தலை விதி மாற்று

மானத்தை உயிராய் எண்ணி -தமிழ்
மண்ணினை தாயாய்ப் போற்றி -புகழ்
வானத்தை தொட்டு நின்ற -நம்
மைந்தரே எங்கு சென்றீர்!
ஈனரின் துரோகச் சூழ்ச்சி-கொடும்
இன்னலில் சிக்கி அன்று
போன நீர் திரும்பவில்லை-நம்
பொழுதிங்கு விடியவில்லை!
மண்ணினை மீட்டு எங்கள்
மானத்தை காத்து நின்ற
கண்ணியம் தவறா மைந்தர்-துரோகி
கபடத்தால் தொலைந்து போனீர்!
வானரக் கூட்டத்தோடு-இன்று
வாழ்வினைப் பகிர்ந்து கொண்டு-சிலர்
ஈனராய்த் திரிகின்றார்கள் -எம்
இனத்தினை விற்கின்றார்கள்.
கடந்ததை மறந்து நின்று -எதிரி
காலினைப் பற்றிக் கொண்டு
விடந்தனை மண்ணில் ஊற்றி-தமிழ்
வேரினை சிதைக்கின்றார்கள்.
குண்டினை மழையாய் கொட்டி -எம்
குலத்தையே அழித்தவன் தன்
தொண்டராய்ப் படையில் சேர்ந்து
பெண்டிராய் வாழ்கின்றார்கள்
கடையினை விரித்து நிற்கும் -சிங்களக்
காமுகன் பசியைத் தீர்க்க
படையிலே சேருகின்ரீர்.
பார்க்கத்தான் தொழிலா இல்லை?
உடலினை விற்றுத் தானா -உம்
உயிர் இங்கு வாழ வேண்டும்
சடலமாய் திரியும் நீங்கள்
செத்து இனித் தொலையலாமே!