யோசனைகள்

யோசனைகள்

தீயிடைப்பட்ட
புழுக்களையுண்ட
தீப்பிளவுகளுக்கே தெரியும்
அதனது சுவை ...

வறுமைக்குள் அகப்பட்ட
அகப்பையே
கழுவக் கிடக்கும்போது
மறுக்கின்றது ...

போதனைகளில்
ஒளிந்துகிடக்கும்
பிரம்படிகள்
தண்டனையாக்கப்படுகின்றது
காலத்தின் கைப்பிடியில் ...

தினசரி
பூக்கும் செடிகளில்
அதிகாலைப் பனித்துளிகள்
ஊக்குவிப்பு முத்தங்களாய்....

ஒன்று திரளும்
மேகங்களைக் கலைக்கின்றாள்
கூனியொருத்தி
காற்றின் கோலூன்றி ....

எந்தச் சாலைகளும்
முறுவலிப்பபதில்லை
மைல் கற்களின்றி....

கடவுளோடு
பேசுகின்றாள் குழந்தை
கடவுளின் பதில்
அவளின் அடுத்த கேள்வியில்....

விசிறியடித்துச் தாலாட்டும்
தென்னங்கீற்றுகளின்
மடியில்
தலைசாய்க்கின்றது
நிலா ...

வேப்பம்பூக்களின்
கன்னங்கள் தடவிப்பார்த்து
மிழற்றுகின்றது
மழலைத் தென்றல்...

முச்சந்தியில்
தீக்குளிக்கும் உடல்களில்
மிஞ்சுவதற்கு எதுவுமில்லை
திருஷ்டிக் கற்பூரங்கள் ...

ஒரு ஊதலில்
அடங்கிப்போகின்றது
ஊர்க்காவல் ...

அணைக்கப்பட்ட விளக்குகளில்
கூடுவிட்டுக் கூடு
பாய்கின்றது இருள் ....

மொழியின் மாறுவேடம்
விழிகளில்
மேடையேற்றம்
காதல்.....

எழுதியவர் : புலமி (30-Apr-14, 1:14 am)
பார்வை : 160

சிறந்த கவிதைகள்

மேலே