கையில் மையெழுதி இந்தியக் கனவெழுதி

இன்று மொய்வைத்தார் - இவர்
இன்னும் ஐந்தாண்டு கைவக்க!
கையில் மைவைப்போம்!
பையில் மொய்வைக்காதவர்க்காக!

வாய்ப்பு உனது வசம்
வாக்கு உன் சொத்து!
வளம்சேர வாக்களி
நலம்சேர வாய்ப்பளி!

பாசமாய் பேசி நடித்திடுவார்!
பம்மிபம்மியே நடந்திடுவார்!
பச்சைக்கொடி காட்டிவிட்டால்
பின்பு எட்டி உதைத்திடுவார்!

இன்று சரியாக செய்தால்
நாளை சரிவுகள் குறையும்!
இன்று சரிசெய்ய தவறினால்
நாளை சரித்திரம் சிரிக்கும்!

அந்நிய மண்ணில்
அகதிகள்போல நம்முறவு!
அண்டை நாட்டில்
அடிமைகள்போல நம்சொந்தம்!

அடுத்தநாடு அலட்சியங்காட்டும்!
பக்கத்துநாட்டு படையும்தாக்கும்!
இந்திய சிப்பாய்கள் உயிரிழப்பர்!
இங்கு அரசு அமைதிகாக்கும்!

வீரமென்றால் என்ன?
மானமென்றால் என்ன?
இன்று இந்தியமண்ணில்
மறைந்துதான் போனதோ?

தொடரும் தொல்லைகள்
தொடர்கதை ஆகிவிடக்கூடாது!
மண்ணைக்காப்பவன் - இந்த
மண்ணை நேசிப்பவன் வேண்டும்!

உறுதிகொண்ட ஒருவன் தேவை!
நெஞ்சுரம்கொண்டவன் நாடாளட்டும்!
வாழ்த்தி உயர்த்தி அமர்த்துவோம்!
வஞ்சம் கலந்தால் வீழ்த்திடுவோம்!

இந்தியா வல்லரசாகுமா?
உலகுக்கு நல்லரசாகுமா? - நட்பே!
அது இன்று உன் கையில்!
யோசி! நாடு வளமாகட்டும்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (24-Apr-14, 6:20 am)
பார்வை : 384

மேலே