எழிலாட்சி

கள்ளாட்சி செய்வதற்கு
==கடைதிறந்து வைத்தோரே
முள்ளாட்சி செய்வதையே
==முன்னெடுத்து செல்வோரே
உள்ளங்கள் வென்றிங்கே
==உயர்நிலைக்கு போனபின்னே
கொள்கையிலே மரந்தாவும்
==குரங்கினத்தை வென்றோரே..
நல்லாட்சி புரிவதிலே
==நாமிங்கு முதலென்று
சொல்லாட்சி புரிவதிலே
==சுவையாட்சி கொண்டோரே
நெல்லாட்சி செய்கின்ற
==நிலமெங்கும் காடாக்கி
புல்லாட்சி செய்வதையே
==புகழாட்சி என்பீரோ?
வனமாட்சி செய்கின்ற
==வனப்பெல்லாம் சீரழித்து
உனதாட்சிக் காலத்தில்
==ஊரெல்லாம் வீதியாக்கி
மனசாட்சி புதைக்கின்ற
==மயானமாய் மனசாண்டு
கனக்கின்ற சுமையாலே
==களைப்பதுவோ அரசாட்சி?
அரசாட்சி செய்வோரும்
== அகமகிழ்ந்து உண்பதற்கு
அரிசியாட்சி செய்தாலே
==அன்னமதில் கைவைக்க
வரவேண்டும் என்கின்ற
==வழக்கத்தை நன்குணர்ந்து
விரலோடு சோறள்ள
==விவசாயம் உரமூட்டு.
மண்மீது விதையிட்டு
==முளைத்தரும்ப இருக்கின்ற
பொன்னள்ளிக் கொடுத்தாலும்
==புத்துணர்ச்சிப் பெற்றெழும்ப
கண்திறக்கும் விதையெல்லாம்
==காசுக்கு விலைபோகும்
கண்ணிருந்தும் குருடான
==காசில்லா ஏழையல்ல
விதைபோட்டு பயிராக்க
==வியர்வையொடு உதிரத்தை
நிதந்தோரும் சிந்துகிற்ற
==நம்முழவன் கையுயர்த்தி
சதையோடு நகமாக
==சகாஅவனை அரவணைத்தே
எதைநீயும் ஆண்டாலும்
==எழிலாட்சி ஆகாதோ?