காதல் துளி
காதல் ....துளி ....
அவன் பெயர் அருண், வயது இருபத்தியேழு, நல்ல இடத்தில் வேலை, கை நிறைய சம்பளம்.
அன்றும் வழமை போல, வேலை முடித்து திரும்பும் போதுதான், அவள் முகத்தை சந்திக்க நேர்ந்தது, அவளது அழகு முகம் வாடி இருந்தது, அவள் முகத்தை எதிர்கொள்ள , அவன் கண்களுக்கு சக்தி இல்லை.கொஞ்சநாளாகவே, அவன் மனதில் ஒரு சிறு நெருடல்.
'ச்சே...என்னடா வாழ்கை ! எத்தனை காலம் அவள் முகத்தில் முழிக்காம, ஒளிந்து வாழ்வது ? - என்ற சலிப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.
"சித்தப்பா..சித்தப்பா !"- என்று அவன் அண்ணன் மகள் ஓடி வந்து அவன் கால்களை கட்டிக்கொள்ள,
"என்னடா செல்லம் ?"- என்று அவள் தலையை கோதியபடி.
"அண்ணி ...ஒரு கப் காப்பி கிடைக்குமா ?"- என்று கேட்டுவிட்டு, சோபாவில் சாய்ந்து, கண்களை லேசாக மூடிக்கொண்டான்.
'யாரவள் ? கண்களுக்குள் நிழலாடும் அந்த வாடிய முகம் ?'.
ஆமாம் , அவள் பெயர் அர்ச்சனா, அவனுடன் ஒன்றாக காலேஜில் படித்தவள், படிப்பில் இருவருக்கும் அபாரமான போட்டி, அந்த போட்டி நாளடைவில் நெருக்கமான நட்பாக மாறி இருந்திருந்தது.
பரீட்சை நேரங்களில், இரவு பகல் என்று பாராத நெருக்கம், யாரும் தப்பாக நினைக்க தோன்றாத அளவிற்கு நட்பு படிப்பில் வேரூன்றி இருந்தது.ஆனாலும் ஆண் பெண் நட்பு, வயசு பரிமாணங்கள் அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
ஒரு நாள் காலேஜ் விட்டு வீடு திரும்பும் நேரம், கொட்டும் மழையில், ஒரு குடையின் கீழ் பயணித்த கால்கள், குளிர்ந்தபோதும் சூடான உணர்வுகளை அவர்கள் உணராமல் இருந்திருக்கவில்லை பார்வையில்.ஏக்கம் கலந்திருந்த போதும், ஏன் அப்படி ? பார்வையில் இருந்த கேள்விக்கு , அவர்களால் விடை கண்டு கொள்ள முடியவில்லை. படிப்பும் தொடர்ந்தது...பார்வையும் தொடர்ந்தது...
ஒரு முறை பிசிக்ஸ் பாடம் நடந்த போது, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை,
அவள் சொல்ல முடியாமல் தவித்தபோது, அவன் மனமும் தவித்தது.சொந்தமாக யோசித்து சொல்ல வேண்டிய பதில்களுக்கு கூட அவள் புத்தகத்தை புரட்டியது, அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
"அர்ஷா "- செல்லமாக அவளை அவன் எப்போதும் அப்படிதான் கூப்பிடுவான். "சின்ன பசங்க போல பாடத்த மெல்லாம விளங்கி படீன்னு "- திட்டினான்.
"ஆமா நீ பெரிய இவரு, பெரிசா பேச வந்துட்டே,நான்தான் கிளாஸிலேயே பெஸ்ட். . , என்கூட சேர்ந்த அப்புறம்தான் நீ கொஞ்சமாவது படிக்கிறே" "நீயே ஒரு, டியூப் லைட் அதுலயும் பீஸ் போனது, கற்பூர புத்தி ஒன் மண்டைல சுத்தமா இல்ல, சரியான புத்தக பூச்சிடி நீ... ".
"என்னடா ? என்னை பார்த்தா அப்படியா தெரியுது உனக்கு ? ".
