பேரன் குறள்கள்- 09=

யோரன் குறள்படித்து யோசித்தது:-=குறள் யாப்பு=

உருட்டி விழித்துக்,கை ஓங்கினான் முன்,நான்
வெருட்டினான் போல விழும்!------------------------------------------------81

கொஞ்சக் குனிந்தேன்! குனிந்தேனா! வீசினான்
பிஞ்சுக்கை பட்ட தறை!----------------------------------------------------------82

நனவினுள் ஆடி நடந்தகதை பாட்டி
கனவிலே கேட்டாள் களித்து!--------------------------------------------------83

தண்(டு)எழுந் தாடித் தளிர்நடை செய்தெனது
கண்டத்து மாலையாம் காண்!-------------------------------------------------84

படிக்கப் படிக்கப் பலசுவை காட்டும்
நடிப்பிற் சிறந்த முகம்!-----------------------------------------------------------85

கடைவாய்க் கவளம் ஒழுக ஒழுக
இடைமறிப்பான் தாத்தாவுக் கென்று!---------------------------------------86

இடைவாசல் எல்லாம் எதற்குப் படிகள்?
நடைமறிக்கும், பேரா! நகர்த்து!-----------------------------------------------87

கடல்,இன்பம் கூடிக் களிக்க! அழுதால்
விடலரிது வீடே இரணடு! -------------------------------------------------------88

பந்துதைப்பான் போலப் பலகால் விழுவான்;நான்
வந்தெடுக்க நில்லான், வளைந்து!---------------------------------------------89

கேளான் எவர்சொல்லும் கீழிறங்க; தாத்தாவின்
தோளே குதிரை முதுகு !----------------------------------------------------------90

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (8-May-14, 7:39 pm)
பார்வை : 102

மேலே