கல்லறை சாமந்தி
கல்லறை சாமந்தி
================
தூரச்சென்று மறைகின்றது
உடைபட்டப் பெண்மையின்
அச்சறுந்த சாமந்தி ,,,
அவ்விருண்ட பாகத்தினுள்ளே
கண்ணீர்க் கிழித்துப்
புறப்படுங் காற்றே
துளித் தடவிச் செல்
அவள் சுருண்டு விசும்பிக் கிடக்கின்ற
அக்கல்லறையை,,,
ஆறுதலுக்கல்ல
என் ஆற்றாமையைச் சொல்ல,,
நுனியில் இழையோடிய
என் சர்வாதிகாரமெல்லாம்
நேசிப்புக்களமல்ல
வதைசிக்ஷை என்றெண்ணிய உழி
உணவுக்குழலுக்குள்
சிக்குண்டுப் புரையேறிய
ஆழ்பருக்கை மிச்சங்களாக
என் உடல்பொருளாவியின்
தான்தோன்றல் அசைகளை
தொட்டுவிட்டது
இன்றுன் கடைவிரல்,,
அன்று பதிந்துபோன
பாதிராத்திரி விதைகளை
ஆறச் சுவைத்த அவளுதட்டுவாசம்
சர்வார கட்டியால்
என் ஆக்கையை இன்றெல்லாம்
எத்தனைமுறை
சலவைசெய்தப் பொழுதும்
மறையாமலும் விலகாமலும் ,,,
அனுசரன்