திசைமாறும் திருப்பங்கள்

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு
வெளியேற்றி எனை
வெறியேற்றிய
அந்த நிமிடங்கள் வரை
நானும் சுகவாசிதான்.

பயப்படாதீர்..!
பொறாமை தீ
வீசிடமாட்டேன்.
நான் இப்போது
பக்குவ ஆலயத்தை
மனதில் கட்டிவருகிறேன்.
உதவி வேண்டுமெனில்
கூவி அழையுங்கள்
என் பாய்மரப்படகு கூட
உங்கள் திசைநோக்கி
உயிரையும் உங்கள்
உடன்பிறவா
செல்வங்களையும்
காப்பாற்றும்.
உங்கள் கப்பல்
கவிழும் எனில்.....!

இதை கேளுங்கள்
எதிரி துரோகிகளே...!
எனை எரித்த தீ நாக்குகளே..!
இப்போதுதான்
நான் பணக்காரன்..!

நட்பு தென்றலின்
வருடல்கள்.
உப்பு கண்ணீரில்
இனிப்புக்கள்
அன்பு மீன்களின்
கரிசனங்கள்
என்று
இனிதாய்
பயணிக்கிறேன்.

தாக்குதல் திருப்பங்களை
தாங்கித் திருத்தி
பாய்மரப்படகில்...
சரியான திசையில்...
இந்த
உலகக் கடலில்...!
சந்தோஷமாக...
நிம்மதி செல்வத்தோடு
நானும் பணக்காரனாக
பயணிக்கிறேன்
கையில் ஒத்த ரூபாயின்றி...!

----------------------------------------------------------------------------

---இரா.சந்தோஷ் குமார்.


***படைப்புக்கு தலைப்பு கொடுத்து உதவிய “ கவி பாரதி “ க்கு நன்றிகள்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (30-Apr-14, 5:18 pm)
பார்வை : 7631

புதிய படைப்புகள்

மேலே