சிறப்புக்கவிதை 53 காளியப்பன் எசக்கியேல் புத்தம் புதுச் சமுதாயம்
பயப்படாதே!
ஆயத்தப்படு!
தேடு
ஞானத்தை
புத்தியை
சத்தமிட்டழை!
புதிய சமுதாயம்
புதிய அரசாட்சி
‘தேவனிடத்திலா’?
உன்னிடத்தில்
உங்களிடத்தில்
உங்களுக்குள்
கடுகிலும் சிறிய
விதையிலிருந்து மரம்
பல பறவைகளுக்கு
இருப்பிடமாக!
புதிய சமுதாயம் வேண்டுபவர்களே!
புதுப்பித்துக் கொள்ளுங்கள்
உங்களை நீங்களே!
ஆயத்தப்படுங்கள்
அதற்காக இப்பொழுதே!
உருவாக்கப் போகிறவனை
உழைக்கப் போகிறவனை
உங்கள் விரல்களா
சுட்டப் போகிறது?
நீட்டுங்கள் அந்த விரல்களை
போட்டு விடுகிறோம்
ஒரு புள்ளி
சுட்டுவது நிற்கட்டும்
செய்வது தொடரட்டும்
தேடுகின்ற சுட்டு விரல்கள்
திருந்தட்டும்
எப்பொழுதோ
வைத்துவிட்டோம் புள்ளியை!
இனித் தேடல்கள்
உமக்குள்ளே திரும்பட்டும்!
உழைப்பவனையும்
உருவாக்கப் போகிறவனையும்
உங்களுக்குள் தேடுங்கள்!
விழித்தெழுங்கள்!
ஞானத்தைச் சம்பாதியுங்கள்!
புத்தியைச் சம்பாதியுங்கள்!
அதன்மேல் பிரியமாயிருங்கள்!
அது உங்களைக் காத்துக்கொள்ளும்!
ஞானத்தையும் புத்தியையும்
மேன்மைப்படுத்துங்கள்!
அது உங்களை மேன்மைப்படுத்தும்!
உங்கள் தலையை
அலங்கரிக்கும்! கனப்படுத்தும்!
‘புதிய அரசாட்சி’
உங்களுடையது
உங்களுக்கானது
உங்களால் ஆகட்டும்
+++ =============== ++++ =