"ஆமா...புத்தகத்த புரட்டி மனப்பாடம் பண்ணி கிட்டே இரு, அதான் இன்னைக்கு
பிசிக்ஸ் பாடத்துல பேந்த பேந்த, முழிச்சத நானும் பார்த்தேன்"
-என்று அவன் சொன்ன போது கோபத்தில்அவள் முகம்சிவந்து போனது.
"மனப்பாடம் தானே செய்றேன், உன்ன போல ஒண்ணும் பிட் அடிக்கல"-என்று அவள் சொன்ன போது, அவனோ கோபத்தின் உச்ச கட்டத்தில் நின்றான்
"அப்போ நான் பிட் அடிச்சுதான் பாஸ் பண்ணினேன் என்கிறியா ?"
"உண்மைய சொன்னா ஐயாவுக்கு ஏன் மூக்குமேல கோவம் சுர்ருன்னு வருது ? நம்ம நாட்ட பொறுத்தவரை, பொண்ணுங்கதான் பெஸ்ட், பசங்க ஊர சுத்துறதிலையும், பொண்ணுகள சைட் அடிக்கிறதிலையும் ,பிட் அடிக்கிறதிலையும் தான், பிசியா இருக்கீங்க .."- என்று அவள் சொல்ல ,அவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், கண்கள் சிவந்து மௌனமாக நின்றான்
எப்போதும் இப்படி ஒரு விவாதம் வந்தது இல்லை .தன்னை மட்டும் அவள் கேவலமாக பேசுவது மட்டும் இல்லாமல் ,ஆண் வர்க்கத்தையே அவள் கேவலப்படுத்துவது போன்ற பிரமையை அவளது பேச்சு ஏற்படுத்திக் கொண்டதாக அவன் எண்ணிக்கொண்டான். சில மௌனங்களுக்கு பின் ,அவனே தொடர்ந்தான் . "நீ ..சொன்னது எனக்கு மட்டும் இல்ல, என் வயசு பசங்களையும் சேர்த்துத்தான்..அப்புறம் ஒண்ணு சொன்னியே ..உன் கூட சேர்ந்தப்புறம்தான் நான் ஒழுங்கா படிக்கிறேன்னு. வேணும்னா,ஒண்ணு பண்ணிக்கலாம். "- என்ன என்பதுபோல அவன் முகத்தை பார்த்தாள் அவள்.
"இனிமேல் நான் உன் கூட சேர்ந்து படிக்க போறது இல்ல ,யாரு பெஸ்ட் மார்க் எடுக்கிறதுன்னு பாக்கலாமா? என்ன சாலஞ்?"- என்றபோது அவன் கண்களில் வெறித்தனம் தெரிந்தது .
"அதையும் பாக்கலாம்"- அவளும் விடுவதாக இல்லை. எது எப்படியோ, தன்மானம் இருவரையும் விட்டு வைக்கவில்லை. தனியாக படித்தார்கள்.வெறித்தனமாக படித்தார்கள். தனிமைகள் அவர்களை கொல்லாமல் இல்லை.காணும் போதெல்லாம் கண்களால் பேசி புன்னகையை பரிசாக்க தவறியதும் இல்லை.காதல் துளிர் விட்டு இருந்தும், தன்மானம் பனித்துளி போல படர்ந்திருந்தது. பரீட்சை முடிந்தது ,முடிவுகள் கிடைக்க, இருவரும் ஆவலாக காத்திருந்த நேரம்.
"அருண் ..நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்."- என்ன என்பது போல அவனது பார்வையில் அலட்சியம் இருந்தது .
"பரீட்ஷைல நாம தோத்தாலும் ,வாழ்க்கைல ஜெய்க்கணும்டா"- அவளது ஏக்கம் குரலில் தெரிந்தது.
