நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்....
====================

உணவின்றி துடித்திடும் ஏழையின் பசியாற்று
வசதியில்லா குழந்தைக்கு கல்வி நீருற்று
ஊர்ந்திடும் எறும்பிற்கு பசியாற உணவிடு
பறந்திடும் காக்கையை கூப்பிட்டு சோறிடு
அல்லவை நெஞ்சம் கொள்ளாதிருக்க
நல்லவை நாளும் நடந்திடும் .. நடந்திடும் ...

தூய்மை எண்ணத்தில் நீ உள்ளம் கொண்டிரு
கொண்ட எண்ணத்தில் என்றும் உறுதியாய் இரு
எந்த இடருன்னை வந்து என்செய இயலும்
எண்ணங்கள் யாவுமே இனிதே நிறைவேறிடும்
அல்லவை நெஞ்சம் கொள்ளாதிருக்க
நல்லவை நாளும் நடந்திடும் .. நடந்திடும் ...

எதிரியிடத்தும் உன் அன்பினை காட்டிவிடு
எள்ளி நகைப்போர் முன் இன்முகத்தோடிரு
நம்பினோர்க்கென்றும் நீ உண்மையாயிரு
தீமைகள் செய்வோர்க்கும் நன்மையே செய்திடு
அல்லவை நெஞ்சம் கொள்ளாதிருக்க
நல்லவை நாளும் நடந்திடும் .. நடந்திடும் ...

நேர்மறை எண்ணங்கள் நெஞ்சினில் என்றாக
ஊறுகள் வந்தாலும் உடைந்திடும் தானாக
பகுத்தறியும் பண்பும் வளர்ந்திடும் மேலாக
உன்னை நல்லோர் நாடியே சேர்ந்திடும் உறவாக
அல்லவை நெஞ்சம் கொள்ளாதிருக்க
நல்லவை நாளும் நடந்திடும் .. நடந்திடும் ...

குணம் கொல்லும் கோபங்கள் தள்ளுவாய்
சினம் வந்தபோது பொறுமை கையாளுவாய்
பகையும் நட்பாகவே மாறிடும் அறிவாய்
உயர்ந்தோன் நீயெனவே சாற்றிட மகிழ்வாய்.
அல்லவை நெஞ்சம் கொள்ளாதிருக்க
நல்லவை நாளும் நடந்திடும் .. நடந்திடும் ...

பிறன் வளர்ச்சி கண்டே மகிழ்ச்சி கொள்வாய்
பொறாமை தீ பொசுக்கி அகமும் நேர் செய்வாய்
இல்லையென வருவோர்க்கு ஈதலே நலமாய்
முல்லையென வாசமிகு வாழ்வும் உனக்காய்
அல்லவை நெஞ்சம் கொள்ளாதிருக்க
நல்லவை நாளும் நடந்திடும் .. நடந்திடும் ...

எழுதியவர் : சொ.சாந்தி (12-May-14, 5:34 pm)
Tanglish : nallathay nadakkum
பார்வை : 469

மேலே