பாருவும் பரமேஸ்வரனும்

பாருவும் பரமேஸ்வரனும் ..


பாரு .. பாரு ..

அதிகாலை வழக்கம் போல் படுக்கையிலிருந்து எழுந்துவிட்ட பரமேஸ்வரன் மார்னிங் வாக் போவதற்கு வேண்டி காலில் தன் பேத்தி அவருக்குப் பிறந்தநாள் அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்த புத்தம் புதிய ஆதிதாஸ் ஷூவை மாட்டிக்கொண்டிருந்தார்.

ஒரு முறை கூப்பிட்டாலே போதும் மனைவி "இதோ வந்துட்டேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் முன் வந்து நிற்பாள்.

இன்று ஆளையும் காணோம் .. பதிலும் வர வில்லை. எனவே, மீண்டும் ஒரு முறை "பாரு ....." என்று சற்று நீட்டி முழக்கி கூப்பிடவும், அவர் மனைவி பார்வதி அருகில் வந்து, சூடான காஃபியை கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தாள்.

டம்ப்ளரில் இருந்த காஃபியை டவராவில் ஊற்றியபடியே பாருவிடம், "திருமணமான நாளிலிருந்து நாற்பத்தி ஏழு ஆண்டுகள் ஆச்சு. இன்றும் நீ அன்றுபோலவே கமகமன்னு மணக்கும் காஃபி எப்படிப் போடுகிறாயோ .. உன் கைமணமே தனி தான்" என்று பாருவை புகழ்ந்துவிட்டு .. ஒரு தடவை கூப்பிடுவதற்குள் வந்து விடுவாயே .. இன்று ..." , என்று சொல்வதற்குள் அவர் மனைவி,

"காலையில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் வயிற்றில் இருக்கும் டாக்சின் கரைந்துவிடும் என்று நீங்கள் தானே சொன்னேள். இன்னிக்கு குடிச்சேனா .. காஃபி போட்டு முடிக்கறதுக்குள்ளே அவசர அவசரமா வந்துடுத்து. அதலானத் தான் லேட்டு என்று சொல்லவும், பரமேஸ்வரன் சிரித்துக் கொண்டே,

"நான் வாக்கிங் போயிட்டு வரும் வழியில், காய்கறியும் வாங்கிவருகிறேன்" என்றார்.

"இன்னிக்கு நீங்க வாக்கிங் போயித்தான் ஆகவேண்டுமா .. ரெண்டு நாளா வேலைக்காரி வரவில்லை. இன்னிக்காவது வருவள்ன்னு நெனச்சேன். ஆனா வரமாட்டாளாம். அவ எப்பவுமே இப்படித்தான் .. எப்ப எனக்கு உடம்புக்கு முடியல்லைன்னு ஆனாப் போதும் .. மட்டம் போட்டுடறா .. சிங்க்கு நெறஞ்சு வழியறது. இன்னிக்கு வெள்ளிக் கிழமை வேற. விளக்கு தேய்க்கணும். நேத்திக்கு ராத்திரி தோசைக்கு கட்டிச்சட்டினி வேணும்ன்னு கேட்டேளே. அப்போ கையில காயமாயிடுத்து. உங்களுக்குத் தான் தெரியுமே. ராத்திரி என் கையை தடவி வேறு கொடுத்தேளே .. மறந்துடுத்தா. நீங்க வாக்கிங் போகாம, பாத்திரத்தை எல்லாம் தேச்சுக் கொடுத்தா போதும்" என்று மூச்சிரைக்க சொல்லி முடித்தாள்.

தன் நிலையில் சற்றும் மனம் தளராமல், "அதனாலே என்ன பாரு .. நீ கவலைப் படாதே. நானே எல்லா பாத்திரங்களையும் தேச்சுத் தரேன். போதுமா" என்று சொல்லிவிட்டு ஆறிப்போன காஃபியை குடித்து விட்டு, காலில் அணிந்த ஷூவை கழற்றி வைத்து, காலியான காஃபி கிளாஸ் டவராவுடன் சிங்க்கை நோக்கிப் பயணித்தார் பரமேஸ்வரன்.

அன்பாலே பேசிய என் அறிவுச் செல்வம் தங்கம்.
அம்புவியின் மீது நாம் அனைவரும் ஓர் அங்கம்
உடல் நான் அதில் உயிர் நீ என உறவு கொண்டோம் ப்ரேமையால்
சிங்க்கு நிறை பாத்திரங்கள் இன்றுதான் பார்க்கின்றேன்

என்று பாடியவாறே பாத்திரங்களை தேய்க்கத் தொடங்கினார்.

எழுதியவர் : (22-Apr-14, 1:06 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 139

மேலே