"ஜெய்க்கிறவங்க பேசலாம் ,தோக்கிறவங்க அதிகம் பேசுறது இல்ல ..நீ பேசு "
"ஏன்டா இப்படி சொல்லுறே ,உனக்கு என்னமோ ஆச்சு ,நீ முன்ன போல இல்ல என்னவோ போல இருக்கே ,அதுதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா "-என்று ஆதங்கத்தோடு அவள் ,அவனை பார்க்க ,
"இந்தா ...உன்னோட ரிப்போட். உன் பர்மிசன் இல்லாமலே வாங்கிட்டேன்" - அவளிடத்தில் சான்றிதழை நீட்ட ,ஆர்வமாய் ஓடிச்சென்று ,ஆவலாய் தனது சான்றிதழை பிரித்து பார்த்தவள் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.சந்தோஷத்தில் துள்ளி குதித்து அவனை கட்டித் தழுவி , "அருண் ..பார்த்தாயா ,கிளாஸிலேயே நாந்தான் பெஸ்ட் மார்க் வாங்கியிருக்கேன் ..டியூப் லைட் மக்குன்னு சொல்லுவியே இப்ப எப்படி ?,"-என்ற வஞ்சகம் இல்லாத சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது. அவனோ ,கட்டி அணைத்த அவளது கைகளை விலக்கி எட்டி நின்றான். எதையுமே புரிந்து கொள்ள தெரியாத வயது அவளிற்கு.
, "சாலன்சில நான் ஜெய்ச்சிட்டேன் .யு ஆர் செகண்ட் ..பசங்க எதுக்கு லாயக்குன்னு ,இப்பவாவது புரிஞ்சுதா உனக்கு ".- முகத்தில் சந்தோசமும் குரலில் பெருமிதமும் தெரிந்தது ஆசையோடு ஓடி வந்து அவன் கண்களை பார்த்தாள் , அவனை பார்க்க பயமாக இருந்தது . ஒரு எதிரியை பார்ப்பது போல , அவன் தன்னை பார்ப்பதை ,முதன் முதலாக அவள் உணர்ந்து , அந்த பார்வையில் தெரிந்த கோபம் ,'தன்னை அவன் வெறுத்து விடுவனோ என்ற பயத்தையும் உண்டாக்கியிருந்தது . "அருண் அப்படி பாக்காதே .. பயமா இருக்கு .. ஆர் யு ஓகே "- என்று அவள் அவன் கைகளை பிடிக்க, அவனோ அவள் கைகளை உதறிவிட்டு , வேகமாக நடந்தான். ஏன் நடந்தான் ? எங்கு நடந்தான்? அவள் கண்களில் படாத தூரம்வரை.அவளோ , தன் மீது நியாயமே இல்லாத கோபமாக அவன் இருப்பதாக, கோபம் கலந்த வேதனை அவளிற்கு அன்று முழுவதும் அவனை அவளால் எங்கும் காண முடியவில்லை.
பல முறை ஃபோன் பண்ணி பார்த்தாள். பதில் இல்லை. அவன் வீட்டிற்க்கு சென்று ,அவனை சந்திப்பதற்கு முயற்சி செய்தாள். அங்கும் அவன் இல்லை . பரீட்சை முடிந்ததால், அவன் உறவுக்காரர் வீட்டிற்கு சென்று விட்டான் . என்ற பதிலே கிடைத்தது. அவளிற்கு வேதனை தாங்க முடியவில்லை . அவன் இல்லாத வாழ்க்கையை அவளால், நினைத்து பார்க்க முடியவில்லை . இது தற்கால பிரிவு என்றும் , அவன் எப்படியும் திரும்பி வருவான் என்றும் ,முழுமையாக நம்பி ஏங்கி காத்து இருந்தாள். நாட்கள் நகர்ந்தது அவனும் வந்தான் . வந்தவன், அவளுடன் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை 'நீ ..வா ... போ ..' என்று அழைத்தவன் , "வாங்க ... போங்க ... என்று மரியாதை கொடுத்து பேசியது , அவளிற்கு என்னவோ போலிருந்தது . "அருண் ..என் மீது உனக்கு அப்படி என்ன கோபம்? என்னை சரியா நிமிர்ந்து கூட பாக்க மட்டேன்கிறாய். நான் என்ன தப்பு செஞ்சேன் ? எனக்கு மரியாதை கொடுத்து பேசி என்னை விட்டு நீ ரொம்ப தூரமா போறது போல இருக்குடா . "- என்று அவள் சொல்ல, அவன் மரக்கட்டை போல நின்றான். . "ஏதாவது பேசுடா ..என் கூட பேச மாட்டாயா ? -என்று அவள் ,அவன் கைகளை பிடித்த போது ,தொண்டை அடைத்தது .வார்த்தைகள் அதற்கு மேல் வர மறுத்தது . அழுவது போல நின்றாள். ஆனால் அவனோ, இரக்கமில்லாதவனாக அவள் கைகளிலிருந்து தன்னை விடுவித்து 'நான் மட்டும் உன்னிடம் தோற்காமல் இருந்திருந்தால் ,என் கைகளில் உன்னை தாங்கியிருப்பேன்' - என்று அவன் உதடு முணுமுணுத்தபோது, அவள் அங்கு இல்லை. அழுது கொண்டு அவள் ஓடுவது தெரிந்தது. அதன் பின் அவன் , அவளை பார்க்கவே இல்லை .
