பேரன் குறள்கள் -06
யோரன் குறள்படித்து யோசித்தது:.=குறள் யாப்பு=
வெல்லமோ? கள்ளோ? வெறுஞ்சொற்கள் தாமழகோ?
நல்லதமிழ்ப் பேர்வைக்க நாடு!--------------------------51
பேரன் பெயரில் பெரியோர் நினைவுவரின்
வேரின் பலம்கிடைக்கு மே!------------------------------52
கண்ணாடிப் பெட்டிமீன் கைக்குள் குழந்தைகள்!
விண்ணோடல் எங்ஙன் விரைந்து?--------------------53
இருக்கும் உலகம் இருக்கவே, பேரா!
இறுக்கம் விடுத்தே இரு!-----------------------------------54
ஓங்கி உயர்மரங்கள் ஓரறிவோ? பல்லுயிர்கள்
தாங்கி அவைவளர்க்கு தாம்!-----------------------------55
நீர்கொடுத்துத் தாங்கியே நிற்பதால் நீள்,நிலமும்
வேர்,அணைத்துத் தங்கிவரு மே!-----------------------56
உயரங்கள் கண்டமரம் ஓரிடத் தில்தான்!
துயரங்கள் தாய்மண் தொலைத்து.---------------------57
செங்கீரைத் தண்டே! சிறுமுல்லைக் கொத்தே!நல்
வங்கத்த்து முத்தே!நீ வா!---------------------------------58
பனிச்சோலைத் தொட்டிலில் பார்தூங்கும் காலை
தனி,நடைக்குப் பேரா!கை தா!---------------------------59
இலக்கியச் சாளரம் இவ்விரு கண்கள்!
கலக்குதே என்னுள் கவி!-----------------------------------60
========== ===========