சிறப்புக் கவிதை 44 சிந்தா பள்ளி சினேகம்

சத்துணவு சோற்றை
ஒரே தட்டில் பகிர்ந்துண்டு-
*
பள்ளிக்கூட “களவடிப்பி”ல்
கோயில் குளத்து மீன்களுக்கு
பொறியிட்டு மகிழ்ந்து
*
பிரம்படிகள் வலிக்க கூடாதென்று
விபூதியிட்ட உன்
கரம்பற்றி அலைந்து
ஆற்றில் கள்ளக்குளியலுக்கு பின்
உன் ஆடைகளில்
தலைதுவட்டி.....
*
தட்டாமாலைகளின்
விட்டங்களை அளவெடுத்து
அக்கா குருவி கதைகேட்ட
வயல்காட்டில் மேய்ந்து
மகிழ்ந்த காலம் தொலைத்து
*
ஒரு நாள்................
தோட்டக்கூலியாய்
முதலாளியென்று நீ
விளித்த தருணத்தில்
பாழாய் போன பணப்பிணியில்
பலியாகி கதறுதடி -நம்
பள்ளி சினேகம்.

எழுதியவர் : சிந்தா (26-Apr-14, 3:19 pm)
பார்வை : 207

மேலே