கடந்த ஒன்பது வருடமாக, அவளை சந்திக்கவில்லை . சந்திக்க முயற்சிக்கவும் இல்லை. .
..................................................................... "அருண் ...அருண்.."தூக்கமோ , பழைய நினைவோ , யாரோ தட்டி எழுப்பியது போல இருந்தது, எதிரே அவன் அண்ணி நின்றாள் . "காப்பி சூடா கேட்டே .. கொண்டுவந்து அரை மணி நேரம் ஆச்சு , ஏன்டா ?ஆபீஸில வொர்க் ரொம்ப அதிகமோ?" "இல்ல .. அண்ணி கொஞ்சம் அசதியா,இருந்திச்சு அதுதான் தூங்கிட்டேன்" "அதுசரி .. இன்னிக்கும் மறந்து போச்சா?" " "எது அண்ணி?" "சரியா போச்சு ..பாப்பா ஸ்கூல் ப்ங்ஷனுக்கு தைக்க கொடுத்த ட்ரெஸ்" "ஓ.... அதுவா ... சாரி அண்ணி நாளைக்கு கண்டிப்பா மறக்காம எடுத்து வரேன்.
"என்னவோப்பா .. ரெண்டு மூணு நாளா , இததான் சொல்லுறே ... பாப்பா ஸ்கூல் ப்ங்ஷன் நெருங்கிகிட்டே இருக்கு " - என்றவாறே சமையல் அறைக்குள் நுளைந்தாள். . மறுநாள் காலை , அதே ஆபிஸ் அதே வேலை அதே களைப்பு . 'இன்னைக்காவது மறந்திடாம , பாப்பா ட்ரெஸ்ஸ எடுத்திட்டு போயிடனும் . இதே தெருவில்தான் அவளை பார்த்து இருக்கேன் . சரி நடக்கிறது நடக்கட்டும் யாரையும் நிமிர்ந்து பார்க்ககூடாது-' என்று அவன் மனதுக்குள் நினைத்தாலும் , அவன் கண்கள் அங்கும் இங்கும் அலை பாயாமல் இல்லை . அவளது முகம் காணாதவரை, நிம்மதி பெருமூச்சு விட்டவாறு தையல் கடைக்குள் நுழைந்தான் .
