மறுபக்கங்கள் - மீள்
மறுபக்கங்கள்
இறக்கைத் துடுப்புகளில்
ஒரு வானஞ்சல் உளவாடல்
காற்றினிமைத் திவலைகளாய்
அடையுண்டுக்கிடக்கும்
பூடகத்தெளிவின்மைகள்
நினைவொட்டிச்சுவற்றில்
நாவெனும் மெழுகுவிரிசிலாலான
நிறமற்ற எச்சில் தடயங்கள்
கெட்டுப்போன நிலைவட்டில்
சேமித்துவைத்த நகைப்படச் செருகேடு
வானெல்லையில்
கவிதை வரைந்திடுமொரு
கற்பனைமுனைத்தூவல்
மதியலை தழுவிடும் மனங்களோடு
மதிக்கொரு இமிரி இணைப்பு
உணர்வகற்றிகளின் நழுவிடுக்கியாக
நகர்பேசி நகர்தலோடு
வனையோட்டில் வழுக்கிய கால்கள்
செயலுக்குஞ் சொல்லுக்குமிடையே
எழுத்துருவாக விளங்கிடும்
சக்கரவியூகங்கள்
விரைவுசாலை தொடர்நடைப்பயணத்தில்
புனைக்கதைபேசிய நனவுகள்
மிடற்றொலி எழுத்தின் போலிகை நிகரி
அலைவெண் வரிசைகளில்
திடப்படுத்தப்பட்ட பொக்கீடு
பிணையாளியில்லா
விசைப்பொறி இயக்கம்போல
முடிவில்லாத அறிதுயில் மனவாசம்
ஊற்றுழியுரைத்திடும்
இயங்கொலியாக எண்கடிகை
இடையுறக்கத்தின் நடுவே
துவேசமூட்டிடும் அலறிச்சத்தங்கள்
நிழற்படவியால் கவரப் பட்டுவிட்ட
அசைந்திடா தளவாடங்கள்
எரியிழையற்ற கனவு துவாரங்களோடு
பறிபோன விழிகளின்
அகவிலைப்படிகளாக சில அறைகூவல்கள்
கதிரை தள்ளாட்ட சாய்வுகளோடு
தோன்றிடுங் கியாழம்
புகைக் கூண்டின்
திசையறியா போக்குகளாக
வாழ்க்கை வாராவதியென
உபாதைகள் தேடிடும்
ஐந்தொகை குறிப்பேடுகள் சில
தேங்கிக்கிழிந்த கித்தான்களாக
அனுசரன்