எங்கு போய் தேட - வினோதன்

முதலிடப் பட்டியல்களில்
ஒரு மூலையில் கூட
அரசுப் பள்ளிகளை காணாது
காரணம் தேடி - மூளையை
முடிக்கியபோது தோன்றியவை !

பெறுபவர்கள் - பெற்றார்கள்
காந்தி ஓங்கிய பெற்றோர்
கழுத்தளவு - பணம் விதைத்து,
பிள்ளைகளை - தற்காலிகமாய்
தலைமுழுகச் சம்மதித்ததால்
கல்விமாளிகைகள் சம்பாதித்தது !

முட்டைகள் வாங்காத
நல்ல முட்டைகளை - சில
மூட்டைகள் வாங்கிகொண்டு
மனனம் செய்யச் சொல்லி
பிசாசாய் உருமாறி - பிஞ்சுகளை
உயிரோடு தகனம் செய்யும்
தனியார் பள்ளிகள் - வெல்வதில்
சாதனையென ஏதுமுண்டா ?

பெரிய வசதிவாய்ப்புகள்
இல்லாத போதும் - அரசுப்
பள்ளிகளில் - பெருமூளை
சிறுவர்கள் - இல்லாமலில்லை,
இருந்தும் - இல்லாமலிருக்க
காரணம் தெரிந்தவொன்றே !

ஒருமுறை புகுந்தால்
நம்மை - எவனாலும்
வெளியேற்ற முடியாதென்ற
ஆசிரியர்களின் போக்கு,
முதன்மை காரணமாய்
முன்னின்று தாக்குகிறது !

சதவீத நெருக்கடியில்லை
சமூக அக்கறையில்லை
சம்பள பிரச்சனையில்லை,
வேறெப்படி வரும் - வெற்றி
வேண்டுமென்ற வெறி !

ஆண்டுக்கொருமுறை
அறிவை ஆய்வு செய்து
முன்னேற்றம் இல்லாவிடில்
வீட்டுக்கு அனுப்பும்
முறை எப்போது வருமோ
அப்போது வரும் வெற்றி !

சம்பள உயர்வு வேண்டி
சாலையில் இறங்கி
போராடும் ஆசிரியர்களே...
மாணவ நலனுக்காக,
பள்ளியின் வசதிக்காக
என்றாவது போரடியதுண்டா ?

நாலு மாணவர்கள் கூடினால்
தேர்வைப் பற்றியும்,
நாலு ஆசிரியர்கள் கூடினால்
சம்பளத்தைப் பற்றியும்
பேசிப்பேசி என்ன பயன் ?

அரசு ஊழியர்களின்
கொடுக்குகள் எல்லாம்,
அரசுப் பள்ளியில்
படிக்க வேண்டுமென
ஆணையிட்டுப் பாருங்கள் !
நாமக்கல் - பொட்டியை
கட்டும் போட்டியின்றி !

சில லட்சம் இருந்தால்
நானும் உடலறுக்க
அனுமதி பெற்றவன்
எனத் அத்தாட்சி அளிக்கும்
நாட்டில் - நியாயத்தை
எங்கு போய் தேட ?

எழுதியவர் : வினோதன் (9-May-14, 9:11 pm)
பார்வை : 181

மேலே