ஞானக் கீற்று----அஹமது அலி----

வெகுமதிகள்
ஏற்றுக் கொள்ளப்படாத போது
திரும்பப் பெறுவது போல்
அவமதிப்புகளும்
அவ்வாறே திரும்பும்!
()()
கால நிர்ணயத்திற்குள்
முறையான அனுபவித்தலுக்கு
உலகம் மிகச் சிறந்தது
சொந்தம் கொண்டாடுவதற்குள்
பந்தம் அறுக்கும்!
()()
பயமென்ற குளத்தை
எட்ட நின்று எட்டிப் பார்த்தால்
பார்க்கும் முகம் கொண்டே
பயமுறுத்தும்
குதித்து விட பயம்
கரையேறும்!
()()
எரிகின்ற தீபத்திடம்
வெளிச்சம் எங்கிருந்து வந்ததென்று
பகுத்தறிவு கேள்வி கேட்டது
தீபம் அணைந்து ......
வெளிச்சம் எங்கு போனதென்று
பகுத்தறிவிடம் கேள்வி கேட்டது!
()()
இலக்கை அடையும் வரை
வழிகாட்டி சுகப்படலாம்
இலக்கை அடைந்தவுடன்
வழிகாட்டி சுமையாகலாம்
திரும்பும் வழியும் மறக்கலாம்
அடைந்த இலக்கு சரியா?
()()
உலகம் திறந்தே கிடக்கிறது
அதற்கொரு மூடியில்லை
அள்ள நினைப்பதை விட
முயற்சிக்கே பலன் முயற்சி!
()()
உலகத்தில் உள்ளதை விட
உன்னிடம் உள்ள பொக்கிஷங்கள்
மதிப்பு மிக்கவை
இப்போது ஏழை என்போன் யார்.?