அங்கே ஒரு வயசானவர் கையிலே ,கத்திரிக்கோலும் , கழுத்திலே ரிப்பனோடும் காவிப்பல் தெரிய, நின்றுகொண்டு இருக்க , ரசீதை அவரிடம் நீட்டினான் . அதை வாங்கி பார்த்த பெரியவர், கொஞ்சம் யோசித்துவிட்டு , "இந்தாப்பா...யாருப்பா.. ஸ்கூல் ப்ங்ஷன் ட்ரெஸ் தைக்கிறது ?" -அங்கு ஆறுபேர் மும்மரமாக தைத்து கொண்டு இருந்தார்கள். "சார் அது என்கிட்டதான் இருக்கு.. ஒரு பத்து நிமிஷம் கொடுத்தீங்கன்னா, முடிச்சு கொடுத்துர்றேன்". - குரல் வந்த திசை நோக்கி பார்த்தான்.அவன் கண்கள் அவனை ஏமாற்றி இருந்தது. யாரை அவன் பார்க்க கூடாது என்று இருந்தானோ , அங்கு அவள் தைத்து கொண்டு இருந்தாள் .நினைவா..கனவா.. கண்கள் நம்ப மறுக்க கொஞ்சநேரம் அவன் அப்படியே உறைந்து இருந்தான். மறுபடி அவளை பார்க்க அவன் கண்கள் தூண்ட, உன்னிப்பாக அவள் முகத்தை நோக்கினான். அவளோ, அலட்சியமாக அவனை ஒரு முறை பார்த்துவிட்டு, தையலில் மூழ்கினாள். 'ஏன் இவள் இங்கு வந்தாள்? இங்கு இவள் என்ன செய்கிறாள் ?-'மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை காண முடியாமல் அவன் மூளை வறண்டு போனது. "சார் .. முடிஞ்சிடுச்சு "- தைத்த சட்டையை முதலாளியிடம் கொடுத்து விட்டு , "சார் நான் இப்ப கிளம்பலாமா ?"
"சரிம்மா" - முதலாளி ஒப்புதல் கொடுக்க , கைப்பையை தூக்கி தோழில் போட்டுக்கொண்டு, தையல் கடையை விட்டு வெளியேறினாள் . "சார்.. இந்தாங்க உங்க ட்ரெஸ். "- பெரியவர் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை. சட்டை பையை எடுத்தவன் , அவள் போன திசையை நோக்கி நடக்க தொடங்கினான் . வேகமாக அவளை பின்பற்றி நெருங்கிவிட்டான். "அர்ஷா"- மெதுவாக அழைத்தான். அவள் வேகம் நடையில் இருந்தது . "அர்ஷனா... அர்ஷனா .".- அவன் குரல் இப்போது மேலோங்கி இருந்தது. "அர்ஷா .. என்னை தெரியலையா?"- அவள் குறுக்கே ஓடிவந்து நின்று அவன் கேட்க , பதிலுக்கு அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு , "யார் சார் நீங்க...? எதுக்கு வழி மறிக்கிறீங்க?"
"அர்ஷா .. என்னை உனக்கு தெரியலையா?" "சார் .. நான் ஒண்ணும் குருடி இல்ல ..முன்னாடி நிக்கிற உங்கள எனக்கு நல்லா தெரியிது
..ஆனா நீங்க யாருன்னு தான்எனக்கு புரியல". " ப்ளீஸ் அர்ஷா நான் உன் கூட.. கொஞ்சம் பேசணும்." "சரி...என்ன பேசணும்?- வெறுப்போடு கேட்டாள். " நா .. உன்னை இங்கு எதிர் பாக்கல". "அப்ப..எங்க எதிர்பார்த்தீங்க?
