ஜிஹாத் தொடர்ச்சி 1 - நாகூர் கவி

நம்மை வந்து தாக்குபவர்களோடு போர் புரிந்து தற்காத்துக் கொள்வது என்பது சூழ்நிலைக்குத் தக்க எப்போதாவது நடக்கக்கூடிய விஷயமாகும். ஆனால் ஜிஹாத் என்பது அல்லும் பகலும் ஒரு நம்பிக்கையாளனின் வாழ்வில் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு போராட்டமாகும். அதாவது ஜிஹாத் என்பது எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒன்றாகும்.

இறைவனுடைய விருப்பத்தோடு தனது வாழ்வை ஒத்துப்போகும்படி வைக்கவேண்டிய முயற்சியில் ஒரு நம்பிக்கையாளன் எப்போதுமே இருக்க வேண்டியுள்ளது. அவனுடைய ஆசைகள், உணர்ச்சிகள், பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவன் நாடும் வழிவகைகள் என்று எல்லா கட்டங்களிலுமே அவன் இறைக்கட்டளைகளுக்கு மாறு செய்யாமல், அவற்றை மீறாமல் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் மீறுவதற்கு தூண்டுகின்ற சாத்தானிய சிந்தனைகளிலிருந்து அவன் தன்னை காத்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. இதற்கான போராட்டம்தான் ஜிஹாத் என்பதாகும். எனவே ஜிஹாத் என்பது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஏன், ஒவ்வொரு கணத்திலும் ஓர் இறைநம்பிக்கையாளன் சந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. முஸ்னது அஸ்னது என்ற அருமையான ஒரு ஹதீது தொகுப்பு நூல் மேலும் நமக்கு விளக்கம் தருகிறது.

1. யார் இறைவனுக்காக, தன்னோடு போராடுகிறானோ அவனே முஜாஹித் (ஜிஹாத் செய்பவன்) ஆவான். (6/20).

2. இறைவனுடைய விருப்பத்துக்கு அடிபணிவதற்காக
யார் தன்னோடு, தன் உணர்வுகளோடு போராடுகிறானோ அவனே முஜாஹித் ஆவான்.

இந்த ஹதீதுகளின்படி, ஒருவன் காமத்தையோ கோபத்தையோ கட்டுப்படுத்தினால் அவன் ஜிஹாத் செய்தவனாவான். ஓர் அநியாயத்தை தட்டிகேட்பவன் அல்லது கேட்க நினைப்பவன் முஜாஹித் ஆகிறான். தீமை செய்யவேண்டும் என்ற ஓர் எதிர்மறை உணர்விலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்பவன் ஜிஹாத் செய்பவனாவான்.

ஒரு போரிலிருந்து திரும்பிய பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் "சின்ன ஜிஹாதிலிருந்து நாம் பெரிய ஜிஹாதுக்கு திரும்பியிருக்கிறோம்" என்று மனப்போராட்டங்களைப் பற்றி சொன்னதும் இந்த கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய மனப் போராட்டங்களையே 'ஜிஹாதுல் அக்பர்' (பெரிய ஜிஹாது) என்று நபிகளாரின் அருமைத் தோழர் அபூ பக்கர் (ரலி) அவர்கள் வர்ணித்தார்கள்.

ஒருவருக்கு கல்வி கொடுப்பதும் தனது செல்வத்தை நற்காரியங்களுக்கு தருமம் செய்வதும்கூட திருமறையின் பார்வையில் (சூரா 49 : 15) ஜிஹாத் ஆகும்.

எனவே ஜிஹாத் என்பது அடிப்படையில் ஓர் அமைதியான அகப்போராட்டமாக உள்ளது.

நிராகரிப்போருக்கு இணங்கிவிட வேண்டாமென்றும், திருமறையின் உதவியை ஆதாரமாகக் கொண்டு அவர்களுடன் "பலமாகத் தர்க்கம் செய்யுங்கள்" என்றும் பெருமானாருக்கு இறைவன் சொன்ன கட்டத்திலும் "ஜிஹாத்" என்ற சொல்லே திருமறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (சூரா புர்கான் 25 : 52).

மீண்டும் ஜிஹாத் தொடரும்......!

எழுதியவர் : நாகூர் ரூமி (11-May-14, 12:09 am)
பார்வை : 194

மேலே