முதல் முதலாய்
முதல் முதலாய்
உன்னை கைகளில்
வாங்கிய நாளில் நீ
பெண்ணாய் பிறக்கவில்லையே
என வருந்தினேன் உனக்கொரு
தங்கை பிறக்கும் வரை!
முதன்முதலாய் உனக்காய்
அழுதேன் நீ எனைப்பிரிந்து
பள்ளிக்குச் செல்லும்போது
நீ வரும் வழியே பார்த்து
காத்திருந்தேன் மனம்
நிறைந்த தவிப்புடன்
முதன்முதலாய் இந்தி
கற்றுக்கொண்டேன்
உன்பாடபுத்தகத்திலிருந்து
உன் மழலை மொழிகளில்
என்னுடன் கதைபேசும் போதும்
என்கைகளைப் பிடித்து
நடக்கும் போதும்
ஒரு தாயாய் மகிழ்ந்தேன்
முதல் முதலாய்
நீ என்னைப் பார்த்து
பொறாமைக் கொண்டாய்
உன்னைத் தவிர்த்து நான்
வேறு யாருடனாவது பேசினால்
முதல் முதலாய்
என்னைப் பார்த்து
பெருமைக் கொண்டாய்
உன் தாய் அழகானவளென்று
எல்லாமே நம் இருவருக்கும்
முதன்முதலாய் இன்று
முதன் முதலாய் கேட்கிறாய்
அம்மா நான் என்ன படிப்பது?
நான் முதல் முதலாய்
கலங்குகிறேன்
சிறப்பாய் கற்றுக் கொள்ளமுடியாத
உனது இயலாமைக்கும்
செலவழிக்க முடியா
எனது வறுமைக்கும்
முதல் முதலாய்
என் உள்ளம் குமுறி
அழுகிறேன் உன்
எதிர்காலத்தை நினைத்து
எல்லாமே எனக்கு
முதன் முதல் என்றாலும்
நம்பிக்கை என்ற ஒன்று மட்டும்
கடைசி வரைக்கும்
தளர்ந்து போகாது
என் செல்லக் கண்மணி
உன்னால் நான்
பெருமைப் படுவேன்
என்பதுதான் என்
முதல் முதலான முடிவு..............!
....................சஹானா தாஸ்!