நீ முகம் பார்க்கும் கண்ணாடி

கண்ணாடி முன்பு
நீ
ஒப்பனை செய்கிறாய்
உண்மையில்
கண்ணாடியைத்தான்
ஒப்பனை செய்கிறாய்

======================

உன் வீட்டுக் கண்ணாடியில்
ஒட்டப்பட்டிருக்கும்
அந்த
ஸ்டிக்கர் பொட்டில்
ஒரு கவிதை
ஒளிந்திருக்கிறது
எனக்குத்தான்
கண்டுபிடிக்கத்தெரியவில்லை

======================

நான்
முகம் பார்க்கும்
கண்ணாடியாக
உனது கண்களே
இருக்கட்டுமே

======================

கல்பட்டு அல்ல
உனது
நிர்வாணம் பட்டும்
ஒரு கண்ணாடி
உடையலாம்

======================

எத்தனை
வெட்கங்களை
ஒளித்து வைத்துள்ளாய்
உன்
வீட்டுக்கண்ணாடியில்

======================

கண்ணாடிக்கு மட்டும்
பேசத்தெரிந்தால்
அல்லது
எழுதத் தெரிந்தால்
நீ
முகம் பார்க்கும் கண்ணாடிதான்,
உலகின்
ஆகச்சிறந்த கவிஞன்

======================

முகம் காட்டும்
கண்ணாடிகள்
உடைந்து சிதறியபின்பும்
பிம்பங்களை
முழுமையாகக்
காட்டுவது,
உன்னைப் போல்
ஒருத்தியின் அழகு
எக்கணத்திலும்
சிதைந்து விடக்கூடாது
என்பதால்தான்

======================

காட்சிப்பதிவு செய்யும்
முகம்பார்க்கும் கண்ணாடியை
அறிவியல் அறிஞர்களே
சீக்கிரம்
கண்டுபிடித்துத் தொலையுங்கள்

======================

நீ
முகம் பார்க்கும்
கண்ணாடியிடம் தான்
கற்றிருப்பாயோ
கண்களால் பேசும்
அந்த வித்தையை

======================

ஒரு
அதிகாலையின்
ஆசிர்வதிக்கப்பட்ட
பனித்துளிகள்,
நீ முகம்பார்க்கும்
கண்ணாடியாகும்
வரம் பெற்றிருக்கலாம்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (25-Apr-14, 5:07 pm)
பார்வை : 4732

மேலே