூறு ரூபாயிற்கான மதிப்பையும், நான் இப்போது தொலைத்த நூறு ரூபாயின் மதிப்பையும் கடவுள் கணக்கில் எடுத்திருப்பாரோ என்று அஞ்சினேன். என் பாதி பங்குத் தோகையான ஆட்டோவில் கண்டெடுத்த பணத்திற்கு நான் இது போல பல தொடர் இழப்புகளை சந்திக்கவேண்டி இருக்குமோ என்று லேசாக நடுங்கவும் தொடங்கினேன். நகரத்தில் இது போன்ற இழப்புகள் அனுதினமும் நடந்து கொண்டுதானே இருக்கிறது, எனினும் எல்லோரும் என்னைப்போல இப்படித்தான் வதை படுவார்களா ஏன்று தெரியவில்லை. அப்போதுதான் எங்கள் வீட்டு வேலைக்காரம்மா காலையில் தன் குழந்தையின் வைத்தியத்திற்காக ஒரு ஐம்பது ரூபாய் கேட்டது நினைவிற்கு வந்தது. இதுவரை அவர்கள் கைமாற்றாக என்னிடம் வாங்கிய பணம், சம்பளப் பணத்தை விட அதிகம் வந்ததால், நாசுக்காக மறுத்தது ஞாபகத்திற்கு வர, இழந்த நூறு ரூபாயிற்கான காரணம் ஒரு ஏழை கொடுத்த தண்டனையாகத் தெரிந்தது. நாளைக்கு எப்படியாவது சரிகட்டி மின்சாரக் கட்டணத்தை யாருக்கும் தெரியாமல் கட்டி விடவேண்டும். வீட்டிற்குத் திரும்பியவுடன் வெகு இயல்பாக இருக்க மனதளவில் தீர்மானித்துக்கொண்டே கதவைத் தட்டினேன். நூறு ரூபாய் பூதாகரமாய் நடுக்கூடத்தில், கொல்லைப் புறத்தில், படுக்கை அறையில் என்று எங்கு சென்றாலும் விடாமல் என்னைத் துறத்தியது. ”ஏங்க வந்ததிலிருந்து பாக்கறேன். ஏன் பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க” என்று என் மனைவி என்னை நெருங்கி வர, என் சட்டைப்பையிலிருந்து மின்சார அட்டையை எடுத்துக் கொடுத்தேன். அட்டையைப் பிரித்தவள் ”என்னங்க பணம் கட்டலையா. பரவாயில்ல. நான் நாளைக்கு ரேஷன் வாங்கறப்போ கட்டிடரேன், இப்போ சாப்பிட வாங்க” என்று அந்த அட்டையில் இருந்த நூறு ரூபாயை எடுத்து என்னிடம் கொடுத்தாள். எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் அன்றைக்கு சந்தித்த எல்லோரையும், பஸ் கண்டக்டர் உட்பட, குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய நான் இப்போது அதே குற்றவாளிக் கூண்டில் நெளிந்தபடி நின்று கொண்டிருக்கிறேன் சக மனிதர்களை சந்தேகித்தற்காக

