ஓர் ஊமை தேவதை

ஊமை நிலவு
ஒளி மழை சிந்துவது போல
இவள்
ஓசைகளைச் சிந்துகிறாள்

அவை
பூப்பூக்கும் ஓசைகள்...!

மெழுகுவர்த்திகள் ஏற்றும்
தீப ராகங்களைத்தான்
இந்த மெழுகு மனமும்
ஏற்றி வைக்கிறது

தேவதைகளின் ராகங்கள்
சப்தங்களுக்குள் இறங்காது.

ஒரு தியான வேளையிலா
பிரம்மன் இந்தக்
கலையைப் படைத்தான்?
மௌன ஆழங்களில்
முத்தெடுத்தா
இச்சிலையில் பதித்தான்?

பறிக்கப்படாத
பூக்களைப் போல்
இவள் இதழ்களில்
எச்சில் படாத வார்த்தைகள்...

எழுதப்படாத கவிதைகள்
அங்கே உறங்குகின்றன
'மௌனங்கள் எனும்
தலைப்பில்...! (1995)

(என் சகோதரியின் மகளுக்காக)

எழுதியவர் : கவித்தாசபாபதி (23-May-14, 11:18 pm)
Tanglish : or uumai thevathai
பார்வை : 95

மேலே