உன் குரல்

உன் குரலை
என் காதுகள்
கேட்டுக்கொண்டிருக்கவில்லை !
குடித்துக்கொண்டிருக்கின்றன !
===========================================
விரலால் அல்ல
உன் குரலால்
மீட்டப்படுகின்றன
என்
இன்ப நரம்புகள் !
===========================================
கரகரப்ரியா என்பது
உன்
தொண்டைச்செருமல் தானே !
===========================================
சொர்க்கத்தின்
அலைவரிசையிலிருந்து
உன் குரல்
ஒலிபரப்பாகிறது !
===========================================
உன்
பேச்சின் லயத்தில்
ஒளிந்திருக்கலாம்
மழை கொண்டுவரும்
ராகமொன்று !
===========================================
கரப்பான் பூச்சியைப்
பார்த்து
நீ
குரலெடுத்துக் கத்தினால்
அது
பட்டாம்பூச்சியாக
மாறக்கூடும் !
===========================================
கோபமான குரலில்
ஒரு குழந்தையை
அதட்டிக் கொண்டிருந்தாய் !
குழந்தையோ
சிரித்துக்கொண்டிருந்தது !
===========================================
மழை போன்ற
உன் பேச்சிற்கு
உன் புன்னகை
வானவில் !
உன் சிரிப்பு
ஆலங்கட்டி !
===========================================
மழை நனைத்த
மரமொன்று
காற்றில்
சிலுசிலுப்பதைப்
போலிருக்கிறது
ஜலதோஷம் பிடித்த
உன் குரல் !
===========================================
உன் வீட்டுக்
குளியலறை சுவர்களிடம்
கேட்டு வாங்கிக்கொடேன்
நீ
முணுமுணுத்த
பாடல்களை !
===========================================
இசைக்கருவியே
என் உதடுகளால்
உன்னை
வாசித்துப்பார்க்கலாமா ?
===========================================
மயிலிறகு
வருடல்களை
வார்த்தைகளாக்கினால்
உன் குரல் !
===========================================
உன் பேச்சில்
கலந்திருக்கும்
ஒருதுளி ஆண்மைதான்
எனக்கு
போதையூட்டுகிறதோ ?
===========================================
உன் குரலிலிருந்தும்
மின்சாரம்
எடுக்கலாம் !
===========================================
நீ
தலையணை மந்திரம்
போட்டால்
சத்தியமாய் நான்
மயங்கி விடுவேன் !
===========================================
உன் குரல்
என் காதுகள்
தின்னும்
சாக்லெட் !
===========================================
கலைமகளின்
வீணை வாசிப்பு
கேட்டுக்கொண்டே
பிரம்மன்
உன் குரலைப்
படைத்திருப்பானோ ?
===========================================
ஒருவேளை
நான்
செத்துவிட்டால்
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிரு !
பிழைத்தாலும்
பிழைத்துவிடுவேன் !