சினம்

மனிதத்திலிருந்து
மிருகத்துவம்
உற்பத்தி செய்து
விநியோகஞ் செய்யும்
கொடுங்கலஞ்சியம்.

அன்பு கொண்டு
எழுப்பப்பட்டதும்
அஹிம்சையோடு
ஊக்குவிக்கட்டதுமான
மானுடக் கோபுரத்துக்குள்
குடியிருக்கும் வெடிகுண்டு.

முரண்பாடுகள்
சமன் செய்யப்படாதத்
தருணங்களில்
புலன்களின்
அடக்குமுறைகளை
தகர்த்தெறிந்து
வெடிக்கும் எரிமலை.

சாந்தத்துவத்தின்
சாலைகள் மீது
கட்டுப்பாடுகள் மீறி
பெருக்கெடுக்கும்
காட்டாற்று வெள்ளம்

கண்களை மூடியவண்ணம்
அறிவின் வேலை நிறுத்தத்தோடு
போர்க்கொடி பிடித்து
புலன்களின் சாலைகள்மீது
ஊர்வலம்போகும்
உணர்ச்சிகளின் கொந்தளிப்பு.

எப்போதாவது வந்துபோகும்
அல்லது
எப்போதும் வந்துபோகும்
உறவுக்காரர்களைப் போல
எல்லோருக்குள்ளும்
மறைந்து வாழ்ந்தாலும்
வெளியாகும் வேளை
எவரையேனும்
முகம் சுழிக்க வைக்க
மறந்ததில்லை

பதவி உயர்வோ
சம்பள உயர்வோ
கேட்டுவரும் ஊழியன்
மனமறிந்து எங்கள்
முதலாளிகள்
அணிந்துகொள்ளும்
இந்த கிரீடம்
நரிகளிடம் வாங்கப்பட்டது.

அங்கே எதிபார்ப்புகளின்
ஏமாற்றமும்
இயலாமைகளின் அவலமும்
இணைந்த ஏழையின்
உள்ளத்துள் கனக்கும்
இது புஸ்வாணம் ஆகிப்போகிறது.

சந்தர்ப்பங்களின் துணையோடு
சந்தோசங்களின் இணைப்பை
துண்டித்துப் பார்க்கும்
வெட்டுக்கத்தியாய் இருக்கும்
இந்த சினம்
மழுங்கவேண்டிய இடத்தில்
மழுங்கியும்
வெடிக்க வேண்டிய நேரத்தில்
வெடிக்கும்போதுதான்
பெருமைக்குரியதாகிறது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Apr-14, 2:34 am)
Tanglish : sinam
பார்வை : 697

மேலே