எசமான் குதிரை - நரியனுர் ரங்கு

மேய்ச்சலுக்கு விட்டால்
பாய்ச்சலுக்கு வருமாம்
பழைய எசமானின் வாதம்

புது எசமானன் தேவலை
புல் வெளியில் மேயவும் விடுகிறான்
செவலைக் குதிரை சிந்தை மகிழ்ந்தது

காயடித்த விசயம் தான்
கொஞ்சம் கடினமாய் இருந்தது
இருந்தாலும் தேவலை - அடிக்கடி
தடவையும் கொடுக்கிறான்

கட்டுத் தறிகளை சுத்தப் படுத்தி
கடிக்கும் ஈக்களை அப்புறப்படுத்தி
கத்திரிகோலால் சவரம் செய்கிறான்

பிறந்த நாளுக்கு விடுமுறை கொடுக்கிறான்
புது சேனக் கடிவாளம் பூட்டி மகிழ்கிறான்
விருந்தினர் முன்னே விளம்பரப் படுத்தி
சவுக்குக் கூட குஞ்சம் வைக்கிறான்
செவலை குதிரைக்கு ஏக சந்தோசம்

சாலை விதிகளை சரிவர புகட்டி
பக்க வாட்டில் அதன் பார்வையை மடக்கி
பாதையில் செலுத்தும்
பகவான் எசமான் பாவம் என்றது

கடைசியில் செவலை கட்டுத் தளர்ந்தது
கால்கள் தேய்ந்தது
கடைவாய் நுரையின்
கடைசியும் தீர்ந்தது

வந்தது ஆங்கோர் வெள்ளைக் குதிரை
செவலைக் குதிரையின் சேனக் கடிவாளம்
வெள்ளை குதிரைக்கு விருதாய்க் கிடைத்தது

முந்தைய கருப்புக் குதிரையின்
கணக்கு தீர்ந்ததும்
சந்தையில் உரித்து அதன்
தோலை விற்றதும்
செவலை ஏனோ சிந்திக்க மறந்தது

வெள்ளை குதிரையால் வந்தது வினையென
செவலைக் குதிரைக்கு சீற்றம் வந்து
வெள்ளைக் குதிரையை விதைமேல் உதைத்தது

நரியனுர் ரங்கு
செல் : 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (23-Apr-14, 7:00 pm)
பார்வை : 101

மேலே