எத்தனை முறை மரணிப்பது

புனிதம் மிக்கதென்று சொன்ன
புத்ததர்ம போதனைகள் யாவும்
புதையுண்டு சமாதியான கணம் பார்த்து
அரசமர பூதங்கள் கிளர்ந்தெழுந்திற்று
பேயலையும் மயானமாய்-என்
மூதாதைகள் முதிர்ந்து உதிர்ந்தமண்

தானியங்கள் விளைந்த வெளி எங்கும்
மதம் பிடித்து நிலம் வெடித்து
பன்றிகள் புரளும் பண்ணையாய் மாற
மான் கூட்டங்கள் வாழ புலமற்று
கவலையில் அலைந்து மனம்
கானலில் தொலைந்து தினம்
விரக்தியின் விளிம்பில் இருப்பின்றி....

படை பலம் அற்றவனை இந்தபூமி
பரதேசி போலவே பாவனை செய்வதால்
தீவிரமாக களத்தில் நின்று
தீர்மானிக்க வேண்டிய தேவை
கேள்வியென எழுந்து கேலி செய்கின்றன
அதனால்;ஒரு முடிவுக்கு வரவேண்டும் என
முடிவாகிறது
சும்மா இருந்தாலும் இனி நான்
எத்தனை முறை மரணிக்கப் போகிறேன்?!


ரோஷான் ஏ.ஜிப்ரி -இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி -இலங்கை. (4-May-14, 1:51 am)
பார்வை : 228

மேலே