காற்று வெளியிடை
என் மேனி சிலிர்க்கவைக்கும்
உன் ஸ்பரிசம்
உணர்த்துகிறது
என்னிலும்
என்னைச் சுற்றிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
உனதிருப்பை !
நீ வலம்வரும்
பாதையெங்கிலும்
உன் தழுவலின்
சுகந்தத்தை
அள்ளி வருகிறாய்
என் சுவாசப் பை நிரப்ப !
புனல் வழி நடத்தலின்
சில்லிடலையும்
சித்திரை மணல்மேடுகளுக்கிடையில்
வெப்பத்தையும் தருவிக்கிறாய் !
மெல்லக் கொடியசைத்து
தென்னை தலை தடவி
பசும்வயல் நாற்று நீவி
அலைகடல் ஸ்வரம் பாடி
தீயின் நா நடனம் புரிந்து
ஆல் அழித்து ,நாணல் மடக்கி
புயலென
நீ நடத்தும்
சிலநேர பரமபதத்தில் -
உனக்கான பருவங்களில்
திக்குகளின் திணறல்களின்றி
தென்மேற்கோ , வடகிழக்கோ
முடிவற்ற பேரண்டப்
பெருவெளியின்
திசையறிந்து தொடர்கிறது
உனக்கான பயணம் ....
ஒரு தூக்கணாங்குருவிக் கூடு
ஸ்திரமற்று அந்தரத்தில்
உன்னால் பந்தாடப் படுவதின்
பிரக்ஞைகள் ஏதுமற்று .