தமிழா தமிழா நீ - கே-எஸ்-கலை

பாரதி வள்ளுவன் புகட்டியப் பாடங்கள்
====மீறினாய் - குறை கூறினாய் !
சாரதி இல்லாத ஊர்தியைப் போலவே
====ஓடினாய் - இடர் தேடினாய் !

மண்பாட்டு மறந்து மகிமை துறந்து
====பறந்தாய் - ஊரை மறந்தாய் !
பண்பாட்டு ஒழுக்கம் பழக்க வழக்கம்
====மாற்றினாய் - ஊறு போற்றினாய் !

கடலைத் தாண்டியும் காமத்தைக் காவியே
====ஆடினாய் - நோயில் வாடினாய் !
கடவுளைத் தேடியும் காசைத் தேடியும்
====முக்கினாய் - துயரில் சிக்கினாய் !

சாதிகள் மதங்கள் பேதங்கள் வன்முறை
====ஓதினாய் - முட்டி மோதினாய் !
நீதிகள் வேதங்கள் யாவையும் பாலையாய்
==== ஆக்கினாய் - வெறிப் போக்கினாய்!

ஆடையில் பாடையில் அறத்தை மீறியே
====பொங்கினாய்- சுயம் மங்கினாய்!
மேடையில் வீட்டுக்குள் மேதகு தமிழைநீ
====நீக்கினாய் - அகம் தாக்கினாய் !

ஆங்கிலம் என்றோர் அமிலத்தை நெஞ்சினில்
====ஊற்றினாய்- தமிழைத் தூற்றினாய்!
பூங்குயில் குரலென இனித்திடும் மொழியிது
====ஒதுக்கினாய்- பிழைச் செதுக்கினாய்!
-----------------------------------------------------------------
மடமையைத் துறந்து காயங்கள் அறிந்து
====ஆற்றுவாய் - குணம் மாற்றுவாய் !
உடமைகள் இழந்து உயிரேப் போகினும்
====ஏற்றுவாய் தமிழைப் போற்றுவாய் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (11-May-14, 9:34 pm)
பார்வை : 335

மேலே