மேயில் மேயும் மந்தை

வேலிகள் எல்லாம் கூலிக்கு
மாரடித்தது
கூலிகள் எல்லாம் கூழுக்குத்
தேரிழுத்தது

மதங்களில் மாதக் கணக்காய்
சதங்களைத் தேடிய கூலி
ரதங்கள் யாத்திரை செய்யும்
ரிதங்களில் நித்திரை கொண்டது

வேலையில்லாதவன் ஆட்சி செய்ய
வேலையாளி உழைத்துக் கொடுத்தான்
ஆட்சியாளன் உறிஞ்சிக் குடிக்க
வேலைக்காரன் வேலை இழந்தான்

வேளைக்கு உணவு கிடைக்க
வேளைக்கு வேலை செய்யணும்
நாளைக்கும் மிச்சம் வைக்க
வேலைக்குள் வேலை செய்யணும்

தொழிலாளர் தினம் வந்தால்
விடுமுறை கொடுத்து தொழிலழி
தொழிலாளர் மனம் நொந்தால்
விடுமுறை செய்யும் தொழிலளி

கூலியின் வலி மறைக்க
கூடவே மது இருக்கு
கூலியின் வழி மறைக்க
நாடியே இது இருக்கு

வாயில் விருந்தை ஊட்ட
வாயில் தேடும் தந்தை
மெய்யில் வியர்வை கொட்டும்
மேயில் தேறுமா சிந்தை?

தினம் மேயும் மந்தைகள்
மே தினத்தில் ஊர்வலமாய்
தினம் தேயும் எந்தையின்
ரணம் ஆற்ற வந்திடுமா?

எழுதியவர் : மது மதி (1-May-14, 3:32 am)
பார்வை : 1291

மேலே