வெற்றி நிச்சயம் - வினோதன்
எனக்குள் - புகுந்த நீ
புகுத்திப் போனது
என்னுள் காதல் தீ !
கிளை விட்ட நெருப்பு
தாவியென் - இதயம்
மேலேறி கருவானது !
சிவப்பு - திசுக்களின்
நடுவே - சிசு சுமக்கும்
ஆண் தாயானேன் !
முற்றிய சிசுவை
பிரசவிக்க போவதில்லை
இருக்கட்டும் என்னோடே !
செதுக்கிய செஞ்சிற்பம்
குருதிக் குடிசையின்
நிழலில் நீந்தியபடி !
என்னை நாள்தோறும்
புதியாய் பிறப்பிக்க
வல்லதது, வலியதது !
ருசித்த வலி ரசிப்போம்
வலியுருட்டி வளருங்கள்
வெற்றி விளைவிக்கும் !
தீயோத்த ரணங்களை
அணைகட்டி ஏந்துவோம்
தீயணையாமல் இருக்க !
விதியெனும் எழுத்துகள்
இருப்பின் அழிப்போம்,
மாற்றி எழுதுவோம் !
எதிரே நிற்பவனுக்கன்றி
எதிர்த்து நிற்பவனுக்கு
ஏதோ தோல்வி ?
மோதிக்கொண்டே இரு,
ஏனேனில் - திறவா கதவுகளை
கடவுள் படைக்கவேயில்லை !
வெறி மட்டும் - தீராமல்
பார்த்துக் கொண்டால்
வெற்றி நிச்சயம் !
வெல்ல வழி சொல்லும்
வலிகளை காதலிப்போம்,
வென்று குவிப்போம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
