அகனுடன் ஒரு நாள்

ஏப்ரல் 28 2014.
ஞாயிறுச் சுகவாசங்கள் கழிந்துபோன ஒரு முன்னிரவில், கோடையிடி அதிர்வில் தெறித்த ஒரு மண் சுவரென மூளைக்குள் ஒரு மின்னல்...இன்று நாம் ஏன் புதுச்சேரி செல்லக்கூடாது...?! முன்பதிவில்லாமல் ஒரு பயணத்தைத் தொடங்கியிருந்தேன் மூளை முடிவெடுத்து கையெழுத்திட்டுத் தருவதற்கு முன்பே...!!

அதிகாலை 6 மணிக்குத் தொட்டிருந்தேன் சிமெண்டுச் சேறும் செல்லுலாய்டு விளக்குகளுமாய் நவீனப்பட்டுப் போயிருந்த தமிழ்க்காட்டை...!! ஒரு 7 40 மணியளவில் அலுப்புத்தீர குளித்துப் படுத்திருந்த பொழுது அழைப்புமணி ஒலிக்கிறது... மூளை நியூட்டனின் மூன்றாம் விதியில்..உடல் மின்தின்று திகட்டிய ஓடுசக்கரம் போலொருமான நிலையில்.. கதவு திறக்கிறேன்..!!

ஒருவருட காலமாய் தளங்களில் தாலாட்டியும்.. தாங்கிப்பிடித்தும் வளர்த்துவிட்ட பெருமரமொன்று அதன் கடைக்கோடி இலைகட்டித் தழுவி தட்டிக்கொடுத்து அமர்கிறது..உருவம் ஒன்றில்தான் எத்தனை பரிணாமங்கள்... தாடிவைத்த பாரதி.. முண்டாசு தவிர்த்த பெரியார்..இப்படிக் கலவையான எண்ணங்களுடன் பிரமித்து உறைந்திருக்கிறேன் அவர் முன்னால்..!! பேசிக்கொண்டே இருக்கிறார் இடைமறிக்க எண்ணமே வரவில்லை..!!!

உறைநிலையிலேயே பின்தொடர்கிறேன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குள்...தொட்டில் சூரியன் சற்றே வளர்ந்து மடிப்பௌர்ணமியாக தங்கையின் மடியில்... இல்லத்தின் செல்லம்மாளை செல்லமாக " கௌ" என அழைக்க அம்மா...!! புத்தகங்கள் புகைப்படங்கள் என உரையாடல் நீடிக்க சிற்றுண்டிக்கு நான் தயாராகிறேன்..!!!

உடல் இயக்கங்களில் எப்பொழுதுமே முரண்பாடுகள்..வயிறு முதலில் நிறைந்தால் பிறகு மூளை மழுங்கும்...!! மூளை முதலில் நிறைந்தால் வயிறு நொதிகளுக்கு ஊற்றுக் கண்களாகும்... இரண்டாம் நிலை முரண்பாட்டில் நான்...! மண்பானையில் தயிர்... திகட்டாமல் ஒரு இனிப்பு முதலில்...அய்என அகல விரிந்தது கண்கள்...விரிந்த கண்திரைகளை மறைத்துப் படர்ந்து விட்டிருந்தது அதனை தொடர்ந்த மல்லி இட்டிலி..

பூக்கள் கசக்கி முகர்வதை போலிருந்தது விள்ளித்தின்னும் போதும்.. அறிமுகம் இல்லை என்றாலும் எங்கோ பார்த்து பழகிய முகமாதலால் அம்மாவென்றே தோன்றியது "கௌ" அம்மாவை.... எங்கே நம் கவிதைகள் எல்லாம் தோற்று விடுமோ என்று.. விடுமோ என்ன விடுமோ... விட்டிருக்கிறது என்னும் அளவிற்கு பதார்த்தங்கள் பரிமாறுவதில் அவ்வளவு ஒரு நேர்த்தி.... என் எழுத்தப்பனின் பாக்களில் எப்படி இப்படி ஒரு சுவையென நதிமூலம் தேடித்திரிந்த எனக்கு தெளிவு படுத்தியிருந்தது அம்மாவின் சிற்றுண்டி நேர்த்தி...!!

விடைபெற்று வீதி தொட்டபின் மீண்டும் அதீதங்களின் நிழலில் நான்...கனக சுப்புரெத்தினம் சுற்றிய வீதிகளிலெல்லாம் நானும் என் எழுத்தப்பனின் கைபிடித்துக்கொண்டே சுற்றி வருகிறேன்.. சொந்தப்பணி நிமித்தங்களுக்காக கொஞ்சம் இடைவெளி. மீண்டும் தொடங்கியிருந்தோம் பகிர்தல்களை.. காந்தி சிலையையும் கடலலைகளையும் இணைத்துக் கவிதைகள் பாடியபடி..என்ன செய்ய வேண்டுமென எதிர்காலத் திட்டங்கள் வகுக்கிறோம் பிரெஞ்சுத் துரைகளின் சிலைக்கட்டமைப்புகள் ரசித்துக்கொண்டே....!!!

இப்படியுமாய் வந்துவிட்டிருந்தது மதியவுணவும்..மீண்டும் ஒருமுறை எழுத்தப்பாவிடம் எழுத்துப்பாக்கள் வாங்கி விடை பெறுகிறேன் என்னிடம் நோக்கி... திகட்டத் திகட்ட ஆசீர்வதிக்கப் பட்டிருந்தேன் அன்றைய நாள்....!!!

எழுதியவர் : சரவணா (5-May-14, 3:34 pm)
பார்வை : 106

மேலே