சுவாதியின் குரல்
பாவியரே பாவியரே
யாருக்கு வைத்தீரோ
பாவியாய்ப் பிறந்தேனோ
பலிகடா நானானேன் !
குண்டூசி குத்தினாலே
கூப்பாடு போடுவேனே
குண்டுதனை வெடிக்கவைத்து
கூற்றனிடம் அனுப்புனீரோ ?
படித்துமுடித்து பட்டம்பெற்று
பெங்களூரில் பணியமர்ந்து
பணத்தோடு வருகையிலே
வெடிகுண்டால் சிதைந்தேனே !
கனவுகளை விழியில்தேக்கி
கவுகாத்தி விரைவுவண்டியேறி
பிறந்தஊர் வருமுன்னே
பிணமாகிப் போனேனே !
ஆவியாய்க் கதறுகிறேன்
பாவியரே கேட்கிறதா
பெற்றோரைப் பார்க்குமுன்னே
பொட்டலமாய் ஆனேனே !
மூவெட்டு வயதினிலே
மூன்றுமுடிச்சு கழுத்திலேற
மாதமிரண்டு இருக்கையிலே
மரிப்பதுதான் என்விதியோ ?
பாடுபட்டு படிக்கவைத்த
பாசமுள்ள தாய்தந்தைக்கு
பரிசுவாங்கிப் போகையிலே
பலியானேன் பெட்டியிலே !
மணக்கோலம் காணும்மகளை
பிணக்கோலத்தில் பார்க்கநேர்ந்தால்
பெற்றவுள்ளம் துடித்திடுமே
மனமிடிந்து ஒடிந்திடுமே !
என்நிலை இப்பூமியிலே
எதிரிக்கும் வரவேண்டா
முடிவுரையாய் நானிருப்பேன்
முற்றுப்புள்ளி வைத்திடுவீர் !
பொசுங்கட்டும் பயங்கரவாதம்
தொலையட்டும் தீவிரவாதம்
மடியட்டும் மதவாதம்
பூக்கட்டும் மண்ணில்மனிதம் ....!!!