வ,ஐ,ச ஜெயபாலனின் கடற்புறம்

சந்தோஷ் குமார் எழுதியது ;

ஊட்டியின் மறுபக்கம் படித்து முடித்த கணத்தில் வாய்பிளந்து தொண்டையடைத்து போனேன் நண்பா..!

வ.ஐ.ச. ஜெயபாலன் அய்யாவின் கவிதைகள் நம் தளத்திலும் சில இருக்கின்றன. பிரபல கவிஞர்கள் என்ற வரிசையில் இருக்கிறது. இந்த உங்கள் பகிர்வை படித்த உடன் அய்யாவின் கவிதை நூல்களை தேடி பயணிக்கிறது என் ஆர்வம்.
************
நண்பரே....!
வாய் மோழி பரவி
யுகங்கள் தாண்டி நிலைத்திருக்கும்
வேதங்கள், நீதிக் கதைகள், நாட்டுப் பாடல்களைப்போல்
நல்ல கவிதைகளை இணையத்தில் பகிரும்போது,
நிலைத்துவிடும் அக்கவிதைகளை
சந்ததியினர்
காலகாலங்கள் வரை
கொண்டாடுவார்கள்.

வ,ஐ,ச. ஐயா அவர்களின் மிகப் பழைய இன்னொரு கவிதை (ஈழத்தமிழ் கவிதைகளில் புகழ் பெற்ற ஒரு படைப்பு) இதோ எழுத்து நண்பர்களுக்காக...
***கவித்தாசபாபதி
'

கடற்புறம்
***************
காலமகள் மணலெடுத்து
கோலமிட்ட கடற்புறத்தில்
ஏழை மகள் ஒருத்தி,
முன்னே கடல் விரியும்
முது கடலின் பின்னாடி
விண்ணோ தொடரும்
விண்ணுக்கும் அப்பாலே
விழி தொடர நிற்கின்றாள்

தாழை மரவேலி,
தள்ளி ஒரு குடிசை;
சிறு குடிசைக்குள்ளே
தூங்கும் ஒருகுழந்தை

ஆழக் கடலில்
ஆடுகின்ற தோணியிலே
தாழம்பூ வாசம்
தரைக்காற்று சுமந்துவரும்

காற்றுப் பெருங்காற்று
காற்றோடு கும்மிருட்டு
கும்மிருட்டே குலைநடுங்க
கோஷமிட்ட கடற்பெருக்கு.

கல்லு வைத்த கோவிலெல்லாம்
கைகூப்பி வரம் இரந்த
அந்த இரவு
அதற்குள் மறக்காது

திரைக்கடலை வென்று வந்தும்
திரவியங்கள் கொண்டு வந்தும்
இந்தச் சிறு குடிசை,
இரண்டு பிடி சோறு,
தோணி உடையான்
தரும் பிச்சை என்கின்ற
கோணல் நினைப்பு,
பெருமூச்சு.

தானாய் விடிவெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்
வாழ்வில் இருள் தொடரும்





,

எழுதியவர் : வ,ஐ,ச. ஜெயபாலன் (26-May-14, 1:44 am)
சேர்த்தது : கவித்தாசபாபதி
பார்வை : 88

மேலே