நாதிகளற்ற நதிகள்
நதிகள் நதிகளாகவே..நகர்கின்றன..!
நம்தேவை தீர்ப்பது மட்டுமே
இப்போது முக்கியம் ,ஏனெனில் நதிகள்
'தேசத்தின் இரத்த நாளங்கள்..'
அணைகள் கட்டி ,
இராட்சதத் தனமாய்
நீர் உறிஞ்சி ,செரித்து,
சாக்கடையில் உமிழ்ந்து,
வர்ணக் கழிவுகள் ஏற்றி ...
அத்தனையும் உள்வாங்கி
இப்போதும் நதிகள்
மீதி உயிரில் நகர்ந்த....
வண்ணமே உள்ளன.
உயிருடன் நெஞ்சம் பிளந்து,
இதயம் பிடுங்குவது போல்
மணல்களை வாரி,வாரி...
நதிகளின் நெஞ்சம் பிளந்து..
உயிர்நாடி பிடுங்குதல்
நமக்கு அவசரத்தேவை.
இப்போதும் நதிகள்
நாதிகளற்று நகர்கின்றன.
நீரின்றி அமையாத உலகில்,
எண்ணிலடங்காப் பிற
உயிர்கள் பற்றியோ ..
பிற உறவுகள் பற்றியோ..
நதிநீர் உரிமை பற்றியோ..
அல்லது
உயிர்களின் உணவு சுழற்சி (echosystem)
பற்றியோ ஏன் அக்கறை கொள்ளவேண்டும் ?
எப்படியாகிலும் நம் தேவையொன்றே
முக்கியம் இப்போது.
பிறர் உரிமை பறிப்பது "களவாடல் "
இருந்து விட்டுப் போகட்டும்...,
பெயர் மாற்றிவிட்டால் போகிறது.
மல்லாந்து படுத்துகொண்டு
எச்சில் துப்புவது ...
எப்பேர்ப்பட்ட புனிதவழிபாடு..?
அதை சந்ததிகட்கும்..
படிப்பிக்க வேண்டாமா...?
நதிகளின் புனிதம்
என்னவானால் நமக்கென்ன...?
அதற்கும் பெயர் மாற்றுவோம்
'கூவம் " என்றாவது....!