நான் நானாகப் போகிறேன்
நான்
இனி
சிரிக்கப் போகிறேன்
ஸ்பரிசம் உணரப் போகிறேன்
சத்தமிடப் போகிறேன்
தண்டவாளத்தில்
நடைபோடப் போகிறேன்...
ரயில் வந்தால்
தள்ளி நின்று
கையசைக்க போகிறேன் ...
பறந்து செல்லும் பட்சிகளை
பார்த்து வாய் பிளக்க போகிறேன் ...
மலர்ந்து விட்ட மொட்டிடம்
கதை அளக்கப் போகிறேன் ...
பட்டம் விட்டு சலித்துப் போய்
பறக்க விடப் போகிறேன் ...
மழலையில் மயங்கப் போகிறேன் ...
முடிந்தால் வாரி அணைத்து
கொஞ்சி விட போகிறேன் ...
அறிவுரைகளை
அள்ளி வழங்கப் போகிறேன் ...
கிறுக்கி விட்டு
கிழித்து விடப் போகிறேன் ...
சரி என்றால் சரியென்றும்
தவறென்றால் தவறென்றும்
திட்டவட்டமாய் கூறப் போகிறேன் ...
எழுத்து சுதந்திரம்
எதுவென்று
பட்டவர்த்தனம் செய்யப் போகிறேன் ...
நினைத்ததை நடத்தியே
முடிக்கப் போகிறேன் ...
பிழையென்றால் உணர்ந்துருகி
அழுது விடப் போகிறேன் ...
நான்
இனி
வாழப் போகிறேன்...
நான் நானாகப் போகிறேன் !
எப்போதும்
பட்டுப் புழுவாகவே
கொன்றுவிட்டு
சுகித்து உறங்கும்
உங்களால்
இன்று
முளைத்து விட்ட
என் சிறகுகளை
என்ன
செய்து விடக் கூடும்???