இந்திய சுதந்திர மாவீரர் மருதநாயகம் பாகம்-6

விசாரணை
சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.
மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.
தூக்குக் கயிறை முத்தமிட்டார்
15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!
அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. தூக்குக் கயிறை (மரணத்தை) முத்தமிட்டார்.
மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.
தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும்,வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!
புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.
இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.
தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!
மருதநாயகம் அடக்கஸ்தலம்
மேலே கொடுக்கப்பட்டுள்ளது
அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும்,உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன்,ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?
+++மாவீரன் மருதநாயகம்+++
வீரமுடன்
படையெடுத்த சிங்கமே
மருதநாயகமே...........!
உனது வீரம்
மறைக்கப்படவில்லை
புதைக்கப்படவும் இல்லை
விதைக்கப்பட்டுறிக்கிறது
என்றுமே சுதந்திரமாக
வாழ்கிறது
பாரதத்தில்............!
சரித்திரத்தில்
மறைக்கப்பட்ட
மாவீரனே உனது சுதந்திர
தாகம் ஆங்கிலேயர்களை
வியப்படைய
செய்தது பல பயத்தை
கொடுத்தது...............!
அஞ்சாத
நெஞ்சமடா உனக்கு
மரணத்தை கண்டு
நடுங்காத
உள்ளமடா.........!
உறுதியுடன்
போராடி அறிய
சுதந்திரத்தை நீ தேடி
எதிர்த்து நின்றாய் பல
சரித்திரம்
கண்டாய்..........!
மரணத்தை
கண்டு அஞ்சாத வீரனே
உனது உடல் மண்ணில்
மறைந்தாலும்
சரித்திரத்தில்
மறையாதே...........!
பாரதத்தின்
வீரனே நீ வாழ்க உனது
சுதந்திர
இந்தியா வாழ்க..........!