எனக்கு நான்
பொறுத்திருந்து வாழ்வதுதான்
பொல்லாத விதியென்றால்
அறுத்துவிடு அத்தனையும்
அகலவிடு உன்பார்வை
சிறுத்திருக்கும் விதைமரமாய்..!
சிந்தனையில் நிலைநிறுத்து !
வெறுத்தொதுக்கி விலகுவதால்
விளையும்பயன் ஒன்றில்லை !!
பிறப்பில் ஒரு நன்மையுண்டு
பிறர் பற்றி மறந்துவிடு
திறக்கும் ஒரு புதுகதவு
தீவிரமாய் ஊடுருவு
சிறப்பில்லா வாழ்க்கையிலும்
சில விஷயம் புரியவரும்
இறப்பில் நீ இறப்பதில்லை
என்ற உண்மை தெரியவரும்
நன்மைகளின் தீமைகளின்
நடுநிலையில் நின்றுவிடு
மென்மையோ கடுமையோ
முழுமையாய் கொன்றுவிடு
உண்மையை உள்மனதில்
உயிர்போல ஒட்டிவிடு
பன்மையில்தான் பாவங்கள்!
ஒருமையிலே ஒன்றிவிடு..