அறிந்திட்ட இயற்கை இதுவன்றோ
ஆரம்பம் என்றாலே முடிவிருக்கும்
பிறப்பு என்றாலும் இறப்பிருக்கும்
அறிந்திட்ட இயற்கை இதுவன்றோ !
இளமைக் காலமும் நிலையன்று
இனிதான பொழுதும் நிலையன்று
அறிந்திட்ட இயற்கை இதுவன்றோ !
எண்ணங்கள் மனதில் அலைமோதும்
ஏக்கங்கள் அதிலே எதிர்நீச்சலிடும்
நம்முடிவை நாமறியோம் என்றும்
நானிலத்தில் வாழும்வரை நாமும் !
உண்மையும் போலியும் உறவாடும்
வாய்மை பொய்யோடு வம்படிக்கும்
நிஜத்தைக் காட்டும் நிலைக்கண்ணாடி
நித்தம் உரைத்திடுமே நம் முன்னாடி !
நிகழ்ந்ததும் நிழலாகும் நெஞ்சினிலே
நிகழ்வதும் நின்றிடும் இதயத்தினிலே
வருங்காலம் அசைபோடும் அகத்திலே
வசந்தமும் வறட்சியும் வந்துபோகும் !
கண்ணாடி முகத்தினையும் காட்டிடும்
காலத்தின் வளர்ச்சியையும் காட்டிடும்
வளர்ந்திட்ட வயதினையும் தெரிவிக்கும்
வரவுள்ள வயோதிகத்தையும் அறிவிக்கும்
எதிர்கால வடிவத்தை நினைவூட்டும்
எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தும்
எதுவாக இருப்பினும் எதிர்கொள்வோம்
எளிதாக மாற்றிட வழியும் காண்போம் !
காலத்தின் வலிமையை அறிந்திடுங்கள்
காலன் வருமுன்னே உணர்ந்திடுங்கள் !
நம் மனதே நமக்கு நிலைக்கண்ணாடி
நம்மை நமக்கே காட்டிடும் முன்னாடி !
வடித்திட்ட வரிகளும் நம் வாழ்வியலே
வருமுன் அறிவது புவியில் அறிவியலே
அறிந்திட்ட இயற்கை இதுவன்றோ !
பழனி குமார்