"உன்னோட தகுதிக்கு ப்பாரின்ல ..நல்ல இடத்துல சந்தோசமா இருப்பேன்னு நெனச்சேன் " " நல்ல இடம்னா? " உன்னோட தகுதிக்கு ஒரு யூகே இல்ல.. ஒரு யு எஸ் ஏ.. அப்படி எதிர்பார்த்தேன். " ஏன் இந்தியா நல்ல இடம் இல்லையா?" "நான் அப்படி சொல்லல,நீ. .. இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல ..நீ படிச்ச படிப்புக்கு தையல் வேலை பண்ணிக்கிட்டு இருக்கே ,அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. " " சார்.. நீங்கல்லாம் பெரிய இடத்து பசங்க ,கஷ்டம்னா ,என்னன்னே தெரியாது , நாமெல்லாம் அப்படி இல்ல சார் " "அர்ஷா.. ஏன் இப்படியெல்லாம் பேசுறே .. உன்னை பாக்க கூடாதுன்னுதான் நெனச்சேன் ,ஆனா இப்படி உன்னை பாப்பேன்னு நான் கனவுல கூடநெனைக்கல " சார் ... லைப் என்கிறது ஏற்ற தாழ்வு நெறைஞ்சது .. அப்ப நான் ஏறி நின்னேன். இப்ப .. இறங்கி இருக்கேன்...அவ்வளவுதான் "- என்று அவள் பெருமூச்சு விட்டாள்
"அர்ஷா..முதல்ல , என்னை.. நீங்க ,வாங்கன்னு பேசுறத நிறுத்து "
" சார் .. இதே வார்த்தையை நீங்க என்கிட்ட சொன்ன போது, என் மனசு எவ்வளவு தவிச்சது " "சாரி.. அர்ஷா .உன்னை புரிஞ்சுக்கிற மனநிலையோ ,வயசோ எனக்கு அப்ப இல்ல " " அப்போ இப்ப புரிஞ்சு போச்சா?" - ஏளனம் கலந்த பார்வையில் அவளது கோபம் தெரிந்தது. "ப்ளீஸ் ..நான் உன் கூட விவாதம் பண்ண வரல...இதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறே " " சாரி .. நடந்துக்கிட்டே பேசலாமா?"- மெதுவாக இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
சில மௌனங்களின் பின் , அவளே தொடர்ந்தாள். "அருண் .. நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டியே"- என்ன என்பது போல அவன் பார்வையாலே கேட்டான்.
"நீ இப்ப கூட அப்படித்தானே இருக்கே" " ஏன் அப்படி சொல்லுறே"
"உன் மனசுல அதே ஈகோ இப்பவும் இருக்கு , நீ மாறவே இல்ல ..இப்ப நான் தாழ்ந்து இருக்கேன் .அதனால நீ .. என்னை தேடி வந்தே ,நான் நல்ல இடத்தில இருந்திருந்தா என்னை நீ , நெனைச்சே பார்த்து இருக்கமாட்டே , மனசு என்கிறது , ஏற்ற தாழ்வு பாக்காதது, இந்த ஒன்பது வருஷத்துல எப்பவாவது நீ .. என்னை நெனைச்சு பார்த்து இருப்பியா ? நான் என்ன செஞ்சேன்? எங்கு போனேன்? ,என்ன ஆனேன்?,ஒரு நிமிஷமாவது ஜோசிச்சு இருப்பியா? - என்று அவள் சொன்ன போது குற்ற உணர்வோடு தலை குனிந்து நின்றான்.
"நீ . .. போனதுக்கு அப்புறம் நான் ரொம்ப உடைஞ்சு போய்ட்டேன் உன்னை தேடாத இடமே இல்ல. என் அப்பா வேற ஒரு கார் ஆக்சிடென்ட்ல கால ,இழந்துட்டாரு. குடும்பத்துல மூத்த பொண்ணு நான் . குடும்ப பொறுப்பு என் தலை மேல விழுந்திடுச்சு என்னால படிப்ப தொடர முடியல .." - என்று அவள் வேதனையோடு சொன்ன போது, அவளது வீடு நெருங்கி இருந்திருந்தது . "அருண் ,இதுதான் என் வீடு.. உள்ள வாயேன் "
அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது, என்று அறிகின்ற ஆர்வத்தில் அவனும் , அவளை தொடந்து உள்ளே நுழைந்தான்.அவள் வீட்டு முற்றத்தில் ஆட்டோ ஒன்று, அனாதையாக நின்றிருந்தது . வீட்டு சாவியை எடுத்து கதவை அவள் திறந்தாள்.
"உள்ளே வா .. அருண் "-என்று அவள் சொல்ல, இரண்டு குழந்தைகள் ,அவளை , "அம்மா " - என்று கட்டி தழுவி கொண்டன . "இதுதான் என் மூத்த பொண்ணு ,வயசு நாலு , இது என் பையன் ரெண்டு வயசு ஆகுது" - என்றவாறு குழந்தைகளுக்கு முத்தங்களை பொழிந்துவிட்டு "அங்கிளுக்கு ஒரு வணக்கம் சொல்லு "- அதுவும் ,
"வணக்கம்" - என்றது மழலை மொழியில்.
