தேவதை கதைகள்
உயிரியல்
வகுப்பில்
அன்றைய தேர்வு
முடிந்த பின்
எதேர்ச்சையாக
புத்தகத்தின்
பக்கங்களை புரட்டி
பேசிக்கொண்டிருக்கையில்
டார்வினின்
பரிமாண
கோட்பாடுகள்
பக்கங்களின்
நடுவில்
நீ
வைத்திருந்த
மயிலிறகு
குட்டிகளின்
கதையும்...
நீ
உதிர்க்கும்
வெட்கத்தில்
மஞ்சள்
கொன்றைப்
பூக்கள்
ஒவ்வொன்றாய்
விழுந்து கொண்டிருந்த
மாலைப்பொழுதினில்
மரத்தடியில்
அமர்ந்து
படிக்கையில்
நீ சொன்ன
அரிசி
ராஜா-ராணி
கதையும்...
இனி
எப்போது
மறு சந்திப்பு
என தெரியாத
தவிப்பின்
பிரிவு அடையாளமாய்
கடைசி
தேர்வுக்கு
முன்
நீ
திருப்பி
கொடுத்த
புத்தகத்தில்
சிந்தியிருந்த
இருதுளி
விழிநீர்
கதையும்...
இவ்வளவு தான்
எனக்குத் தெரிந்த
தேவதை
கதைகள்.