வா தோழா - கே-எஸ்-கலை
அயலான் மதி
அன்பால் அணை !
அதர்மம் மிதி
துணிவே துணை !
செருக்கு நீக்கு
அடியால் படி !
செல்வம் கல்வி
படிப்பால் அடி !
அன்பு செய்
காரணமின்றி !
வம்பு செய்
காரணத்தோடு !
துப்பாக்கி தூற்று
உயிர்கொலை தப்பு !
புத்தியைத் தீட்டு
துட்டனைத் தாக்கு !
பொய் பேசு
இடம் பார்த்து !
திரும்பி வா
மெய் காத்து !
காதல் செய்
பெண்ணியம் பேண் !
சாதல் வரை
காதலைக் காதலி !
நீயே புத்தகம்
உன்னையே வாசி !
தாயே கடவுள்
அன்னையை நேசி !
அப்பனை சீராட்டு
உன் ஆசான் !
மகனுக்கு தேரோட்டு
நீ ஆசான் !
தீயோர் பலருளர்
தீண்டாமை பேணு !
ஒன்றே குலம்
சாதிமதம் வேரறு !
செயற்கை விருந்து
அளவாய் நுகர் !
இயற்கை மருந்து
தெளிவாய் உணர் !
தேவைக்கு தேவை
மரங்கள் வெட்டு !
நாளைய தேவைக்கு
விதைகள் இட்டு !
பாதைகள் போடு
பரிதியைத் தொடு !
பரிசுகள் வாங்கு
பாதத்தால் நட !
வாழும் வரை
வாழ்க்கை உனக்கு !
மறுமை இல்லை
யாக்கை புழுவுக்கு !