தாயெனும் கன்னி

பிறந்தது என்னவோ
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
ஆனாலும் இன்னும் அவள்
பதின் வயதுப் பாவைதான் !

அவள் எழிலமுதத்தில் அமிழ்ந்து
கரைந்து தொலைந்து போனவரும்
இனி தொலைய இருப்போரும் நம்
கணக்கிலடங்கார்
ஆனாலும் என்றும் அவள்
கன்னிமையோ குறைவதில்லை !

இதுவரை எத்தனையோ
கிளை மொழிகளை
பெற்றெடுத்த தாய்தான்.
ஆயினும் இவள்
நித்ய கன்னிதான்!

பல் போன கிழவனுக்கும்
பல் விழா சிறுவனுக்கும் கூட
இவ் வளர்கன்னி மேல் தீராத கிறுக்குதான்!
ஆடவர் கதை தெரிந்ததுதானே!

இல்லை இல்லை.
அந்தத் தையல் மேல்
மாறாத மையல்
இங்குள்ள தையல்களுக்கும் தான்

இங்குதான் இப்படியென்றால்
எங்கிருந்தோ இருந்து
பரதேசம் வந்த தேசாந்திரிகளும்
இவள் மோக விழி வலைக்கு
தப்பியதில்லை
தப்பவும் இவள் விட்டதில்லை!

இவளை சேவித்து சேவகமும் செய்து
பூசித்து அடிமை கொண்டு
அடி பணிந்து
காதலுற்று காமுற்று
களிப்பில் ஆழ்த்தி
பெருமை கொள்வோம்

அத்தாயை
உலக மொழிகளின் அரசியாக்கி
உளமாரப் பூரிப்போம்
வாருங்கள் தளத் தோழர்களே !
********

அன்னையர் தினத்தில் என் தாயுமானவளுக்காக !

எழுதியவர் : நேத்ரா (9-May-14, 8:03 pm)
பார்வை : 84

மேலே