கைபேசி கூத்துகள்

==========================================

நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு

==========================================

அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே

==========================================

கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது

==========================================

ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்

==========================================

சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை

==========================================

கைபேசி உலகளவு
கைபேசுவது தேறியளவு
புதியகீதை

==========================================

காதுகேட்காத தாத்தாவிற்கு
குறுஞ்செய்தி மடல்கள்
வைப்ரேஷன் மோடில்

==========================================

முதியோர்யில்ல முற்றக் காற்றாய்
உறவுகளின் அழைப்பு கீதங்கள்

==========================================

தூரதேசம் சென்றவனின்
காணொளி அழைப்புகளால்
மிச்சப்பட்டது கண்ணீர்

==========================================

கைபேசி பெற்றேடுத்த
காதல் குழந்தைகள்
அனாதைகளாய் காற்றில்

==========================================

சாலையில் பாட்டுக்கேட்காத யுவனையும்
பேசிச்செல்லாத யுவதியையும் சந்திப்பதோ
அசாத்தியம் இது சத்தியம்

==========================================

இயலாதவனையும் கஞ்சனையும்
காரியவாதியையும் நீயே இனம்கொள்
மிஸ்டு கால்கள்

==========================================

ஏழையாவதர்க்கு முன்
செவிடனாக வாய்க்குமென ஆருடம்
அதிகம் பேசுபவனுக்கு.

==========================================

இன்று வாசல்வரா கடன்காரர்
காதிற்குள் வந்து கழுத்தை
நெறித்து விடுவர்

==========================================

கண்களைக் கைதுசெய்யும்
கைபேசியைக் கைதுசெய்யும்
கவனமில்லை காவல்துறைக்கு

==========================================

கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும்
குண்டுவெடிப்பிற்கும் பேதமேதுமின்றி
முடிச்சவிழ்க்கும் உளவாளி

==========================================

வாக்குரிமை வாய்த்தால் இனி
வாக்கு சதமடிக்கும் மை வேண்டாம்
போதும் விரல்நுனி

==========================================

உருண்டு விழுவான் உயிர்கொடுப்பான்
உயிர்கனம் மறந்தவொரு கணம்
சாலையில் சற்றே கவனி

==========================================

எங்கெங்கும் கொட்டிநிற்கிறது
எண்வடிவில்
கைபேசியின் காத்திருப்புகள்

==========================================

அழைப்புகளில்லாத அரைநாள்
ஆயிரமிருந்தும் சூழ்ந்துகொண்டது
சுகப்படாத ஒரு தனிமை

==========================================

காத்திருந்த அழைப்புகள்
காத்திருந்து அழைக்கும்
ஏமாந்த கணங்களில்

==========================================

நடுநிசி அழைப்புகள்
அநேகமாய் சிக்கல்களையும் இழப்புகளையும்
தந்துவிடும் தந்தியாய்

==========================================

பிணைப்புகளிலும் பிதற்றி
இணைப்புகளுக்கு அடம்பிடித்து சாடுகிறது
உறவின் உதறல்கள்

==========================================

அழைக்கும் சமன்பாட்டில்
உடன்பாடு எட்டாமல் எட்டி நிற்கிறது
கொஞ்சம் நண்பர் குழு

==========================================

பைசா கொள்ளையடிக்க
பாதிநேரம் தொல்லையடிக்கிறான்
சேவை செய்யும் கம்பெனிக்காரன்

==========================================

ஏதோ இருட்டில் எங்கோ மூலையில்
இரத்தம் சிந்தியவனை மிச்சம் சிந்திவிடாமல்
உயிர் காத்த கைபேசி கடவுள்தான்

==========================================

கண்ணாடியும் கைபேசியும்
ஒன்று நழுவியதும் சிதறும் தரையில்
உன் மாயபிம்பம்

==========================================

எழுதியவர் : சர்நா (6-May-14, 11:26 am)
பார்வை : 1024

மேலே