" "என்னங்க .. என்னங்க .. "- உள்ளே இருந்து வந்தவன் , மிகவும் களைத்து இருந்தான்.
"என்னங்க பண்ணுறீங்க உள்ள" - பாசத்தோடு அவள் கேட்க , "சமையல் ஆவுது" - என்றான். "நான் வந்து பண்ணமட்டேனா"- என்று உரிமையோடு கோபித்துகொண்டு , "சொல்ல மறந்திட்டேன் .. இவர்தான் அருண் "- தன் கணவனுக்கு ,அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.அருணோ , பிரமித்து பித்து பிடித்தவன் போல நின்றான் , "அருண் .. நான் இவர் கிட்ட ,உன்னைபத்தி எல்லாம் சொல்லி இருக்கேன் .இவர் ரொம்ப நல்லவரு . ஆட்டோ ஓடித்தான் பொழைப்பு நடக்குது , ஆனாலும் என்னை ரொம்ப சந்தோசமா வைச்சு இருக்காரு , என் குடும்பம் நடுதெருவில நின்ன போது , இவர்தான் ரொம்ப உதவினாரு, என் ரெண்டு தங்கைகளையும் படிபிச்சு , அவங்கள ஒரு இடத்துல கட்டிக் கொடுகிறவரை, எனக்கு பக்கபலமா இருந்தாரு,எனக்காக ,என் குடும்பத்துக்காக கஷ்டபட்டவருக்கு,கொடுக்கிறதுக்கு என் கிட்ட , அன்பை தவிர வேறொண்ணும் இல்ல. அதுதான் கொடுத்துட்டேன் - என்றவாறு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அவள் சொல்வதையெல்லாம் கேட்டு அவன் , அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவனுக்கு , பேச வார்த்தைகள் வரவில்லை. "அப்ப.... நான் கிளம்பட்டுமா? " என்ன சார் வந்ததும் கிளம்பிறேன்கிறீங்க ஏதாவது சாப்பிட்டு போகலாமே"- என்று அவள் கணவன் சொல்ல , "பரவாயில்ல .. இன்னொருநாள் பாத்துக்கலாம் .. உங்களை எல்லாம் பார்த்ததுல ரொம்ப சந்தோசம் "- என்று அந்த பிஞ்சு குழந்தைகள் கன்னத்தில் முத்தம் இட்டு, வெளியே வந்தான் அவளும் வாசல் வரை பின் தொடர்ந்து வந்து , "அருண்"- என்ன என்பது போல அவன் திரும்பி பார்க்க , அவளே தொடர்ந்தாள் "கடைசியாக நான் உன்கிட்ட ஒண்ணு.. சொல்லணும் .. அருண் நீ .. என் மேல வைச்சது, காதல் துளி ..அவர் என்மேல வைச்சது , அன்புக்கடல். கடல் முன்னாடி துளி , காணாம போச்சுடா. காதல் துளி என்கிறது , எல்லார் மனசிலும் எங்காவது ஒளிஞ்சு இருந்திருக்கும். .அது கால ஓட்டத்தில காணாம போய் இருந்திருக்கும் . கடலாக .. நீ இருந்திருந்தால் ... நான் உன்னில் முழ்கி இருந்திருப்பேன். ஆனா. நீ .. காணாமல்ல போய்ட்டே " - என்று அவள் சொன்ன போது, காதல் துளி, கண்ணீர்துளியாய் மாறி இருந்தது. அவளிடம் இருந்து விடை பெற்றான் . தெரு விளக்குகள் மின்னிக்கொண்டிருந்த போதும் , அவன் கண்கள் மங்கலாக இருந்தது.கண்களில் இருந்த பனித்துளிகளால் ....... வாழ்க்கையில் செய்த தவறுகளை சிந்திக்க வைப்பதற்கு , சில காயங்கள் தேவைப்படுகிறது .
- நன்றி -
- என்றும் மாணவனாக -
எஸ் .ஜி .உதயசீலன்.
"
.
,
;